இளைஞர்கள் அரசை நம்பாமல் அவர்களை மட்டுமே நம்பவேண்டும்! - பன் பட்டர் ஜாம்

 





1

எனதருமை நாட்டு மக்களே , வணக்கம்.  இன்றுவரை  நீங்கள் தாக்குப்பிடித்து எனது நாட்டில் உயிரோடு வாழ்கிறீர்கள் என்றால் நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று நம்புங்கள். அப்படியே உங்களை ஆளும் என்னை எப்போதும் நன்றியுடன் நினைத்துக்கொள்ளுங்கள். கரம் கூப்பித் தொழுங்கள். 

மாசி மகம் எனும் நன்னாளை உங்களுக்கு நினைவிருக்கிறதா? எனது ஆட்சியில் நீர்நிலைகளை குறைத்து மக்களுக்கு பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்க அபாயத்தை குறைத்திருக்கிறேன்.  இந்த சீர்திருத்தங்களுக்கு முன்னர் நீர்நிலைகளோடு கொண்டாடும் பண்டிகைகள் எப்போதும் நமது  பாரத நாட்டில் உண்டு. ஜில்பவாசம் எனும் பழக்கத்தை மக்கள் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி குடும்பத்தை விட்டுவிட்டு நதிக்கரையில் ஒருமாதம் தங்கியிருப்பார்கள். இவர்களை அங்கிருந்து விரட்டவே நதி நீரை பெரு நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு செய்தேன். இதன்மூலம் நீர் தனியார் நிறுவனங்களின் மூலம் பாதுகாக்கப்படும். அரசுக்கு  நதிகளை பாதுகாத்து பராமரிக்க பெரிய சுமை இதனால் நீங்குகிறது. மக்களும் காசு கொடுத்து இந்த நீரை பயன்படுத்திக்கொள்ளலாம். மக்களுக்கு பொறுப்புணர்வும் தங்கள் வாழ்க்கையை தாங்களே பார்த்துக்கொள்ளவேண்டிய அவசியத்தையும் தந்தையாக எனது அரசு நிறைவேற்றும்  என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறேன். 

நீர் , உலகளவில் முக்கியமான வணிகப்பொருள். அதனை நாம் வீணடித்து வருகிறோம். பாரஸ் கல்லில் இரும்பு படும்போது பொன்னாகிவிடும் என்பார்கள். குடிநீர் நிறுவனங்கள் நீரை சுத்திகரித்து பாட்டிலில் அடைத்து விற்கும்போது, அரசுக்கு வருவாய் கூடுகிறதுதானே? இது மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி தராதா? நமது இயற்கை வளங்களால் பிற நாடுகள் பொருளாதார வளர்ச்சி பெறும்போது நாம்தான் இதற்கு காரணம் என்ற எண்ணத்தால் மெகந்தியா நாட்டு மக்கள் மகிழ்வார்கள் என்று எனக்குத் தெரியும். அடுத்தவர்களுக்கு விருந்து போடும் வீட்டுக்காரி பட்டினியால் படுப்பாள் என  வெள்ளுடை வேந்தர் வடுகப்பட்டியார் கூட பாடல் எழுதியதை எனதருமை மக்கள் மறந்துவிட மாட்டார்கள். வெளிநாட்டு ஏழை முதலாளிகள் விமானத்தில் இங்கு பறந்து வந்து நதி நீரை பயன்படுத்தி வளம் பெற்று சொகுசுகார்களிலும், விமானங்களில் வணிக பிரிவிலும் பயணிப்பது மெகந்தியாவுக்கு அல்லவா பெருமை? இப்படி நாம் எளிமையாக பிறருக்கு விட்டுக்கொடுத்து வாழ்வது பற்றி ஒலைச்சுவடிகளில் கூட சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

உலக நீர்நாள்  மாசி மாதத்தில்தான் வருகிறது. அன்றைய தினம், நாம் பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் பாட்டில்களை வாங்கி குடித்து மகிழவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அடுத்து கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆலைகளில் தயாராகும் நீரை காசு கொடுத்து பேரம் பேசாமல் வாங்கிக் குடித்து அவர்களை ஆதரிக்கவேண்டும். இதன்மூலம் அரசுக்கு தேவையான வரி வருவாய் கிடைக்கும் என்பதை இக்கணத்தில் கூறிக்கொள்கிறேன். மாதசம்பளத்தில் 30 சதவீதம் வரி பிடித்தமாகிறது. பெரு நிறுவனங்களுக்கு குறைவாக வரி பிடித்தம் செய்கிறார்கள் என்று சிலர் புகார் கூறுகிறார்கள். இதுபோன்று நாட்டின் அமைதியை குலைக்குமாறு உண்மையை பேசுகிறவர்களுக்காகத்தான் ஜூபா திட்டத்தை உருவாக்கினோம். விரைவில் புகார் கொடுத்தவர்களை மௌனமாக்கி எங்கள் வளர்ச்சி பணிகளை முன்னெடுப்போம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. 

குளம், குட்டை, ஏரி, கிணறு, நதி என அனைத்துமே மக்களுக்கானது என கங்கம் மாநிலத்திலிருந்து முஜித் என்பவர் அதிபுத்திசாலியான எனக்கே ஆலோசனை கூறியிருக்கிறார். நாட்டின் தலைவருக்கு யோசனை சொல்லுமளவு அவருக்கு ஓய்வு நேரம் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது.   எனவே , அவரை கட்டாய உழைப்பு முகாமுக்கு அழைத்து சென்று 23 மணி நேர உழைப்பில் ஈடுபடுத்த தொழிலாளர் துறை அமைச்சரிடம் பரிந்துரைத்துள்ளேன்.  அரசின் தலைவரான என்னைவிட அதிகம் யோசிப்பவர்கள் தாராளமாக எனக்கு ஆலோசனைகளை கூறுங்கள். அவர்களை உளவு அமைப்பினர் கண்டுபிடித்து, வழக்கு தொடர்வார்கள். எனது தொண்டர்கள் அவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்  என்பதில்  நம்பிக்கை உள்ளது. 

மேற்சொன்னவர் எனக்கு ஆலோசனை சொன்னார். இவரல்லாத மற்ற இருவர் ஜூபிதா, மகதீஷ் இவர்களில் ஜூபிதா நேரடியாக செயலில் இறங்கி எனது வேலையை சுலபமாக்கிவிட்டார்.  ஜூபிதா, வறண்டுபோன  ஏரியை மேம்படுத்த மழைநீர் வடிகால் கால்வாயை அமைத்தார். மகதீஷ், தனது ஊரில் நிலத்தடி நீரை பெருக்க மரக்கன்றுகளை நட்டுள்ளார். இதனால் அரசு எளிதாக பெருநிறுவனங்களை அவர்களது ஊரில் குடிநீர் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க முடியும். எனது கட்சிக்கு தேர்தல் பிரசார நிதி தந்த உள்ளூர் தொழிலதிபர்களை இதில் பங்காளிகளாக்க முடியும். இதுபோல மற்ற இந்தியர்களும் அரசுக்கு உதவினால், எனக்கு உதவிய தொழிலதிபர்களும் வெளிநாட்டு வங்கியில் சேமிப்புக் கணக்கை எளிதாக தொடங்கி அதிவேகத்தில் பணத்தை இருப்பு வைக்க முடியும். உங்கள் வாழ்க்கை மேம்படுத்த முடியாவிட்டால் என்ன? பணக்கார ர்களின் வாழ்க்கை செழிக்க உதவுவதால் பெரிதாக என்ன இழந்துவிடப் போகிறீர்கள்? 

இனி நிலம் உங்களுடைய இருந்தாலும் நீர் என்பது எனது நேச தொழிலதிபர்களின் சொத்து. எனவே மழை பெய்யும்போது அதனை பாத்திரங்களில் பிடித்து வைத்து பயன்படுத்துங்கள். நீர் பற்றாக்குறை என ஊடகங்களில் புகார் சொல்லாதீர்கள். அவர்களை மிரட்ட எங்களிடம் நிறைய சட்டங்கள் உள்ளன. எனவே, ஏரி, குளங்களை உங்கள் சொந்த உழைப்பை கொண்டு வளப்படுத்தி அரசுக்கு உதவுங்கள். இன்று உங்களுடையது, நாளை மற்றொருவருடையதாகிறது என்ற பாகவதத்தை மறந்துவிடாதீர்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் அரசு வாகனம் சகதியை தெளித்தாலும் அது உங்கள் நன்மையின் பொருட்டே என்பதை உணருங்கள். நமது நாட்டின் மண் உங்கள் உணவோடு சென்று ரத்தத்தில் கலந்தால் அதைவிட எளிம மெகந்தியர்களின் ஆன்மாவுக்கு வேறு பலம் வேண்டுமா?

எனதருமை இளைஞர்களே, உங்களது வேலைவாய்ப்பின்மைக்கு நீங்களே காரணம் என்று உங்களுக்கு தெரியுமா? கல்வி, வேலை, சமூக பாதுகாப்பு என அரசு உங்களுக்கு அத்தனையும் தருவது முடியாத காரியம். சுயதொழில் தொடங்குவதை விட மாத ஊதியத்திற்கு சேருங்கள். அதனால் வரிவருவாய் அரசுக்கு நிலையாக கிடைக்கும். எனவே உங்கள் பாதை இப்படித்தான் இருக்கவேண்டும். இதைவிட்டு சுயதொழில் என கிளம்பினால் தொழில்துறை அமைச்சகம் விதிக்கும் நிபந்தனை, வரிகளால் உங்களால் வார இறுதியில் சினிமாவுக்கும் சோளப்பொரிக்கும் கூட காசில்லாமல் தவிக்க நேரிடும். புதிதாக யோசிக்கிறேன் என்று தவறுகளை செய்து அரசை எரிச்சல் ஊட்டாமல் பழைய வழிகளில் செயல்பட்டு அரசுக்கு ஆதரவளியுங்கள்.

 நீங்கள் எங்களுக்கு ஆதரவாக ஒருநாள் வாக்குகளை மட்டும் பதிந்தால் போதும். பிறகு உங்கள் வாழ்க்கை தானாக எங்கள் கைகளில் வந்துவிடும்.  படிப்பு வரவில்லையென கவலைப்படாதீர்கள். உங்களை பள்ளியிலிருந்து தொழிற்சாலைக்கு அனுப்பி சம்பள பணத்தை தரவே நுழைவுத்தேர்வுகளை உருவாக்கியுள்ளேன். இந்த சீர்திருத்தம் மூலம் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுவதால் அவர்களும் வரி பயனர்களாக மாறுவார்கள். எழுதி வைத்ததை படித்து ஒப்பித்து இளமைக்காலங்களை வீண்டிக்க வேண்டாம் என்பது சிறுநீர் கழிக்கும்போது எனக்கு தோன்றிய அதிரடி சிந்தனை.  அரசு வழங்கும் சலுகைகளை பெற்று வெளிநாட்டுக்கு சென்று நன்றாக வாழும் மெகந்தியர்களைப் பற்றிய செய்து உங்களுக்கு ஊக்கமூட்டலாம். ஆனால் அவை அனைவருக்குமானதல்ல. இளமையில் வேலைக்கு செல்வதால், பணியாளருக்கும் வருமானம் கிடைக்கும், குடும்பமும் தலைநிமிரும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனை யோசித்துப் பார்க்க கூட வேண்டாம். நான் சொல்லுவதை நீங்கள் கேட்டு நடந்தால் போதும். அதை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன். 

அறிவியல் தினத்தன்று சிலர் பாரத நாட்டு விஞ்ஞானிகளை  இளைஞர்கள் அறியவேண்டுமென கூறியுள்ளனர். நமது ஒட்டுமொத்த அறிவியல் உலகமே பசுமாடுதான். அது ஒன்றிலேயே சர்வரோக நிவாரணி மருந்துகளை தயாரிக்கலாம். இதற்கு உலக அமைப்புகளின் அனுமதி தேவையில்லை. ஒலைச்சுவடிகளில் எழுதப்பட்ட அறிவியல் செய்திகளின் படி நான் இதனை நம்புகிறேன். எனவே கட்டாயம் நீங்களும் ஏற்றுத்தான் ஆகவேண்டும் என்பதை தனியாக சொல்லவேண்டியதில்லை. 

........

பன் பட்டர் ஜாம் நூல்

விக்டர் காமெஸி









கருத்துகள்