பகடை காய்களாக உருளும் மனிதர்களின் வாழ்க்கை! - லூடோ - அனுராக் பாசு
லூடோ
இயக்கம், கதை, திரைக்கதை ஒளிப்பதிவு, தயாரிப்பு
அனுராக் பாசு
இப்படி ஒருவரே அனைத்தும் செய்வதால் படம் நன்றாக இருக்குமோ என பலரும் நினைப்பார்கள். ஆனால் படம் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கிறது. நான்கு கதைகள். நான்கு ஜோடிகள். அவர்களின் வாழ்க்கை சிக்கலுக்கு உள்ளான நூல்கண்டு போல குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது. இதனால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்கள்தான் கதை.
அனைவரின் வாழ்க்கையிலும் வரும் முக்கியமான கதாபாத்திரம் சட்டு(பங்கஜ் திரிபாதி). வைரத்தை வைத்துள்ள பில்டர் பிந்தரை போட்டுத்தள்ளிவிட்டு ஓ பேட்டாஜி பாடலைக் கேட்டுக்கொண்டே தன்னுடைய ஏரியாவுக்கு வருகிறார். இவர்தான் கதையின் மையப்புள்ளி. இவரிடம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வேலைபார்த்து காதல் செய்துகொண்டு ஒழுங்காக திருந்தி வாழ நினைத்தவன் பிட்டு. சட்டுவின் வலது கரமாக விளங்கியவன். அவனை போலீசில் பணம் கொடுத்து ஆறு ஆண்டுகள் உள்ளே தள்ளுகிறான். இதனால் பிட்டுவின் காதல் வாழ்க்கை நாசமாகிறது. மனைவி தாலியை சிறைக்கு வந்து கழற்றி எறிந்துவிட்டு செல்கிறாள். அவர்களது குழந்தைக்கு அவனை யார் என்றே சொல்லாமல் வளர்க்கிறார்கள்.
சட்டு பிட்டுவை விடுவதாக இல்லை. 90 லட்சம் தரச்சொல்லி மிரட்டுகிறான். அதற்காக ரூஹி என்ற அழகுக்கலை நிலையத்தை நொறுக்குகிறான். பிட்டு மனைவியை பார்க்க வந்தால், அவள் அவனின் நண்பனை திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்கிறாள். மகளைப் பார்க்கலாம் என்றால் அவன்தான் அப்பா என்று அவளிடம் கூறவில்லை என்கிறான் முன்னாள் மனைவி. பிட்டுவால் தங்களது வாழ்க்கை நாசமாகிக்கொண்டிருக்கிறது. பணத்தை கொடுத்தால் தனது கணவன், மகள், நான் என எல்லோரும் நன்றாக இருப்போம் என கெஞ்சுகிறாள் முன்னாள் மனைவி. பிட்டு என்ன முடிவெடுத்தான்?
ஆகாஸ் உணவகங்களில் ஜாலியான காமெடிகதைகளை சொல்லுபவன். அவன் முன்னாள் காதலியும் அவனும் செக்ஸ் வைத்துக்கொள்ளும் வீடியோ ஒன்று கில்மா இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது. காதலிக்கு அடுத்த ஒரு வாரத்தில் கல்யாணம். போலீசில் புகார் கொடுக்க சென்றால், காதலிதான் வந்து புகார் கொடுக்க முடியும் என்கிறார்கள். இதனால் அவர்கள் சட்டுவிடம் வருகிறார்கள். அவனும் பணம் வாங்கிக்கொண்டு உதவி செய்வதாக சொல்லுகிறான். அதேசமயம், பில்டர் பிந்தரை கொலை செய்யும்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த ராகுல் என்ற இளைஞரும் அங்கிருக்கிறார். அவர் செய்த கோளாறால் சட்டுவின் ஆபீஸ் முழுக்க வெடித்து சிதறுகிறது. அங்கு ராகுலுக்கு சிகிச்சை செய்ய வந்த நர்ஸ் ஸீஜாவும் ராகுலும் பணத்துடன் எஸ்கேப் ஆகிறார்கள். அவர்களை சட்டு பிடித்தானா என்பது மற்றொரு கதை.
பிந்தர் கொலையான இடத்தில் ஆலுவின் பள்ளி கால காதலி பிங்கியின் கணவன் இருக்கிறான். இதனால் அவன்தான் அக்கொலைக்கு காரணம் என போலீஸ் சொல்லுகிறது. ஆனால் அவன் அங்கு சென்றது கள்ளக்காதலி மீது குதிரையோட்ட. இதனால் பிங்கி தனது பள்ளிப்பருவ காதலும் முன்னாள் பிக்பாக்கெட் வல்லுநருமான ஆலுவிடம் வருகிறாள். ஆலுவைப் பொறுத்தவரை தினசரி பிங்கியைப் பார்த்துவிட்டு வந்துதான் தனது ஓட்டல் தொழிலை செய்வான். அந்தளவு குறையாத ஒருதலைக்காதல் பிங்கி மீது. இத்தனைக்கும் அவள் திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றுஇருக்கிறாள். காதல் தினசரி பெருகுவதை அவனால் தடுக்கவே முடியவில்லை. பிங்கியின் கணவனைக் காப்பாற்ற ஆலு செய்யும் முயற்சிகள் மற்றொரு கதை.
அவல நகைச்சுவையான காட்சிகள் படத்தில் நிறைய உண்டு. பாடல்கள், இசை என அனைத்துமே பிரமாதமாக இருக்கின்றன. படத்தில் அபிஷேக் பச்சன் பாத்திரம் சிலருக்கு உறுத்தலாக தோன்றலாம். காரணம், பிறருக்காக தன்னைத் தியாகம் செய்யும் பாத்திரம் இது. ஆலுவின் பாத்திரமும் இதற்கு ஒத்த துதான். காதலிக்காக செய்கிறோம். ஆனால் அவளுக்கு அந்த காதல் புரியவில்லை என்ற வலியும் சந்தோஷமுமாக வாழும் பாத்திரம் இது. ஆகாஷின் பாத்திரத்தைப் பொறுத்தவரை கையில் பெரியளவு காசில்லை. ஆனால் சந்தோஷமாக காதலித்தபடி வாழ வேண்டும். அவனோடு செக்ஸ் வைத்துக்கொள்வதே போதும். கல்யாணம் என்றால் காசு உள்ளவனோடுதான் என்னும் ஷ்ருதி வேற லெவல். ராகுல், ஸீஜா என்ற இருவரைப் பொறுத்தவரை பணம் கிடைத்தால் நினைத்தபடி வாழலாம். அவ்வளவுதான். அப்படித்தான் தொடக்கத்திலும் நினைக்கிறார்கள். இறுதியிலும் அதேபோலத்தான் வாழ்கிறார்கள்.
பிட்டு பாத்திரம் தன்னால் உண்டான பாதிப்பை தானே சரிசெய்து உயிரை விடுகிற தன்மையில் உள்ளது. அவரது மகளை பார்க்கமுடியவில்லை. பார்த்தாலும் அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் 90 லட்சத்திற்காக சிறுமியை கடத்தி வைத்திருக்கும்போது, தன் மகளைப் போலவே அவளுடன் விளையாடி மகிழ்கிறான். ஆடுகிறான், பாடுகிறான். ஏறத்தாழ இறப்பவனுக்கு மனதில் உள்ள ஒரே ஏக்கத்தை தீர்ப்பது போலவே இப்பாத்திரத்தின் வாழ்க்கை இருக்கிறது. இப்படத்தை பார்க்கும் சிலருக்கு இப்படி ஒருவருக்கு வாழ்க்கை இருக்குமா, ரொம்ப நாடகத்தனமாக இருக்கிறதே என்று தோன்றும். ஆனால் வாழ்க்கை எல்லோருக்கும் நினைத்த விஷயங்களை கொடுப்பதில்லையே?
பகடை - உருளும் வாழ்க்கை
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக