குழந்தைகளின் கைகளில் ஆதிவாசிகளின் வாழ்க்கை !
குழந்தைகளின் உலகில் ஆதிவாசிகள்
பாடப்புத்தகங்களைக்
கடந்து குழந்தைகளின் ரெயின்போ உலகில் சாக்லெட் ரயிலில் பயணிப்பதாக பால்யத்தை மாற்றுவது
பேன்டசியோடு எளிய நீதிகளையும் தன்னுள் புதைத்துள்ள குழந்தை நூல்களே. தற்போது குழந்தைகள்
நூலில் தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களை குறித்த உண்மைகள் உள்ளனவா என்று இந்தியா முழுக்க
வெளிவரும் நூல்களை ஆராய்ந்ததிலிருந்து தொடங்குகிறது இக்கட்டுரை.
"அநீதிக்கும்
அடக்குமுறைகளுக்கும் எதிரான உண்மைகளை கதைவடிவில்
பதிவு செய்வது காலத்தின் அவசியம்" என அக்கறைச்சொற்களில் பேசும் ரூபி ஹெம்ப்ரோம்
ஆதிவாசி மக்களுக்கான தனித்துவ தகவல்களை பதிப்பிக்கும் 2014 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆதிவாணி பதிப்பக நிறுவனர். இந்தியாவில்
ஆங்கில குழந்தைகளின் இலக்கியத்தில் ஆதிவாணி பதிப்பக நூல்களில்தான் 'சந்தால்' மொழி வார்த்தைகள்
முதல் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
1855
ஆம் ஆண்டில், பழங்குடிகள் ஜமீன்தார்களோடு நடத்திய புரட்சிப்போரினை விவரிக்கும் காட்சியில்
ஓவியர் சாகேப் ராம்துடுவின் கைவண்ணம் மிளிர்கிறது. We come from the geese, Rests
on tortoise ஆகிய நூல்களின் ஆசிரியரான ஹெப்ரோமின் கதையில் வரும் சிதோ, கன்கு இருவரும்
எதிரிகளிடம் பிடிபட்டு இறக்கும் காட்சி நெஞ்சில் கனல் மூட்டுகிறது. பாலுறவு, பேன்டசி
என்பவை கடந்து 'டைஸைபோன் ஹல்' நூல் அரிய நேரடி
அரசியலை நம்முன் வைப்பது புதுமை. ரூபி ஹெப்ரோம்.
எளிய மொழியில் சந்தால் மக்களின் புராணக்கதைகளை கூறும் இடம், குழந்தைகளின் கற்பனைக்கோட்டைகளை
திறக்கும் தங்கச்சாவி. ஆதிவாணியைப் போலவே ஆஸ்திரேலியாவின் மகாபாலா புக்ஸ், கனடாவின்
தேடஸ், அமெரிக்காவின் பார்ச்பார்க் புக்ஸ் ஆகிய பதிப்பகங்கள் உள்நாட்டு தொல்குடிமக்களின்
கதைகளை குழந்தைகளின் நூலாக பதிப்பித்துள்ளன. ஆதிவாசி மனிதர்களுக்கு கிடைக்கும் இடம்
கூட தலித்துகளுக்கு இந்நூலில் இல்லை என்பதே இதில் குறை.
மெல்லிய ஹேண்ட்மேட் தாளில் அழகிய வேலைப்பாடுகளோடு
குழந்தைகளின் மனதை கொள்ளையடிக்கும் விருதுகள் வென்ற நிறுவனமான தாராபுக்ஸ், சிறார் இலக்கியத்தில்
தவிர்க்கமுடியாத பெயர். இந்தியாவின் தொல்குடிகளான ஆதிவாசிகளைப் பற்றி அக்குடியின் கலைஞர்களின்
மூலம் அதனை வடிவமைத்து ஜெர்மன், ஸ்பானிஷ், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டு
வருகிறது பெருமை என்றாலும், இந்தி, மராத்தி, பெங்காலி மொழிகளை ஏன் கண்டுகொள்வதில்லை
என்பது புதிர். பல்வேறு ஆதிவாசி இன ஓவியர்கள், எழுத்தாளர்களோடு இணைந்து பணியாற்றும்
தாராபுக்ஸ் நிறுவனம், நூலின் இறுதிக்குறிப்புகளை எழுத கதை எழுத்தாளர்களை அனுமதிப்பதில்லை.
இதன் 'Gobble up' என்ற நூலை எழுதியுள்ள மீனா இனக்குழுவின் மந்தனா ஓவியக் கலைஞரான சுனிதா,
தன் தாத்தாவிடமிருந்து இக்கதையை வாய்வழியாக கேட்டு அழகிய வண்ண நூலாக்கியிருக்கிறார்.
தூளிகா நிறுவனத்தின் நூல்களில் எழுத்தாளரின் பெயருக்கு
பின்னரே மொழிபெயர்ப்பாளரின் பெயர் என்பதோடு, மற்றொரு ஆச்சரியமாக முழுக்க முழுக்க பெண் கதாநாயகிகளையும்
மட்டுமே வெற்றிகரமாக அறிமுகப் படுத்தியிருப்பதற்கு ஸ்பெஷல் பூங்கொத்து. 'Magical fish' என்ற நூலில்தான் இந்த மேஜிக். இதில்
துகாரியா என்ற பெண் தேடிச்செல்லும் மாய மீன் கூட பெண்தான். சகுந்தலா குஷ்ராமின் ஆத்மார்த்த
ஓவியங்களில் அழகு கொஞ்சும் பெண்கள் நெஞ்சிலே இலவம்பஞ்சு இதம். A bhill story நூலில்
ஷேர்சிங்கின் கதை நேர்த்தி வியக்கவைத்தாலும், கேரக்டர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான
இடம் மிகக் குறைவு. முதிய பெண், கிராமத்தை வழிநடத்துவதாக செல்லும் கதையில் விலங்குகள்
மக்களுக்கு இயற்கை குறித்து வழிகாட்டுவது அமர்க்களம். காட்சிகள் பனோரமா வடிவில் தகவல்களை
துல்லியமாக்குகின்றன.
2014 ஆம் ஆண்டு பிரதாம் நிறுவனம் முண்டா, சவுரா,
ஜூவாங்கா, குய் ஆகிய பழங்குடி மக்களிலிருந்து 5 கல்வியாளர்களைத் தேர்ந்தெடுத்து விவாதித்து
10 குழந்தைகள் படக்கதை நூல்களை பல்வேறு மொழிகளில் வெளியிட்டு மாஸ் வெற்றியில் மிரட்டியது.
ஒரியா, இந்தி, ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் நூல்களை வெளியிடும் பிரதாம், சவுரா சுவரோவிய
ஸ்டைலை தன் நூல்களில் பயன்படுத்துகிறது. The elephands who liked to dance நூலில் சுண்டெலி காதுகளோடு நடந்து வரும் யானைகளின்
அழகு அதகளம். மொழிபெயர்ப்பு முன்பின் என்றாலும், ஓவியங்களின் மனம் கவரும் வசீகரத்தில்
தரமான இந்நூல்களின் விலை ரூ. 35 தான்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலுள்ள பழங்குடி
மக்களிடையே ஏராள பிரிவுகளுண்டு. வாய்மொழியான கதைகளும் எக்கச்சக்கம். அம்மாநிலங்களிலிருந்து
இடம்பெயர்ந்து பல்வேறு மாநிலங்களில் வாழும் மக்கள் அதிகம். இவ்வகையில் Once upon a
moontime என்ற மாமங்தாய் எழுதிய நூல் மற்றும் U sier lapalany என்ற கின் டாம் சிங் நோன்கின்ரியின் நூலையும் குறிப்பிடலாம்.
கதா, ஏகலவ்யா, பிரதாம் ஆகிய நூல் நிறுவனங்கள் தம் வர்த்தக நோக்கம் கடந்து குழந்தைகளின்
கல்வி வளர்ச்சியை ஆர்வத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகின்றன. கதா, ஏகலவ்யா ஆகிய
நிறுவனங்கள் இந்தி, ஆங்கிலத்திலும், பிரதாம் நிறுவனம் பல்வேறு மொழிகளிலும் தம் நூல்களை
வெளியிட்டு வருகின்றன. மேற்கண்ட நூல் நிறுவனங்கள் தம் வணிகசூழலிலும் குழந்தைகளின் கல்விக்காக
முனைப்பாக செயல்படும்போது, கல்வி மேம்பாட்டு என்ஜிஓக்கள் எளிய தலித் எழுத்தாளர், ஓவியர்
ஆகியோருடன் இணைந்து நல்ல குழந்தைகள் நூல் எதனையும் உருவாக்கி குழந்தைகளுக்கு வழங்குவதில்லை
என்பது வேதனை.
பெரும்பாலான கதைநூல்களில் நாயகர்களான குழந்தைகள்,
எதிர்பாராத முடிவுகளை சந்திப்பது என்பது மிகவும் அரிது. அப்படி இருந்தால் அது வயது
வந்தவர்களுக்கானது. இவ்வகையில் Under the neem tree என்ற அனுராதாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு
நூல் குறிப்பிடத்தகுந்தது. குழந்தைகளின் நூலில் அரசியலுக்கும் பஞ்சமில்லை. அமெரிக்காவின்
புகழ்பெற்ற பதிப்பு நிறுவனமான ஸ்காலஸ்டிக் 2016 ஜனவரி மாதம், A birthday cake for
George Washington - Ramin ganeshram என்ற நூலை தவறான வரலாற்றை குழந்தைகளுக்கு கூறுகிறது
என சமூக வலைதளங்களில் பலரும் கொந்தளித்து விமர்சனம் எழுத மன்னிப்பு கோரி, தன் நூலை
அமெரிக்க சந்தையிலிருந்து திரும்ப பெற்றது முக்கிய நிகழ்வு. அந்நூலில் அமெரிக்க முதல்
அதிபரான ஜார்ஜ் வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் சமையல்காரராக பணிபுரிபவருக்கும், அவரது
மகளுக்கான விஷயங்களே கதை.
அக்காலகட்டத்திலிருந்த கருப்பின அடிமை முறையை மகிழ்வுடன்
அவர்கள் ஏற்பது போன்ற கதையின்போக்கு கடும் கண்டனத்துக்குள்ளாக, " உலகம் முழுக்க
பல்வேறு வகையான இனக்குழு பின்னணி சார்ந்த குழந்தைகளுக்கு பொருந்தும் வகையில் இனி எங்கள்
கதைத்தேர்வு அமையும்" என ஸ்காலஸ்டிக் அறிக்கை வெளியிட்டு சமாளித்தது. இந்த அறிக்கையையும்
பென் புத்தக நிறுவனம் ஆட்சேபித்தது தனிக்கதை.
உலகளவில் தலைசிறந்த இந்நிறுவனம் தலித் மக்கள் குறித்த எந்த குழந்தைகள் நூலையும் இதுவரை(நவம்பர்
2016) வரை வெளியிடவில்லை. ஏன் இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனங்களான பென்குயின், ஹசெட்,
கரடிடேல்ஸ், டக்பில், சூபான், டிசி/மாங்கோ புக்ஸ் ஆகிய நிறுவனங்களும் இதுவரை தலித்
மற்றும் ஆதிவாசி மக்கள் குறித்த குழந்தைகள் நூலை வெளியிட்டதில்லை என்பதை என்ன சொல்ல?
1980 க்கு முன் இந்தியாவில் படக்கதை நூல்கள் குறைவு.
இன்று பதிப்பகங்கள், இணையம் என குவிந்திருக்கும் குழந்தைநூல்கள் ஏராளம். பேன்டசிகள்
கடந்து உண்மையான மனிதர்களாக ஆதிவாசிகள், தலித்துகள் குறித்த நிஜங்களை குழந்தைகள் அறியாதபோது
நிஜ இந்தியாவை என்றுமே அவர்கள் தரிசிக்க முடியாது. தம் வரலாற்றை அறியாதவர்களுக்கு முன்பு
நிகழ்ந்த அவலங்கள் மறுமுறை நிகழும்போது அதனை புரிந்துகொள்ளவோ, போரிடவோ மறுவாய்ப்பு
கிடைக்காது வரலாற்றின் செய்தியும் கூடத்தான்.
-ச.அன்பரசு
பாக்ஸ்
1
இந்தியாவின்
முன்னணி புத்தக நிறுவனங்கள் - தூளிகா(தொ.வி. ரூ.50), தாரா(தொ.வி. ரூ.150), கரடிடேல்ஸ்(தொ.வி.
ரூ.175), கதா(தொ.வி. ரூ.80), லிட்டில் லாட்டிடியூட்(தொ.வி. ரூ.375), ஏக்லவ்யா(தொ.வி.
ரூ.25), பிரதாம்(தொ.வி. ரூ. 35), கல்பவிரிக்ஷ்(தொ.வி ரூ.100), பிக்கிள் யாக்(தொ.வி.
ரூ.300), யங் சூபான்(தொ.வி ரூ.120), ரெட் டர்ட்டில்(தொ.வி ரூ.150), டக்பிள்(தொ.வி ரூ125),
சீகல்(தொ.வி. ரூ75)
பாக்ஸ்
2
புத்தகச்சந்தையில்
இந்தியாவின் இடம் - 6
இந்தியாவிலுள்ள
மொத்த இளைஞர்களின் அளவு - 8.3 கோடி(நான்கில் மூன்று பேர் கல்வியறிவு உள்ளவர்கள்)
2020
இல் இந்தியாவின் கல்வியறிவு வளர்ச்சி- 90%
2012-2015
இந்திய புத்தக பதிப்புத்துறை மதிப்பு - 26,060 கோடி(20.4%)
இந்திய
பதிப்பாளர்களின் எண்ணிக்கை - 9,037(ISBNபடி)
கல்வி
நூல்களின் சந்தை வளர்ச்சி - 70%
பள்ளி
நூல்களின் மதிப்பு(2013-2014)- 18,600 கோடி, 5,600 கோடி (உயர்கல்வி நூல்கள்),
1,860 கோடி(வணிக நூல்கள்)
இறக்குமதி
நூல்கள் வளர்ச்சி(2010-2015) - 18.9%, 10.3%(ஏற்றுமதி)
நூல்களின்
விற்பனை - இந்தி(35%), பிற மொழிகள்(45%) ஆங்கில வணிக புத்தகங்கள்(55%)
(2009 Nielsen youth survey, Nielsen global
book market survey(2015, caravanmagazine.in))
-ச.அன்பரசு