கல்யாண ஏஜென்சிக்கு உதவும் ரிலேசன்ஷிப் குரு! - தி அன்டேட்டபிள் - கொரிய டிவி தொடர்

 






அன்டேட்டபிள்


கொரிய தொடர்


எஸ்பிஎஸ் டிவி 




டைவராக இருந்து அதனை கைவிட்டு பிழைப்புக்காக கல்யாண ஏஜென்சியில் வேலை செய்கிறார்  ஜியோன் இயோம். இவளை சிறுவயதிலிருந்து பார்த்தபடி ஏன் காதலித்தபடி இவர்களது வீட்டிலேயே வாழ்கிறான் மருத்துவர்  ஜூன் சூ. ஜியோன் இயோமின் கல்யாண ஏஜென்சியில் திடீரென நெருக்கடி நிலை.  இவர்களின் கம்பெனி ஏற்பாடு செய்த அனைத்து டேட்களிலும் செட்டே ஆகாத நபர்கள் இருப்பார்கள் அல்லவா? அவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. இவர்களுக்கு சீக்கிரம் கல்யாணம் செய்து வைக்காவிட்டால் ஜியோன் இயோமின் வேலை காலியாகிவிடும் சூழல். 

அந்த நேரத்தில் லே சிக் என்ற பத்திரிக்கையில் சார்லி என்பவர் மனித உறவுகள் தொடர்பான பத்தி ஒன்றை எழுதுகிறார். இதனை படித்து பலரும் டேட்டிங் தொடர்பான அறிவை பெறுகிறார்கள். குறிப்பாக ஜியோமின் மருத்துவ நண்பர் ஜூன் சூ கூட.  இதே பத்தியால்தான் ஜியோமின் டைவிங் கோச் பெண்மணி கூட தற்கொலை முடிவுக்கு செல்கிறாள். உண்மையில் அதனை எழுதுவது யார் என ஜியோம் கண்டுபிடிக்க நினைக்கிறாள். அப்படி கண்டுபிடித்தால் அவரோடு இணைந்து வேலை செய்து அன்டேட்டபிள் ஆட்களுக்கு கல்யாணம் செய்து வைத்து வேலையை காப்பாற்றிக்கொள்ளலாமே அதுதான் பிளான். இப்படி செல்லும்போதுதான் அதனை உண்மையாக எழுதுவது ஆர்ட் கேலரி ஓனர் ஹூன் நாம் என்பது தெரிய வருகிறது. ஆனால் அவன் நேரடியாகவே ஜியோன் இயோமினால் பாதிக்கப்பட்டிருப்பதால், இவளைக் கண்டதும் பயந்து ஓடுகிறான். ஒரே முடிவாக உதவ முடியாது என்று சொல்லிவிடுகிறான். ஆனால் அவனது பலவீனம் ஒன்றை ஜியோம் கண்டுபிடிக்கிறாள். அதுதான் அவனது பொம்மை சேகரிக்கும் பைத்தியம். 




அவளுக்கு சிறுவயதில் இறந்துபோன அத்தையிடமிருந்து டான் மேன் என்ற பொம்மை கிடைக்கிறது. அதனை எடுத்து ஹூன் நாமிடம் கொடுப்பதாக சொல்லுகிறாள். அவன் அவளது கோரிக்கையை ஏற்கிறான். அதற்கு முக்கியமான காரணம் அவனது கடந்த காலத்தில் இருக்கிறது . சிறுவயதில் அம்மா இல்லாத தனிமை ஹூன் நாமிடம் இருக்கிறது. ஜியோன் நாமிடம் அவன் பழகப்பழக மெல்ல அவளிடம் ஈர்க்கப்படுகிறான். ஆனால் அதனை அவன் ஜியோனிடம் வெளிப்படுத்துவதில்லை. அதற்கும் முக்கியமான காரணமிருக்கிறது. அதைப்பற்றி சொன்னால் கதையில்  சுவாரசியம் கெட்டுவிடும். 

ஆனால் இதற்கிடையே தனது நண்பனிடம்  ஹூன் நாம் விளையாட்டாக பந்தயம் ஒன்றைக் கட்ட அதனால் அவனது காதலே கைவிட்டுப் போகிறது.  இந்த காதல் கைகூடியதா,  இருவரின் இறந்த கால பிரச்னைகள் முடிவுக்கு வந்ததா  என்பதுதான் தொடரின் முக்கியமான திருப்புமுனை. 

காதலோ, கல்யாணமோ நட்போ எதுவாக இருந்தாலும் அந்த உறவுக்கு ஒருவர் எந்தளவு சின்சியராக இருக்கவேண்டும் என்பதை தொடர் எளிமையாக காட்சிகள் வழியாக வலிமையாக உணர்த்துகிறது. தாயில்லாமல் தனிமையில் வளர்ந்தவன் உறவுகளை எப்படி பார்ப்பான் என்பதும் தொடரில் விரிவாக கூறப்பட்டுள்ளது. இறக்கும் தருவாயில் அம்மா சொல்லும் ஒரு வார்த்தை, மகனின் மனதில் அழுத்தமாக பதிந்து காதல் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்பு என்பது புதியது. 




ஜூங் இயோமின் பாத்திரம், காதலுக்கான தனது வாழ்க்கையை இழக்குமளவு துணிந்தது. காதலும் பறிபோக, விளையாட்டு வாழ்க்கையும் கைவிட கிடைத்த வேலையை காப்பாற்றிக்கொள்ள அலைந்து கொண்டிருக்கிறாள். மீண்டும் காதல் வரும்போது இதயப்பூர்வமாக அதில் இணைகிறாள். ஆனால் அது வெறும் பந்தயம்தான் எனும்போது நொறுங்கிப் போய் மீண்டெழுகிறாள்.  நட்போ, காதலோ இரண்டையும் அவள் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்கிறாள்.  அவளது நீர் சார்ந்த பயத்தை ஹூன் நாம் தீர்ப்பதை  இறுதி அத்தியாயங்களில் காட்டியிருப்பது சரியாக இல்லை. அதனை முதலிலேயே செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

யூக் ரியோங்கை தவிர்த்த அனைவருமே நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். ஹூன் நாம் (நாம் ஹூங் மின்) புத்த மடலாயத்தில் ஜூங் இயோமிடம் மன்னிப்பு கேட்பது, பிறகு காதலியின் வீட்டு வாசலில் மழையில் நனைந்து கொண்டே உட்கார்ந்திருப்பது,  தனது அம்மா கொண்டாடும் பிறந்தநாள் பார்ட்டி வீடியோவைப் பார்த்து கண்ணீர் விடுவது, தனது வாழ்க்கை பாழாகிவிடும் என்பதற்காக அப்பாவை தனது கேலரியிலிருந்து விரட்டுவது, தான் சொன்ன வார்த்தையாலேயே காதல் பறிபோக விரக்தியில் தடுமாறி நிற்பது என நடிப்பில் பின்னி எடுத்திருக்கிறார். 


உறவுகளுக்கான வழிகாட்டி! 

கோமாளிமேடை டீம் 

GenreRomance comedy
Written byLee Jae-yoon
Directed byKim Yoo-jin
Starring
Country of originSouth Korea
Original languageKorean
No. of episodes32







கருத்துகள்