பத்திரிகையில் வேலை கிடைச்சிருச்சேய்! - பதிப்பக பணி






typewriter!







மனமறிய ஆவல் - கடிதங்கள்


பத்திரிகையில் வேலை என்பது கடைசி புகலிடமாக இருக்கும் என நினைத்தேன். காரணம், நாவல்கள் படித்தாலும் அது பற்றி எழுதினாலும் சரி அது மற்றவர்களுக்கு தெரிய பத்திரிகைதான் ஒரே வழி. இன்று ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று வந்தாலும் அன்று எனக்கு அதில் ரெஸ்யூம் அனுப்பி வேலை வாங்கும் யுக்தி தெரியவில்லை.

சிறுபான்மை இதழ் ஒன்றில் தட்டச்சு செய்பவனாக வேலை செய்துகொண்டிருந்தேன். எழுதுபவனுக்கு தட்டச்சில் என்ன வேலை? மூத்த பெண் இதழியலாளர் ஒருவரின் நட்பு கிடைத்தது. அதுவும் சென்னையில் கோட்டூர்புரத்தில் நேர்காணலுக்கு சென்றபோதுதான். எப்போதும் போல நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கு முன்னும் பின்னுமான நான்லீனியரில் பதில் சொல்லியதில் அவர்களே ஒரு காஃபி எனக்கும் மட்டும் என ஆர்டர் செய்து குடித்துவிட்டு நீங்கள் கிளம்புங்கள் என அனுப்பி விட்டார்கள். பிறகு இரு மாதங்கள் கழித்து எனக்கு போன் செய்து இப்படி இதழ் ஒன்றில் வேலை செய்கிறீர்களாக என்று கேட்டார்.

சரி என்றேன். அப்புறம் கிடைத்ததுதான் தட்டச்சுப்பணி. வேலை, ஆசிரியர் என இரண்டுமே சரியில்லைதான். ஆனால் அலுவலகத்தில் இருந்த நூல்கள் சொர்க்கம் போல இருந்தன. ஏராளமான சமூக சீர்திருத்தவாதிகளின் நூல்களைப் பார்த்தேன். சிலவற்றை எடுத்துப் படித்தேன். சம்பளம் ஏழாயிரம் ரூபாய்தான். இதழ் செல்லும் வேகத்தைப் பார்த்தால் அதுவே கைக்கு கிடைக்குமா என்று தோன்றியது. அப்போதுதான் இது வேலைக்காகாது என்று சில பத்திரிகைகளுக்கு ரெஸ்யூம் அனுப்பி வந்தேன். அதில் என்னை அழைத்தவர்தான் நவநீதன்.

குங்குமம் இதழின் தலைமை உதவி ஆசிரியராக பணியாற்றி இன்று தந்தி டிவியில் உள்ளார். அவர்தான் என்னை நேர்காணலுக்கு அழைத்தார். அதன்பின்னர்தான் வேலையில் துலக்கம், எழுதுவது பற்றிய தெளிவு எல்லாம் கிடைத்தது. மதிப்பிற்குரிய முன்னாள் குங்குமம் இதழ் ஆசிரியரான தி.முருகன் என்னைத் தேர்ந்தெடுத்தார். மன உளைச்சலாகட்டும், மனமகிழ்ச்சியாகட்டும் அத்தனையிலும் நான் முருகானந்தம் அவர்களுக்கு கடிதம் எழுதி வந்தேன.



6
14.3.2013

அன்புள்ள நண்பர் முருகு அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? தினகரன் நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது. முரசொலி மாறன் தொடங்கிய முத்தாரம் இதழில் வேலை. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாரேனும் இருந்தால் அறிவியல் தொடர்பாக எழுதி அனுப்பக் கூறுங்கள். பிரிசுரிக்க பரிந்துரைப்பது எனது பொறுப்பு.


பதிப்பகம் சார்ந்த பணிகளிலும் என்னை ஈடுபடுத்தியிருக்கிறார் ஆசிரியர். பரபரவென வேலைகள் தொடங்கிவிட்டன.
மன்மதக்கலை -நாராயணரெட்டி, கங்கையிலிருந்து கூவம் வரை - யுவகிருஷ்ணா, மனசே மனசே - சித்ரா அரவிந்த் என மூன்று நூல்களை ஏறத்தாழ தயாரித்துவிட்டோம். இதன் கூடவே அழியாத கோலங்களின் (சாருஹாசன்) நூலும் ஏறத்தாழ பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது. கல்வெட்டு சொல்லும் கதைகள், பெண்களுக்கு புதிய தொழில்களும் நூலும் தயாரிப்பில் உள்ளன. இவையெல்லாம் விரைவில் சூரியன் பதிப்பகத்தில் விலைக்கு வரும் புதிய வெளியீடுகள்.

பதஞ்சலி கடை  கச்சேரி சாலையின் அருகில் உள்ளது. கோமியத்தில் செய்த சோப் என்று ஒரு ஐட்டத்தை வைத்திருந்தார்கள். உடலின் கழிவை சோப்பில் கலந்து குளிப்பதால் என்ன பிரயோஜனம்? விலங்கு கொழுப்புதான் சோப்பு என்பதில் தெளிவு உள்ளது. அதோடு போதும். ஆனால் பிற பிராண்டுகளை விட அநியாய விலை குறைவு. எப்படி சாத்தியமாகிறதோ?

எதேச்சையாக வட இந்திய நிறுவனங்கள் மற்றும் வருமான வரித்துறை விளம்பரங்களைப் பார்த்தால் சிரித்துவிடுவீர்கள் சில நேரம் நேரடியான இந்தியை அப்படியே தமிழில் எழுதிவிடுகிறார்கள். அது எப்படி யாருக்கு புரியும் என்று நினைத்து எழுதுகிறார்கள். இந்து தமிழ்திசை நன்றாக எழுதிவிட்டார்கள். ஆனால் தினகரன் பத்திரிகையில் குழப்பிவிட்டார்கள்.

ஆங்கிலம் அல்லாமல் இனி இந்தியில்தான் தமிழில் விளம்பரம் என்றால் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமலா நாளிதழ் இயங்குகிறது  என்று சந்தேகமாகிறது. அரசுக்கு உண்மையில் தன்னுடைய திட்டம் சரியானபடி மக்களைச் சென்று சேரும் அக்கறை இருக்கிறதா இல்லையா? இனி ஒரு வார்த்தை பேசினாலும் நான் தேச துரோகி ஆகிவிடுவேன். சந்திப்போம். நன்றி

ச.அன்பரசு