ஸிசோபெரேனியா பிரச்னை கொண்ட மருத்துவப்படிப்பு மாணவன் கண்டுபிடிக்கும் உளவியல் மர்மங்கள்!

 







ஜர்னி அக்ராஸ் தி நைட்


சீன டிவி தொடர் 


26 அத்தியாயங்கள் 



லி ஜியா, சீனாவிலிருந்து ஹாங்காங்கிற்கு உளவியலாளர் படிப்பை படிக்க வருகிறார். அவர் அப்படி படிக்க வர அவரது குடும்பம் முக்கியமான காரணம். அவரது அம்மாவிற்கு ஸிசோபெரேனியா இருக்கிறது. அந்த நோய் வந்துதான் அவர் மனநிலை சிக்கலாகி இறக்கிறார். அடுத்து இதே பிரச்னையில் அவரது அண்ணன் கூட மாட்டிக்கொள்கிறார். எல்லோருமே இருபத்து நான்கு வயதில் மனநல பிரச்னையில் மாட்டிக்கொள்கிறார்கள். லி ஜியாவிற்கு இன்னும் சில மாதங்களில் 24 வயதாகப்போகிறது. 

தனது பிரச்னையை ஹாங்காங்கிலுள்ள பேராசிரியருக்கு விளக்கி கூற அவர் லி ஜியாவுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கி படிப்பில் சேர்த்துக்கொள்கிறார். லி ஜியா படிப்பில் இணைகிறார். ஆனால் தங்குவதற்கு ஹாஸ்டலில் இடம் கிடைக்கவில்லை. அப்போதுதான் கல்லூரி வளாகத்தில்   உளவியல் பிரச்னை கொண்ட ஒருவரிடமிருந்து இளம்பெண் ஒருத்தியைக் காப்பாற்றுகிறார். செங்குவான் சாசா எனும் அவள், தனக்கு தெரிந்த இடத்தில் வாடகைக்கு இடம் இருக்கிறது. மிகவும் குறைந்த வாடகை என்று சொல்லி வினோதமான ஆட்கள் உள்ள இடத்தில் அறையைக் காட்டுகிறாள். அப்போதுள்ள சூழலில் லி ஜியாவுக்கும் வேறு வழி தெரியவில்லை. ஆனால் அவனது அறை உள்ள ஹை ஸ்ட்ரீட் கட்டிடத்தில் எல்லோருமே மனநல மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் போலவே இருக்கிறார்கள். என்னடா இது சோதனை என்று அவன் நினைக்கும்போது, அவனது அறைக்கு சிவப்பு நிறத்தில் பந்து ஒன்று உருண்டு வந்துகொண்டே இருக்கிறது. 

என்னடா இது புது பிரச்னை என்று பார்த்தால், அந்த அறையில் தங்கியிருந்த அம்மா தூக்குப் போட்டுக்கொண்டும், மகன் நோயால் இறந்துபோனான் என்ற செய்தியையும் பலரும் பேசிக்கொள்வதை அறிந்து பீதியாகிறான்.  மாணவர்களுக்கு வீடு வாடகைக்கு பிடித்து தருவதை தொழிலாக கொண்டிருக்கிறார் சாசா. அவளுக்கும் அவளையே சுற்றிவரும் வாய் பேசாத மாஸ்டர் ஷார்ப்புக்கும் நெருக்கமான உறவிருக்கிறது. லி ஜியாவைப் பொறுத்தவரை சாசா அவனிடம் அந்த அறை பற்றிய உண்மையை முதலில் ஏன் சொல்லவில்லை என கோப ப்படுகிறான். அந்த அறையில் இருந்து மர்மத்தை தேடும்போது யாரோ பின்னாலிருந்து தாக்க, நினைவிழக்கிறான். அவனைக் காப்பாற்றும் அக்கட்டிடத்தின் செக்யூரிட்டி, மரியாதை உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இங்கிருந்து ஓடிவிடு என்கிறார். 

லி ஜியா, கட்டிடத்தில் இருந்த மர்மத்தை கண்டுபிடித்தானா இல்லையா என்பதுதான் எபிசோடுகளில் உள்ள முதல் கதையின் மையம். இதற்கடுத்து உளவியல் பிரச்னையுள்ள பல்வேறு மனிதர்களின் பிரச்னைகளை , குறிப்பாக சைக்கோ ஒருத்தியின் சிக்கலையும் தீர்க்கிறான். இறுதியில் அவனது ஸிசோபெரேனியா பிரச்னை என்னவானது என்பதுதான் நம்மை ரசிக்க தூண்டுகிற இறுதிப்பகுதி. 



ஸி செங், லி ஜியாவின் நட்பு முதலிலேயே ஆச்சரியப்படுத்துகிறது. ஸி செங் முதலிலேயே  லி ஜியாவிடம் கேட்கிறான். நான் முக்கியமா, ஸாங் சாச்சாவா? என. அந்தளவு நட்பும், காதலும் போட்டிபோடுகிற காட்சிகள் தொடர் முழுக்க உள்ளது. ஸி செங், ஸாங் சாச்சா, லி ஜியா என மூவரும்தான் பல்வேறு உளவியல் வழக்குகளை தீர்க்கிறார்கள். இதில் ஆறுதல் என்னவெனில் திகில், பீதி என அமானுஷ்யம் என்று காட்டாமல் அனைத்துமே உளவியல் குறைபாடுகள் கொண்ட மனிதர்களின் ஆட்டம்தான் என்று ஆதாரங்களோடு விளக்கியதுதான். 

டிவி தொடரில் பிக் சீனியர் என்ற பெயரில் பழைய சீனர்களின் ஆடையை அணிந்துகொண்டு வருபவர்தான் இத்தொடரின் இயக்குநர் ஜூ ஸி மாவோ. 

உளவியல் சார்ந்த பிரச்னைகளை வழக்குகளாக எடுத்துக்கொண்டு  லி தீர்ப்பது நன்றாக இருக்கிறது. ஆனால் கூடவே அவரது ஸிசோபெரெனியா பிரச்னைகளையும் சமாளிப்பது பற்றி காட்டியிருக்கலாம். குறிப்பாக அவரது பேராசிரியர் ஷானின் மனைவி பெர்த்தா பற்றி எந்த காட்சியும் இல்லை. 

சாச்சாவுடனான காதலை விட ஸி செங், லி ஜியாவின் நட்புதான் காட்சி வழியாக முன்னே  தெரிகிறது. தனது அம்மா பற்றி லி ஜியா தெரிந்துகொண்டான் என்பதை சாச்சா புரிந்துகொண்டு அவனிடம் பேசுகிறாள். அந்த காட்சியில் கூட லி  ஜியா தன்னுடைய வாழ்க்கையும் அவளுடையதை விட மாறுபட்டது அல்ல. நானும் அதனை அனுபவித்திருக்கிறேன் என்று சொல்லுகிறான். ஆனால் அவனுக்கு இருக்கும் உளவியல் பிரச்னையை வெளியே சொல்லுவதில்லை. இதனால் அவர்களுடைய காதல் சிக்கல் கடைசி வரை நீள்கிறது. 



உளவியல் குறைபாடு கொண்டவர்களை சாதாரண மனிதர்களாக நடத்துங்கள், அவர்களின் பிரச்னைகளை காதுகொடுத்து கேளுங்கள் என்று கூறிய வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. அனைத்து கதைகளுமே பல்வேறு விதமான திருப்பங்களைக் கொண்டுள்ளது. இறுதியாக லி ஜியாவின் வில்லத்தனமான பேராசிரியரின் கதையோடு முடிகிறது. 

பச்சை ஆப்பிள் கடிக்கப்பட்டிருக்கும் காட்சியெல்லாம் மனதில் பீதி படர்கிறது. உண்மையில் அந்த பாத்திரம் யார் என்பதை பாதி எபிசோடுகளில் சொல்லிவிடுகிறார்கள் என்றால் கூட அதனையும் சில கதைகளில் உள்ளே கொண்டு வந்திருக்கலாம்.  லி ஜியாவின் இரண்டு ஆளுமைகளாக அவை இருந்திருக்கும்.  முக்கிய பாத்திரங்களாக நடித்த மூவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள் 


கோமாளிமேடை டீம் 


Genre: Suspense
Language: Mandarin
Episodes: 26
Director: Ju Xingmao
Screenwriter: Rao Hui, Jin Jin
Production Date: 2019
Origin: China




 

கருத்துகள்