மகனின் கொள்கைக்காக தன்னையே அர்ப்பணிக்கிற தாய்! - தாய் - மார்க்சிம் கார்க்கி
மாதிரிப்படம் |
தாய்
மார்க்சிம் கார்க்கி
தொ.சி. ரகுநாதன்
ரஷ்யாவில் மன்னருக்கு எதிராக கலகம் செய்யும் தொழிலாளர்களின் கதை. இதில் முக்கியமான பாத்திரங்களாக பாவெல், அவனது அம்மா பெலகேயா நீலவ்னா ஆகியோர் உள்ளனர்.
நீலவ்னாவுக்கு நடக்கும் திருமணமே எதிர்பாராத விபத்தாக அவளது சொல்லில் வெளிப்படுகிறது. அதற்குப் பிறகும் அடி, உதை என வாழ்கிறாள். குழந்தை பிறந்தாலும் அவளது வாழ்க்கை பெரிய மாற்றங்களின்றி வலியோடுதான் இருக்கிறது. பாவெல் அவனது அப்பா குடிநோயால் இறந்தபிறகு ஆலை வேலைக்கு செல்கிறான். பிறரைப் போல குடிக்காமல் வேலை முடிந்தவுடன் வீட்டுக்கு வந்து நண்பர்களிடம் வாங்கிய நூல்களை படித்துக்கொண்டிருக்கிறான். இது அவனது அம்மாவுக்கு முதலில் பெருமையாக இருந்தாலும் பின்னர் ஏதோ பிரச்னையாக தோன்றுகிறது.
பாவெல் அடிக்கடி வெளியே கிளம்பிவிட்டு தாமதமாக வீடு வருகிறான். சில நாட்களில் வீட்டுக்கு வருவதில்லை. அவன் எங்கு செல்கிறான் என்பதை நீலவ்னா அறியும்போது அதிர்கிறாள். நாட்டை ஆளும் ஜார் மன்னருக்கு எதிரான சோஷலிச அணியில் மகன் சேர்ந்துவிட்டான். கட்சியில் சேர்ந்து படிப்பது, எழுதுவது, பேரணிகளை நடத்துவது என சென்றுகொண்டிருக்கிறான்.
நீலவ்னாவுக்கு இதுபற்றியெல்லாம் ஏதும் தெரியாது. ஆனால் மகன் அவளது வீட்டுக்கு அழைத்து வரும் ஆந்திரேயா என்பவனின் பேச்சும் குணமும் அவளுக்கு பிடித்துப் போகிறது. அவனின் குணமும் பேச்சும் சில சமயங்களில் முரட்டுத்தனமாக இருந்தாலும் பிறரின் மீதான கரிசனம் அவளை ஈர்க்கிறது.
இதற்கிடையில் பேரணி நடத்தி பாவெல் சிறைபடுகிறான். இதற்கு முன்னரே அவள் வாழும் தொழிலாளர்கள் காலனியில் பாவெல் புகழ் பரவி விடுகிறது. அவளது வீட்டைக்கூட போலீசார் சோதனையிட்டு பொருட்களை உடைத்து போடுகிறார்கள். நீலவ்னா எப்படி மகனின் போராட்டத்தை புரிந்துகொண்டு தன்னை அதற்கு அர்ப்பணிக்கிறாள், அவனின் பிற தோழர்களுடன் இணைந்து பயணிக்கிறாள் என்பதே மீதிக்கதை.
நாவல் மொத்தம் 1300 பக்கங்களுக்கும் அதிகம். இதில் நீலவ்னா, போராட்டங்களைப் பற்றி ஏராளமான நூல்களை படிக்காதபோதும் மக்களின் பிரச்னைகளை புரிந்துகொண்டு பேசும் பேச்சுகள் அனைத்துமே சிறப்பாக உள்ளன. அதனை கேட்பவர்கள் மெய்மறந்து கேட்டார்கள் என நூலில் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, அதனை படிப்பவர்கள் கூட அப்படித்தான் மயங்கி போகவேண்டும். அதில் பெரிய அலங்காரங்கள் இல்லை. ஆனால் எளிமையான உண்மை உள்ளது.
நூலில் நிறைய எழுத்துப்பிழைகள் உள்ளன. அவள் அவன் ஆவது, அவன் அவள் ஆவது என நிறைய இடங்கள் மாறி வருகின்றன. இந்த தவறுகள் சில இடங்களில் பொறுமையை சோதிக்கின்றன.
பாவெல், ஆந்திரெய், இவான், நதாஷா, சாஷா, இகோர் என நாவல் நெடுக ஏராளமான பாத்திரங்கள் வருகின்றன. மேற்சொன்னவர்கள் அனைவருமே சோஷலிச பாத்திரங்கள். இவர்களின் உரையாடல்களை சூழல்களைப் பொறுத்து உள்வாங்கிக் கொள்ளவேண்டும். வறுமை தலைவிரித்தாடுகிற சூழலில் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள் உணவின்றி தவிக்கும் நிலை, போராட்டங்கள் தொடங்குவது, போலீசாரின் சித்திரவதை, சைபீரியா நாடு கடத்துதல், சிறைவாசம் என ஏராளமான சம்பவங்கள் நூலை வாசிக்க வைக்க உந்துதலாக உள்ளன.
நீலவ்னாவின் முடிவு என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது போல நடக்கிறது. அதில் அதிர்ச்சியோ, திகைப்போ இல்லை. வாசகர்களுக்கும் இயல்பானதாகவே அது தோன்றுகிறது. மகன் நம்பும் விஷயங்களுக்காக அவனை ஆதரித்து இறுதியில் தன்னையே இழக்கிற தாயின் அர்ப்பணிப்பு கண்கலங்க வைக்கிறது.
தியாக திருவுருவம்
நன்றி
ஃப்ரீதமிழ்இபுக்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக