தந்திரமான ஆட்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது! - கடிதங்கள்

 

 

 

 

 Woman, Naked, Act, Femininity, Art, Female, Body, Skin

 

 

 பெண்களை மயக்கும் காமம்! - பரந்தாம ராஜூவின் வேட்கை

 

அன்புத்தோழர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? அஞ்சல் அட்டையில் எழுதுவது பற்றி நண்பர்களுக்கு நிறைய மாற்றுக்கருத்துகள் உள்ளன. அதனை யாரும் எளிதாக படித்துவிட முடியும் என்று கூறுகிறார்கள். அது உண்மைதான். ஆனால் இன்லேண்ட் கார்ட் வாங்கி எழுதும் அளவு்க்கு. என்னிடம் விஷயங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. அஞ்சல் அட்டை எளிமையாக இருக்கிறது என்பதுதான் அதனைப் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம்.


எங்களது பத்திரிக்கையில் புதிதாக கணித பாடத்திற்கென உதவி ஆசிரியர் இணைந்துள்ளார். அவர் கொஞ்சம் தடுமாறுவதால் வானியல், இயற்பியலை எனக்கென பொறுப்பாசிரியர் ஒதுக்கியுள்ளார். ஆனால் எனக்கு துணுக்குகள் எழுத தெரியும். ஆனால் நீண்ட கட்டுரைகளை எழுதுவது கடினமான காரியம். குங்குமத்தில் அப்படி அறிவியல் கட்டுரைகளை இரண்டே இரண்டு பேருக்கு எழுதியுள்ளேன். அங்கு அறிவியலை எழுதுவதற்கு ஆட்கள் இல்லாத சூழலில் எனது மேசைக்கு வந்த வாய்ப்பு அது. மற்றபடி இவற்றை எழுதுவதற்கான சரியான ஆள் நான்தானா என்பதில் எனக்கே சந்தேகம் உள்ளது. நான் எழுதுபவற்றை பொறுப்பாசிரியர் அப்படியே ஏற்றுக்கொள்கிறார் என்ற கூறமுடியாது. நிலைமை அப்படி உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். எழுதும் பெரும்பாலான கட்டுரைகளை நான் வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறேன்.


தஞ்சை ப்ரகாஷின் கள்ளம் நாவலை மீண்டுமொருமுறை படித்தேன். தெலுங்கு பேசும் ராஜூ வம்ச ஆட்களின் கதை. கட்கிளாஸ் வேலைகளை செய்யும் ராஜூ வம்சத்தை சேர்ந்த பரந்தாம ராஜூ எப்படி தனது திறமையால் ஊரையே திரும்பி பார்க்க வைக்கிறான். தனது வம்சக்கலையை ஏழை பெண்களைக் கொண்டு அனைவருக்குமானதாக மாற்றி சாதிக்கிறான் என்பதை எழுத்தாளர் அற்புதமாக எழுதியுள்ளார்.


பரந்தாம ராஜூவின் காதலும், காமத்தை எப்படி பெண்களின் மனதில் உருவாக்கி வேலையில் சிறக்க வைக்கிறான் என்பதை படித்தால் வியந்து போவீர்கள். தெலுங்கும், தமிழும் கலந்து பேசுகிற கதையில் பெண்களுக்கான பாத்திரங்கள் அதிரடியான மனநிலை கொண்டதாக உருவாகியுள்ளது. கெஞ்சியும், கொஞ்சியும், அடித்தும், உதைத்தும் பரந்தாம ராஜூ தனது கலையை ஏழை பெண்களுக்கு சொல்லித்தரும் பகுதிகளை வாசிப்பவர் மறக்கவே முடியாது.


நூல்களை வாசிப்பது, எழுதுவது போக மீதி நேரங்களில் படங்களைப் பார்த்துவருகிறேன். முன்னர் குமார் ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது கேரள நண்பர் கொடுத்த அனிமேஷன் படங்கள் எனது மனநிலைக்கு இப்போது உதவி வருகின்றன. எங்கள் வீட்டைச் சுற்றியுள்ள உறவினர்களிடம் எந்த பேச்சும், ஆதரவும் இல்லை. தந்திரமான ஆட்களாக எப்படி மனிதர்களை பயன்படுத்துவது என யோசிக்கிறார்கள். இவர்களிடம் என்ன பேசுவது என்று எனக்கு எப்போதுமே குழப்பமாக உள்ளது. அலுவலக வேலைகளை சிறப்பாக செய்கிறேன் என்று கூற முடியாது. ஆனால் எப்படியோ சமாளித்து வருகிறேன். பெரும்பாலானா நேரங்களில் நான் இந்த வேலையை விட்டு விலகிவிடலாமா என்று யோசனைகள் வருகின்றன. சர்க்கஸில் நடப்பது போல என்னை நான் தினசரி நிரூபித்துக்கொண்டே இருக்கவேண்டுமா என்று தோன்றுகிறது.


சந்திப்போம்.



.அன்பரசு





--------------------------------------------




லா.ச.ராவின் அற்புதமான விவரிப்புகள்


அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம்


நலமாக இருக்கிறீர்களா? தங்களது பெற்றோரும் நலமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். குங்குமம் ஆசிரியர் கே.என்.சிவராமன் சார் கொடுத்த இந்துமத தத்துவம் எனும் நூலை இப்போதுதான் படிக்கத் தொடங்கியுள்ளேன். இதனை உள்வாங்கிக்கொள்ள இப்போதுதான் நேரம் கிடைத்துள்ளது என நினைக்கிறேன். சமூக அமைப்பு எப்படி பார்ப்பனர்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்டது, இதன் வழியாக ஏழை மக்களான சூத்திரர்கள் எப்படி சுரண்டப்பட்டார்கள் என நூல் பேசுகிறது.


திரைப்படங்களை பார்ப்பது எனக்கு முக்கியமானதாக தோன்றுகிறது. அதில் ஏதோ சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறேன். வெறும் பொழுதுபோக்கு என்று கடந்து சென்றுவிட முடியவில்லை. கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மனிதர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தன. அதனை நூலாக்கி வருகிறேன். இவற்றை இலவசமாக வெளியிடுவேன். ஆண்டுதோறும் சில இலவச நூல்களை கிரியேட்டிவ் காமன்ஸ் நூலில், வெளியிட நினைத்துள்ளேன். இவை ஃப்ரீதமிழ் இபுக்ஸ் வலைத்தளத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்திற்கு நம்பிக்கை தரும் விதமாக நூல்களை எழுதுவதுதான் நோக்கம். நேரு பற்றிய நூல் பாதிதான் முடிந்துள்ளது. 101 பொருளாதார வார்த்தைகளைப் பற்றி படித்த நூல் நன்றாக இருந்தது. நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட இந்த நூல் உதவியாக இருந்தது.


பாற்கடல் - லா..ரா எழுதிய நூலைப் படித்து வருகிறேன். இது எழுத்தாளரின் சுயசரிதை. அவரின் வேலை, குடும்பம், உறவுகள் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிறது. பிராமணர்களின் வாழ்க்கை சார்ந்தது என்பதால் அனைவரையும் ஈர்க்கும் நூல் என்று கூறமுடியாது. மனிதர்களைப் பற்றி விவரிக்கும் இடங்கள், சில நகைச்சுவையான விவரிப்புகளில் எழுத்தாளர் பெயர் தெரிகிறது. அலுவலக வேலை உங்களுக்கு பழகும் என்று நினைக்கிறேன். சொந்த ஊரில் வேலை செய்வது அனைவருக்கும் கிடைக்காத வாய்ப்பு. வேலை நேரத்தை சரியாக அமைத்துக்கொண்டால் சிக்கல் இருக்காது.


நன்றி!

.அன்பரசு














கருத்துகள்