உறவின் நோக்கமே சுயநலம்தானா? - கடிதங்கள்

 

 

 

 

 

 School Work, Write, Still Life, Assignment, Pen

 

கடிதங்கள்


3.1.2021


அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக உள்ளீர்களா? சொந்த ஊருக்கு சென்றதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். சென்னையில் இருக்கும் இந்த நேரத்தில் உங்களை நான் சந்திக்க முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. கல்வி வேலை வழிகாட்டியில் வேலை செய்த வெங்கடசாமியுடன் இப்போது பேசுவது இல்லை. தேவையைப் பொறுத்தே உறவுகள் என்பதை அவர் தீவிரமாக நம்புகிறார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் விலகிவிட்டேன். அது உண்மையாக இருக்குமோ என்னமோ, எனக்கு ஏற்றுக்கொள்ள கடினமாக உள்ளது.


2021ஆம் ஆண்டில் இழப்புடன்தான் சம்பளக்கணக்கு தொடங்கியுள்ளது. பொதுமுடக்க காலம் என்பதால் இரண்டாயிரம் ரூபாயை வெட்டிவிட்டார்கள். மீதியுள்ள பணத்தில்தான் ஊருக்கு பணம் அனுப்புவது, வாடகை, சாப்பாடு ஆகியவற்றை சமாளிக்க வேண்டும்.


நீங்கள் வேலை செய்யும் பத்திரிகை நிறுவனத்தில் இப்போது பிடிக்கும் பிடிமானங்களைத் திருப்பித் தர வாய்ப்புள்ளது. ஆனால் எங்களுக்கு அப்படியான நிலைமை இருக்குமா என்று தெரியவில்லை. எங்கள் தலைவர் எங்களுக்கான பரிந்து பேசுவார் என்று நம்ப முடியவில்லை. புத்தாண்டில் உற்சாகமாக புதிய நூல்களை எழுத நினைக்கிறேன். பார்ப்போம் காலம் நமக்கு என்ன ஆச்சரியங்களை வைத்திருக்கிறது என. நிலைமை எப்படி மேம்படும் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை.


இப்போது ஊரில் இருப்பதால், குங்குமத்தை வெள்ளிக்கிழமை கொடுமுடி சென்று வாங்கிப் படிக்க முடியவில்லை. ஊரிலிருந்து ஆறு கி.மீ. சைக்கிள் மிதித்தால்தான் நகருக்கு சென்று வார இதழ்களை வாங்க முடியும். சிலமுறை ஆ.வி வாங்க வியாழன் கடைக்குப் போவேன். இல்லையென்றால் அப்பா வாங்கி வந்துவிடுவார்.


புதிய பணியான நாளிதழ் நிருபர் பணியை பழகியிருப்பீர்கள். வேலை, குடும்பம் என இரண்டிலும் சவால்களை சமாளிப்பது கடினமாகவே இருக்கும். வேலையைக் கடந்து தனிப்பட்ட விருப்பம் சார்ந்து புத்தகங்களை படிப்பது போராட்டமாகவே உள்ளது. நேருவின் சொற்பொழிவுகளை தமிழில் எழுதி வருகிறேன். இவற்றை எழுதியவுடனே வலைத்தளத்தில் வெளியிடுவேன். பிறகு நூலாக அமேஸானில் வைத்து விட வேண்டியதுதான்.


சந்திப்போம்.

.அன்பரசு




---------------------------------------------------------------







பரபரப்பான வேலையும் மனமும்!


.பு.பாளையம்

8.1.2021


அன்பு நண்பருக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


2021இல் வேலை மாற்றம் போல மேலும் பல முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன். எங்களுடைய பத்திரிகையில் புதிதாக ஒருவர் இணைந்துள்ளார். அவரின் வேலைகள் சிலவற்றை எனக்கு செய்யச்சொல்லி பணித்துள்ளார்கள். அதனை செய்துவருகிறேன். உங்கள் வேலைகள் எப்படி நடக்கின்றன. பரபரப்பாக வேலை செய்யும்படி நேரம் அமைந்திருக்கும் அல்லவா?


நான்கு மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அடுத்த வாரம் அமைச்சர்கள் பற்றி மந்திரி தந்திரி தொடரை தொடங்குகிறார்கள். உங்கள் நாளிதழான தினகரனிலும் தேர்தல் பற்றி பரபரவென கட்டுரைகளை எழுதித் தள்ளுவார்கள்.


வேலைக்கு ஏற்ப பல்வேறு விஷயங்களை தேடி படிப்பது கடுமையாக உள்ளது. வலைத்தளத்தில் எழுதுவது, வேலை, அதற்காக இதழ்களை படிப்பது என நேரம் செல்கிறது. சம்பளம் பற்றி சொன்னேன் அல்லவா? கணக்கில் ரூ.1,700 மிகச்சரியாக பிடித்துவிட்டார்கள். செலவுகள் கூடி வரும் நிலையில் நிறுவனத்தின் நடவடிக்கை சிக்கலாக உள்ளது. நா.கதிர்வேலன் போன் செய்து பேசினார். அவரது கட்டுரையைப் பாராட்டி பேசினேன். அதற்காகத்தான் எனக்கு போன் செய்தார் என்று நினைக்கிறேன்.


சந்திப்போம்


.அன்பரசு



கருத்துகள்