மனிதர்களை நம்பாமல் வாழும் இளம் தொழிலதிபர் ரோபோவுடன் காதலில் வீழ்கிறார்! - ஐயம் நாட் எ ரோபோட் - கொரிய சீரியல்
ஐயம் நாட் எ ரோபோட்
30 பிளஸ் எபிசோடுகள்
கிம் பினான்சியல் நிறுவனத்தின் இயக்குநர் கிம் யின் கியூ. தனி மாளிகை ஒன்றில் அலர்ஜி காரணமாக தனியாகவே வாழ்கிறான். பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தனியாக வாழ்க்கை நண்பர்கள் இல்லை. விருந்தினர்கள் இல்லை. அனைத்தும் மெஷின்கள்தான். இந்த நிலையில் அவனுக்கு சான்டா மரியா என்ற ரோபோ நிறுவனத்திடமிருந்து அழைப்பு வருகிறது. மனிதர்களைப் போன்ற உணர்வுகளைக் கொண்ட ரோபோவை தயாரித்துவிட்டோம் என்று. அப்படியா என ஆச்சரியத்தோடு செல்கிறான். பார்த்தவுடனே அஜி3 என்ற ரோபோவை பிடித்து விடுகிறது. அதனை வாங்கிக்கொள்வதோடு அவர்களின் ஆராய்ச்சிக்கும் உதவுவதாக சொல்லுகிறான்.
கிம் பரிசோதனை செய்து பார்ப்பதாக கூறும் நேரத்தில் ரோபோவை அனுப்பி வைக்கமுடியாத தவறு ஒன்றை ஆராய்ச்சியாளர் செய்துவிடுகிறார். இதனால் டாக்டர் ஹான், தனது முன்னாள் காதலி ஜோ ஜியாவை ரோபோ போல நடிக்க கேட்டுக்கொள்கிறார். அஜி3 யின் முகம் கூட ஜோ ஜியாவை மாடல் செய்ததுதான். அந்த நேரத்தில் பணக்கஷ்டத்திலும் தங்க இடம் இல்லாமலும் கஷ்டப்படும் ஜியா அதனை ஏற்கிறாள். கிம்மின் வீட்டுக்கு சென்று நடிக்கத் தொடங்குகிறாள். ஆனால் மெல்ல கிம்மின் வெகுளித்தனமான அன்பினால் ஈர்க்கப்படுகிறாள். காதலில் விழுகிறாள். ஏறத்தாழ மனிதர்கள் என்றால் ஏமாற்றுக்காரர்கள் என நம்பும் கிம் மெல்ல அஜி 3 தான் தனது பெண்தோழி என தீர்மானிக்கிறான்.
இந்த நேரத்தில் கிம் நிறுவனத்தில் அவரது பால்ய தோழன் யூ சூல், அவனது தந்தை சதி செய்து கிம்மை தலைவர் பணியிலிருந்து தூக்கிவிட நினைக்கின்றனர். இதற்கு பல்வேறு வழிகளை ஆராய்கின்றனர்.
அஜி 3 என்ற ரோபோவை சரிசெய்யும்வரையில் ஜியாவை கிம்மிடம் விட்டு வைத்தால் அவர்கள் இருவரும் காதல் வசப்படுவார்களோ என டாக்டர் ஹான் சந்தேகப்படுகிறார். கிம் அதற்கேற்ப, ஜியாவை ரோபோ என நினைத்து தன்னுடைய ரகசியங்களை சொல்லுவதோடு அவளை மனப்பூர்வமாக நேசிப்பதாகவும் சொல்லுகிறான். காரணம் ரோபோ என்ற வரம்புகளை மீறி ஜியா அவனை நேர்மையான குழந்தை போன்றவன் என்பதை ஆழ்மனதில் உணர்கிறாள். கிம், அவளது கண்டுபிடிப்புகளை அவள்தான் உருவாக்கினாள் என்பதை அறியாமலேயே பாராட்டுகிறான். அவளது அண்மை தன்னை சிரிக்க வைக்கிறது. துன்பங்களை மறக்க வைக்கிறது என சொல்ல சொல்ல ஜியாவின் மனம் மெழுகாய் கசிந்து உருகி காதல் கடலில் உறைகிறது.
உண்மையில் கிம் நேசித்த ரோபோ அஜி 3 அல்ல ஜியா என்ற இளம்பெண் என்பதை கிம் கண்டுபிடித்தால், டாக்டர் ஹானின் ஆராய்ச்சி அம்போவென ஆகிவிடுவதோடு அவர்மீது வழக்கும் பாயும். அதேசமயம் ஜியாவை ரோபோவாக நடிக்க வைப்பதை டாக்டர் ஹான் வேறு வழியின்றி ஏற்கிறார். காரணம் ஜியாவை மீண்டும் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த முக்கோண காதல் கரைசேருமா என்பதுதான் இந்த கொரிய சீரியலின் மையம்.
அன்பிற்காக நோயுற்ற ஒருவன் ஏங்கும் ஏக்கம். பணத்தைக் கடந்த மனிதநேயம், காசுக்காக யாரையும் விட்டுக்கொடுக்கும் நேர்மையற்ற மனிதர்கள், உணவும், அக்கறையும் கூட வெளிமனிதர்களை எப்படி பாசக்கார மனிதர்களாக மாற்றுகிறது, நட்பு, காதல், துரோகம், என பல்வேறு விஷயங்களை இந்த கொரிய சீரியல் பிரமாதமாக காட்சிபடுத்தியிருக்கிறது.
நாயகன், நாயகி என இருவருக்குமே யார் எந்தக்காட்சியில் அழகு என போட்டியே வைக்கலாம். நாயகன், நாயகியை விட அழகாக இருக்கிறார் என்பதுதான் சீரியல் பார்ப்பவர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கும். அவர் அணியும் ஆடைகள் அத்தனையும் கொள்ளை அழகு. இறுதிக்காட்சியில் ஜியாவும், கிம்மும் பேசும் வசனங்கள் கண்ணீர் பெருக்குகின்றன. உலகில் அனைத்து உயிர்களும் அன்புக்கும் அங்கீகாரதிற்கும் ஏங்குகின்றன என்பதை நடிப்பும் வசனங்களும் உயிரோட்டமாக்கியுள்ளன.
டன் கணக்கில் காதல்
கோமாளிமேடை டீம்.
கருத்துகள்
கருத்துரையிடுக