ஜோபைடன் வெற்றி பெற்றதற்கான காரணங்கள் என்ன?
அமெரிக்க தேர்தலை முழு உலகமே உன்னிப்பாக கவனித்து வந்தது. காரணம், வல்லரசு நாடு என்பதும் ராணுவ பலம் பொருந்தியதும் என்பதுதான். அதையும் தாண்டி இனவெறியை அதிகரித்து அதிபர் டிரம்ப் செய்த செயல்களை அமெரிக்கர்கள் மட்டுமல்ல அந்நாட்டை எதிர்க்கும் நாடுகள் கூட ரசிக்கவில்லை.
டிரம்ப் தனது ஆட்சிகாலத்தில் செய்த உபகாரம், பெரு நிறுவனங்களுக்கான வரிச்சலுகைதான். பொருளாதாரம் பெரியளவு சிக்கலை சந்திக்கவில்லை. ஆனால் மற்ற அனைத்து விஷயங்களிலும் அமெரிக்கா தனது இடத்தை இழந்தது. குறிப்பாக ஆப்கானிஸ்தானுக்கு ராணுவத்தை அனுப்பிய விவகாரம், பிற நாடுகளுடனான உறவு, பாரிஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து விலகியது, பொருளாதார போர் ஏற்படும்படியான பல்வேறு தடைகளை பிற நாடுகளுக்கு விதித்தது. மேலும் இந்தியர்கள், சீனர்கள் உள்ளிட்ட பிற நாட்டினரால் பெற்ற பயன்களை மறந்து அவர்களுக்கு விசா கெடுபிடிகளை இறுக்கியது என ஏகத்துக்கும் அமெரிக்கா கண்டனங்களை சந்தித்து வந்தது. மேலும் இனவெறியாக நடந்துகொண்டதால் உள்நாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் போராட்டங்களையும் காவல்துறை சந்திக்கவேண்டியிருந்தது.
இப்போது டிரம்ப் தான் செய்த அனைத்து விஷயங்களுக்குமான பயன்களை அவரது மக்கள் மூலமே பெற்றுவிட்டார். முன்னாள் அதிபர் என்ற பெருமையை அவரது நாட்டு மக்கள் அவருக்கு அளித்துவிட்டார்கள். ஜோபைடன் ஜெயிக்கும் அறிகுறிகளை தெரிந்த உடனே சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் அவரது வீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க சென்றுவிட்டனர். விமானத்துறை அமைச்சகம் அவரது வீட்டுக்கு மேல் விமானம் பறக்க கட்டுப்பாடுகளை விதிக்க ஆணைகளை பிறப்பித்துள்ளனர்.
இப்போது டிரம்ப் செய்த தவறுகளை சுருக்கமாக பார்க்கலாம்.
நகரங்கள், குறுநகரங்களிலுள்ள பெண்களை சகட்டுமேனிக்கு ஆபாசமாக பேசி குற்றம் சாட்டினார்.
பெருந்தொற்று பிரச்னையை அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று முக கவசங்களை தூக்கியெறிந்து தேர்தல் பிரசாரம் செய்தார். கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை செய்ய நேரிட்டது. அதன்பிறகும் பத்தே நாட்களில் மீண்டு வந்து நோயெல்லாம் ஒன்றுமே இல்லை என்று பேசி வந்தார். ஆனால் அவரின் மூர்க்கமான பிடிவாதம் காரணமாக 2, 35, 000 மக்கள் நோய்க்கு பலியாகிவிட்டனர்.
இனவெறியை முடிந்தளவு தூண்டிவிட்டு வாக்குகளை பெற திட்டமிட்டார். அதில் ஏற்கெனவே வெற்றி பெற்றவர்தான் டிரம்ப். இதனால் பிளாக் லிவ்ஸ் மேட்டர் இயக்கத்தினர் மாகாணம்தோறும் கிளர்ந்து எழுந்து போராடத்தொடங்கினர். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாக்குகள் நேராக ஜோவுக்கு சென்றுவிட்டன.
வெப்பமயமாதல், சூழல் பிரச்னைகளுக்கு வளர்ந்து வரும் நாடுகளை குற்றம்சாட்டினார் டிரம்ப். எனவே இளைஞர்கள் டிரம்பிற்கு வாக்குகளை செலுத்தவில்லை.
தினசரி டிவிட்டர், நேரடியான பேச்சு என எதிலும் அணுவளவும் உண்மை கிடையாது. வாய்க்கு வந்ததை பேசிவிட்டு திமிராக திரிந்தார். இறுதியில் அவர் தோற்கும் நேரத்தில் கூட தேர்தலே ஊழலாகிவிட்டது என்று கதறினார். ஆனால் மக்கள் யாரும் இதனை காதுகொடுத்துக் கூட கேட்கவில்லை.
ஜோ பைடன் வெற்றிபெறக் காரணங்கள்
நாகரிகமான அரசியலை முன்னிறுத்தினார். அரசியல் சூழ்நிலையை மாற்றுவேன் என்று கூறி வாக்குகளை சேகரித்தார்.
பெண்களின் ஆதரவைப் பெற்ற வேட்பாளர் ஜோ பைடன்தான். குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்க பெ்ண்கள் இவரையே அதிகம் நம்பினர்.
நம்பிக்கையான, அறிவியல் காரணங்களை மையப்படுத்திய ஆளுமை.
மீண்டும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒன்றாக இணைந்து செயல்படும் வாய்ப்பு, அனுசரணையான தன்மை ஜோபிடனுக்கு உண்டு என வாக்காளர்கள் நம்பினர். அமெரிக்கா நான்கு ஆண்டுகளில் இழந்த மரியாதையை, பெருமையை மீண்டும் பெறுவதற்கு ஜோ பைடன் சரியான ஆள் என வாக்காளர்கள் நம்பினர்.
வாக்கு சதவீதம் டிரம்பிற்கும், ஜோபைடனுக்கும் அதிக வேறுபாடு இல்லாததற்கு முக்கிய காரணம், பொருளாதாரம். ஐந்தில் நான்குபேர் பொருளாதாரம் சார்ந்து டிரம்பிற்கு வாக்களித்தனர்.
தேர்தலே பொய், மறு வாக்கு எண்ணிக்கை என்றெல்லாம் டிரம்ப் பேசியதை ஊடகங்களே ரசிக்கவில்லை. நேரலையில் சென்ற டிரம்பின் நிகழ்ச்சியை எம்எஸ்என்பிசி, ஏபிசி, சிபிஎஸ் ஆகிய சேனல்கள் உடனே நிறுத்திக்கொண்டுவிட்டன.
கருத்துகள்
கருத்துரையிடுக