கதை சொல்லியாகும் பொறியியல் மாணவனின் போராட்டம்! தமாஷா 2015 - இம்தியாஸ் அலி
Directed byImtiaz Ali
Music by | A. R. Rahman |
---|---|
Cinematography | Ravi Varman |
நம் மனம் சொல்லும் விஷயத்தை செய்வதா, குடும்பம் சொல்லும் சமூக அழுத்தத்திற்கு இடம் கொடுத்து ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதா என்று சொல்லும் படம்.
பிரான்சில் கார்சிகா என்ற நகரில் டான், மோனா டார்லிங் என்ற இருவரும் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பில் மோனா டார்லிங் தனது பாஸ்போர்டை, பேக்கை பறிகொடுத்துவிடுகிறாள். அவளுக்கு டான் உதவுகிறான். அறை, உணவு கொடுத்து அவளை தங்க வைக்கிறான். அவன் அங்கு ஜாலியாக நாடோடி போல தங்கி இருக்கிறான். இருவரும் ஒருவரைப் பற்றி பொய்யை மட்டும் சொல்வது என முடிவு செய்துகொண்டு ஜாலியாக ஒன்று சேர்ந்து திரிகிறார்கள்.
மோனாவுக்கு டான் மீது காதல் ததும்பி வழியும் தருணம் வரும்போது, அவர்கள் பிரிய வேண்டி வருகிறது. பிரான்சிலிருந்து கிளம்பி இந்தியாவின் கொல்கத்தாவிற்கு வருகிறாள் மோனா. ஆனால் டானை அவளால் மறக்கவே முடியவில்லை. கிளம்பும்போது கொடுத்த முத்தம் வரை அனைத்தும் அவளுக்கு பரவசத்தை அளிக்கிறது.
இந்த நிலையில் டெல்லிக்கு அலுவலக விஷயமாக வருபவள் டானை சந்திக்கிறாள். டான் இப்போது முன்னர் சந்தித்தது போல தனது பெயரை மாற்றிச்சொல்லவில்லை. வேத் - தாரா மகாலஷ்மி என இருவரும் அறிமுகமாகிறார்கள். டேட்டிங் செல்கிறார்கள். ஆனால் தாரா பரவசம் அடைந்த அளவுக்கு வேத் உற்சாகமில்லை. பிரான்சில் அவனிடம் இருந்த பரவசமும், உற்சாகமும் இல்லை என்பதை தாரா உணர்ந்து ஏமாற்றமாகிறாள். இதனால் வேத் அவளை திருமணம் செய்துகொள்ள ரிங் கொடுத்தபோதும் இது சரியாக வராது என சொல்லி தாரா பிரிகிறாள். பிரான்சில் பார்த்த டான் வேறு நீ வேறு என்று சொல்லிவிட்டு பிரிகிறாள். இதனால் கடுமையாக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறான் வேத்.
தனக்கு பிடித்த வேலையை அவன் எப்படி செய்து தாராவுடன் எப்படி ரீயூனியன் ஆகிறான் என்பதுதான் படம்.
வேலை , காதல் என இரண்டிலும் நாம் சந்திக்கும் பிரச்னைகளை இம்தியாஸ் அலி கதையாக எடுத்துக்கொண்டு பிரான்ஸ், இந்தியா, ஜப்பான் என நாடு நாடாக சுற்றி கதை சொல்லியிருக்கிறார். பிறருக்கு கதை சொல்லுவதில் ஆர்வம் உள்ள வேத், தனது அப்பாவின் விருப்பத்திற்காக பொறியியல் படித்து தனது உற்சாகத்தை இழக்கிறான். ஏறத்தாழ இப்பகுதியை ரன்பீர் அசகாயமாக நடித்துள்ளார். மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை வெளிப்படுத்துவது கடினமானது. ரன்பீரின் இந்த மாற்றம் காட்சிகளாக பார்க்கும்போது நமக்கு தெரிகிறது. ஆனால் அவர் செய்வது அவரது மனதை எப்படி கொலைசெய்கிறது என்பதுதான் நாம் அறிய வேண்டியது.
படத்தில் கதைகளை பெரியவர் ஒருவரிடம் கேட்டு
வேத் எப்படி ஊக்கம் பெறுகிறான் என்பதை ஏராளமான சிறிய காட்சிகளால் காட்டியிருக்கிறார்கள். எப்படி அந்தக்கதையில் வேத்தின் வாழ்க்கையும் இணைகிறது என்பது காலத்தின் விளையாட்டு.மொகித் சௌகான், அர்ஜித் சிங்கின் குரல்கள் ரஹ்மானின் இசை மூலமாக அனைத்து சூழல்களிலும் நம்மை அழவைக்கிறது. சிரிக்க வைக்கிறது. நெகிழ வைக்கிறது.
படத்தின் நிலப்பரப்பிற்கு ஏற்ப இசை பட்டாம் பூச்சியின் லயத்துடன் மாறி இதயத்தில் அமரும் அனுபவம் அருமை.
வலி நிரம்பிய நாடகம்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக