வாழும் அலாரமாக மாறிய கதையை கேட்க ஆசையா? கடிதங்கள்

 

வாழும் அலாரமாக மாறினேன்!

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?


உங்களது நாளிதழ் பணிகள் இப்போது எளிமையாகி இருக்கும் என நம்புகிறேன். எங்கள் பத்திரிகையிலும் வேலைகள் எப்போதும்போல வேகம் பிடித்து நடந்து வருகின்றன. தினசரி நானும் அலுவலக சகாவுமான பாலபாரதி சாரும் ரயில்வே ஸ்டேஷன் வரை நடந்து வருவோம். அவர் ரயில் ஏறி மடிப்பாக்கம் வரை செல்கிறார். குங்குமத்தில் வேலை செய்தபோது பொறுப்பாசிரியராக இருந்தவர் என்னை அதிகாலை எழுந்து அவருக்கு போன் செய்யச் சொல்லி வற்புறுத்தியதை சொன்னேன். உடனே பாரதி சார், இது சாதிக்கொடுமை தானே என்று சொல்லி டிவியில் வேலை செய்தபோது அவர் பார்த்த விஷயங்களை பேசத் தொடங்கிவிட்டார். இந்த விஷயத்தை உங்களிடமும் சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.


அப்போது இருந்த சூழலில் இதுபோல பொறுப்பாசிரியர் பேசுவார் என்று நினைக்கவில்லை. பாரதி சார் சொன்னது உண்மையாகவும் இருக்கலாம். நான் அந்த சமயத்தில் அந்த கோரிக்கை வினோதமாக இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதன் பின்னணி இப்படி இருக்கும் என நினைக்கவில்லை. நான் அவர் அப்படி கூறியதும், என்னடா சீனியர் இப்படி சொன்னார் என அடுத்தநாள் நேரமே எழுந்து போன் செய்தேன். தனது ஏரியாவில் கரண்ட் இல்லை. எனவே போன் செய் என்று முதல் நாள் சொல்லியிருந்தார். நான் நேரமே எழுந்து போன் செய்ததைப் பார்த்த அறை நண்பர், யாருக்கு இந்த நேரத்தில் போன் செய்கிறாய் என்று சொல்லிக்கொண்டு அவரும் எழுந்துவிட்டார். விஷயத்தை சொன்னதும் அவர் கடுமையாக கடிந்துகொண்டார். அடுத்தநாள் நான் போன் செய்யவில்லை. பொறுப்பாசிரியர் அதனை சீரியசாக எடுத்துக்கொண்டு என்னை பார்க்கும்போதெல்லாம் சொல்லத் தொடங்கினார். நான் சிரித்துக்கொண்டே கடந்து சென்றுவிடுவேன். இப்போதும் கூட பாரதி சார் சொல்லும்வரை அதனைப் பற்றி பெரிய எண்ணமில்லை. முடிந்துபோன விஷயம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. உலகம் பெரியது. அவரவர் அறிவுக்கு எட்டியதைத்தானே செய்யமுடியும்? வீட்டில் அம்மாவையும் அப்பாவையும் கேட்டதாக சொல்லுங்கள்.


நன்றி!


.அன்பரசு


==============================================








மொழிபெயர்ப்பு பணியில் தகிடுதத்தம்!


மயிலாப்பூர்


6.3.2021



அன்புத்தோழர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?


புதிய நூல்களை வாங்க புத்தக கண்காட்சிக்கு சென்றேன். இதுபற்றி உங்களிடம் முன்னமே போனில் பேசியிருப்பேன். உங்களுடைய நிருபர் பணி எப்படி இருக்கிறது? அம்மாவும் அப்பாவும் நன்றாக இருக்கிறார்கள் அல்லவாழ நான் இப்போது்தான் சுப்பாராவ் மொழிபெயர்த்த லைபாக்லை ஆன்டி என்ற வடகிழக்கு சிறுகதைகளை படித்துக்கொண்டு இருக்கிறேன். ஏறத்தாழ படித்து முடித்துவிட்டேன் என்றே சொல்லலாம். இதில் எனக்கு மூன்று சிறுகதைகள் மனதிற்கு நெருக்கமாக அமைந்தன. மற்றொரு மோதி, நம்பிக்கை, பாசனின் பாட்டி ஆகியவை சிறப்பாக எழுதப்பட்டிருந்தன. இந்த சிறுகதைகளில் அடிப்படையாக பழங்குடி மக்களின் வாழ்க்கை, பல்வேறு இனக்குழு மக்களின் ஒற்றுமை, ஏழ்மை, அவர்களுக்கு இடையில் ஏற்படும் பிரிவினை சண்டை, மதப்பிரச்னை, அரசியல் ஆகியவற்றைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.


பாரதி புத்தகாலயம் வெளியீடு என்பதால் கதைகளின் தேர்வு இப்படி அமைந்திருக்கிறது என நினைக்கிறேன். இதை மொழிபெயர்த்துள்ள சுப்பாராவ் பற்றி அலுவலக நண்பரிடம் கேட்டேன். அவர், அதற்கு எந்த நம்பிக்கையும் தெரிவிக்கவில்லை. கூகுள் டிரான்ஸ்லேட் வசதியை அப்படியே பயன்படுத்தி நூலை எழுதுபவர் என்று கூறினார். இதற்கு எடுத்துக்காட்டாக, எம்.எஸ். சுப்புலட்சுமி நூலின் ஒருபகுதியை எடுத்துக்காட்டி பேசினார். சங்கடமாக இருந்தது. எழுத்தாளர்கள் நிறைய வேலைகளை ஒப்புக்கொண்டு எழுதுவதால் இப்படி தொழில்நுட்பத்தை குறுக்குவழியில் பயன்படுத்திக்கொள்கிறார்களோ என்று தோன்றுகிறது.


பாரதி புத்தகாலயத்தைப் பொறுத்தவரை பெரிதாக நூலை பிழைத்திருத்தம் எல்லாம் பார்ப்பதில்லை. எழுதியவுடனே நூலை அப்படியே அச்சடித்து தங்கள் புத்தக கடைகளுக்கு அனுப்பிவிடுவார்கள். இதற்கு நான் வாங்கிய ரித்விக் கடக் பற்றிய நூலே ஆதாரம். ஏராளமான எழுத்துப்பிழைகள் இருந்தன. அலுவலக சகா ஒருமுறை ஏதாவது புத்தகம் ஒன்றை எழுதிய பாரதி புத்தகாலயத்திற்கு கொடு. காசு கிடைக்காது. ஆனால் அனைத்து இடங்களுக்கும் புத்தகம் சென்று சேரும் என்று சொன்னார். எனக்கு அப்படி ஒரு வரத்தை அவர்கள் தரவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.


இப்போது அலுவலக நண்பர் பாலபாரதி எழுதிய பூமிக்கு அடியில் ஒரு மர்மம் என்ற சிறுவர் நாவலை படித்து வருகிறேன். கதை நன்றாக இருந்தாலும் இதற்கான ஓவியங்கள் விகடன் வார இதழில் ஜோக்குகளுக்கு வரைவார்களே அந்த தரத்தில் இருக்கிறது. ஏன் இப்படி என எழுத்தாளரிடம் கேட்டதற்கு, காசு குறைவாக கொடுத்தால் இப்படி படம் வரையும் ஓவியர்கள்தானே கிடைப்பார்கள் என்று சொன்னார். ஓவியர் பிள்ளை என்பவர் குறைந்த காசில் சல்லிசான தரத்தில் படங்களை வரைந்துள்ளார். படங்களை பார்க்காமல் நாவலை மட்டும் படித்தால் வாசகர்களின் மனநிலை சிறப்பாக இருக்கும்.


ராயப்பேட்டையில் ஒருவாரமாக அதிமுக கட்சியினரின் தொல்லை இருக்கிறது. கட்சிக்கு வரும் ஆட்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. கட்சி அலுவலகம், டீக்கடை, காபிக்கொட்டை அரைத்து விற்கும் இடம், படிக்கட்டுகள் என அனைத்து இடங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள். இதனால் நாங்கள் செல்லும் டீக்கடைகளில் நிம்மதியாக நின்று டீ குடிக்க முடியவில்லை. சாண்ட்விட்ச் சாப்பிட முடியவில்லை. இந்துஸ்தான் டிரேடிங் கம்பெனிக்கு வரும் குட்டைப்பாவாடை பெண்களை ரசிக்க முடியவில்லை. இரட்டை இலை கொடியைப் பிடித்தபடி வாகனங்கள் வேகமாக விரையும் சாலையில் ஒருவர் நிதானமாக நடந்துபோகிறார். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.


சந்திப்போம். நன்றி!


.அன்பரசு







கருத்துகள்