பாம்பே சட்னி மூலம் வாழ்க்கையில் முன்னுக்கு வரும் இளைஞன்! - மிடில் கிளாஸ் மெலடிஸ் -தெலுங்கு 2020
மிடில்கிளாஸ் மெலடிஸ்
அமேசான் பிரைம்
கிராமத்தில் சின்ன சாப்பாட்டுக்கடை நடத்தி வருகிறார் கொண்டல ராவ். இவரின் மகன் ராகவன். ராகவனுக்கு கிராமத்தை விட குண்டூர் நகரத்திற்கு என்று ஹோட்டல் திறப்பதுதான் லட்சியம். எப்படி இதனை சாதிக்கிறார் என்பதான் மையக் கதை.
படத்தின் ஆத்மாவே, இதில் நடித்துள்ள நடிகர்களின் நடிப்புதான். அனைவருமே நாம் தினசரி சாலையில் நடந்துசெல்லும்போது பார்க்கும் மனிதர்களாகவே இருக்கிறார்கள். கிராமத்தில் வாழும் மனிதர்கள், பிரச்னை என்று வரும்போது ஒருவருக்கொருவர் எப்படி உதவிக்கொள்கிறார்கள், அப்பா, மகன் இருவருக்குமான பாசம், உறவினர்களின் சுயநலம், ஹோட்டலில் சந்திக்கும் சவால்கள் என படம் அவ்வளவு யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது.
துரைசானி படத்தை விட ஆனந்த் தேவர்கொண்டா இந்த படத்தில் நிறையவே நடிப்பில் முன்னேறியிருக்கிறார். வர்ஷா பொல்லம்மாவின் உடலை விட கண்களே அதிகம் நடிக்கின்றன. இதில் பாவா என்று சொல்லும்போது அவரின் முக உணர்ச்சிகள் அசரடிக்கின்றன.
படத்தில் பெரும்பாலும் நமது கவனத்தை தன்னிடமே வைத்துக்கொண்டிருப்பவர், ராகவனின் அப்பாவாக வரும் கொண்டல ராவ்தான். காலையில் ஊரையே எழும்பும்படி மகனை திட்டிக்கொண்டே வேலையை செய்வது, ஒருவேலையை உருப்படியாக செய்வதில்லை என்பவர், மகனின் நகருக்கு சென்று ்ஹோட்டல் தொடங்கும் செய்தியைக் கேட்டு கொந்தளிப்பது, பின்னர் அதைப் புரிந்துகொண்டு உதவுவது, சீட்டுப்பணம் ஆறு லட்சத்தை இழந்து பொருமுவது, இறுதியில் ராகவன் செய்த சட்னியை சாப்பிட்டுவிட்டு சந்தோஷப்பட்டு நன்றாக கஷ்டப்படு என சொல்லி வாழ்த்துவது என நடிப்பில் அசத்தியிருக்கிறார்.
உணவு சார்ந்த மைய இழை படத்தின் முக்கியமானது. அம்மா சொல்லிக்கொடுத்த பாம்பே சட்னியை ராகவன் தானாக உணர்ந்து மேம்படுத்தி தன்மீது நம்பிக்கை கொள்ளும் காட்சி அருமையாக எடுக்கப்பட்டுள்ளது. சிறுநகரம் சார்ந்த கதையை அருமையாக எடுத்து ஏராளமான மனிதர்களின் வாழ்க்கையை உள்ளே கோர்த்து கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். எதுவுமே மிகையின்றி அமைந்திருப்பதுதான் படத்தின் முக்கியமான பலம்.
இனிக்கும் மெலடி
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக