கூட்டுறவு அமைப்புகளை காப்பாற்ற அமித்ஷா வருகிறார்!

 






கூட்டுறவு  அமைப்புகளை வலுப்படுத்த புதிய துறை!


கூட்டுறவு அமைப்புகள்  விவசாயத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்தது. தற்போது கூட்டுறவு சங்க அமைப்புகளை நாடெங்கும் விரிவுபடுத்தும் பொருட்டு, அதனை தனி அமைச்சகமாக மாற்றியுள்ளனர். 

கூட்டுறவு முறை வலுவாக செயல்படுவது மகாராஷ்டிரா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே. இதனை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று வழிநடத்த உள்ளார். கூட்டுறவு முறை இந்தியாவுக்கு ஏற்கெனவே அறிமுகமான முறை. இதில் பங்கேற்கும் பலரும் தொழிலுக்கான பொறுப்பை ஏற்கிறார்கள். எளிதாக வணிகம் செய்யும் முறையில் கூட்டுறவு சங்க அமைப்பில் தொழில்தொடங்குவது அவசியம் என கூட்டுறவுத்துறை சார்பில் பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  பட்ஜெட்டில் கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார். 

குறிப்பிட்ட நோக்கத்திற்காக மக்கள் அனைவரும் இணைந்து உழைப்பதே கூட்டுறவு முறை. இந்த முறையில் பால், சர்க்கரை, வங்கி ஆகிய துறைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. நாட்டில் தற்போது 1,94,195 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் இயங்குகின்றன. இம்முறையில் 330 சர்க்கரை ஆலைகள் இயங்குகின்றன. நாட்டில் 35 சதவீத சர்க்கரை கூட்டுறவு முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 


2002ஆம் ஆண்டு கூட்டுறவு அமைப்புகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி சொந்த மாநிலம் தாண்டி பல்வேறு மாநிலங்களில் தொழில் செய்யும் கூட்டுறவு அமைப்புகள் மத்திய அரசின்  சட்டப்படி பதிவு செய்வது கட்டாயம். இதில் பெரும்பாலும் இருப்பது வங்கிகள்தான். கூட்டுறவு நிறுவனங்களின் மீது மாநில அரசுகளுகு முதல் உரிமை உண்டு. பிறகு மத்திய அரசு அதனைக் கட்டுப்படுத்தும். கூட்டுறவு அமைப்புகள் பல்வேறு அரசியல் சிக்கல்களில் சிக்கி அதன் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. இம்முறையில் செயல்படும் வங்கிகள் கூட பல்வேறு மோசடிகளில் நற்பெயரை இழந்து வருகின்றன. இதனால் இந்த வங்கிகளில் மக்களின் முதலீடு குறைந்து வருகிறது.  எனவே  மத்திய அரசு இத்துறையை கையில் எடுத்து கூட்டுறவு துறையைக் காப்பாற்ற முடிவெடுத்துள்ளது..


இந்தியன் எக்ஸ்பிரஸ் 

பார்த்தசாரதி பிஸ்வாஸ் 




கருத்துகள்