விமான விபத்தில் குடும்பத்தை கொன்ற தீவிரவாதிகளை உணர்ச்சிவசப்படும் பெண் பழிவாங்க முடியுமா? தி ரிதம் செக்ஷன் 2020
Director:Reed Morano
Produced by:Barbara Broccoli, Michael G. Wilson
Writer(s):Mark Burnell
ரெகுலரான பழிக்குப்பழி கதைதான். பழி வாங்குபவள் கொஞ்சம் மனிதநேயம் பார்த்து இறப்பவனுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள் என நினைத்துப் பார்த்து கண்ணீர் விடுபவளாக இருந்தால்.... அதுதான் தி ரிதம் செக்ஷன் படத்தின் கதையும் கூட.
பிளாக் லைவ்லி(ஸ்டெபானி), ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவி. அவளது அன்பான குடும்பம் விமானத்தில் பயணிக்கிறது. ஆனால் அதில் பிளாக் லைவ்லியால் பயணிக்க முடியவில்லை. அதேசமயம் அந்த விமானம் வெடிகுண்டு வைத்து வெடிக்க வைக்கப்படுகிறது. இதில் அதில் பயணித்த அத்தனை பேரும் இறந்துபோகிறார்கள். ஆனால் இதனை செய்த யூ17 என்பவனுக்கு எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. அவனுக்கு எதிராக தடயங்கள் இல்லை என சிஐஏ கைவிரித்து விடுகிறது.
குடும்பம் ஒட்டுமொத்தமாக இறந்துபோனதால், தவிக்கும் ஸ்டெபானி மனமுடைந்து போதைக்கு அடிமையாகிறாள். விபசாரம் செய்து வருகிறாள். எல்லாம் பிழைத்திருக்கத்தான். அவளது குடும்பத்தின் திடீர் இழப்பை அவளால் தாங்க முடிவதில்லை.
அப்போது அவளை சந்திக்கும் செய்தியாளர் அவளுக்கு விமான வெடிப்பு பற்றிய பல்வேறு செய்திகளை சொல்கிறார். இதனால் தனது குடும்பத்தை கொன்றவர்களை பழிவாங்க முடியும் என ஸ்டெபானி நம்புகிறாள். உண்மையில் அவள் அதனை செய்தாளா, இல்லை கண்ணீர் விட்டு கரைந்தழுது நின்று தடுமாறினாளா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் முக்கியமான பலமே பிளாக் லைவ்லியின் பாத்திரம்தான். பலவீனமான பெண், உணர்ச்சிகளால் உந்தப்பட்டு ஒவ்வொரு விஷயங்களையும் செய்பவள். இவள் எப்படி கொலைகாரர்களை, தீவிரவாதிகளை எதிர்கொண்டு அவர்களை தீர்த்துக் கட்டுவாள் என்ற சந்தேகம் படத்தின் இறுதிவரை பார்வையாளர்களுக்கு இருக்குமாறு படத்தை எடுத்துள்ளார்கள்.
ஒரே நேரடியான பாதையில் செல்லும் கதை என்பதால் எளிதில் சலிப்பு வர வாய்ப்புள்ளது. பொறுமை காத்தால்தான் படம் பார்க்கமுடியும். கவனமாக பார்க்க முடிந்தால் பார்க்கலாம்.
இறுதியில் யூ17 யார் என்பதை கண்டுபிடித்து கொல்வதுதான் படத்தின் முக்கியமான ட்விஸ்ட். அதற்காக பிளாக் லைவ்லி தனது உடலையே ஆயுதமாக பயன்படுத்துகிறாள்.
நிதானமாக பழிக்குப்பழி வாங்கமுடியும்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக