என்ஜிஓக்கள் குழந்தைகளை எப்படி தத்தெடுத்து விற்கிறார்கள்?

 

 

 

Graffiti, Wall, Texture, Social Issues, Help, Grungy

 

 

குழந்தைகள் விற்பனை- என்ஜிஓக்களின் தில்லுமுல்லு


கடந்த ஜூலை மாதம் 8ஆம் தேதி, தமிழ்நாட்டில் 295 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அரசு அறிவித்தது. அதில் கூடுதலாக இரு குழந்தைகள் பின்னர் இணைந்தனர். இவர்கள் இருவரும், இதயம் டிரஸ்ட் எனும் என்ஜிஓ மூலம் கோவிட் காரணமாக இறந்துபோனதாக கணக்கு காட்டப்பட்டு தத்து எடுக்க்ப்பட்டு காசுக்கு விற்கப்பட்டனர்.


இதயம் டிரஸ்டின் நிறுவனரான ஜி.ஆர். சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் இதற்கு முக்கியமான காரணம். இந்த அமைப்பு, மாநில அரசின் ஏராளமான விருதுகளை வென்றுள்ளது. காவல்துறையோடு இணக்கமாக செயல்பட்டு வருகிறது. தங்களது செல்வாக்கை திறமையாக பயன்படுத்திக்கொண்டு முகமூடியுடன் ஆதரவில்லாத குழந்தைகளை விற்பனை செய்துவந்திருக்கிறது. மதுரை கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கட்டிடத்தில் இதயம் டிரஸ்ட், பல்வேறு பணிகளை செய்துவந்துள்ளது. இந்த விவகாரம் வெளிவந்தவுடன் பிற குழந்தைகள் மற்றும் பெண்கள் காப்பகங்களும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளன. மதுரையில் மாநில அரசுக்கு சொந்தமான காப்பகம் ஒன்றும், மத்திய அரசின் உதவியுடன் நடைபெறும் காப்பகம் ஒன்றும் உள்ளது. இவையன்றி தன்னார்வ அமைப்புகள் நடத்தும் காப்பகங்களும் ஏராளமாக உள்ளன. மதுரை ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை பல்வேறு காப்பகங்களை ஆய்வு செய்துவிட்டு வந்துள்ளன.


மதுரையில் செயல்படும் 39 காப்பகங்களில் இருபதுக்கும் மேலான காப்பகங்களுக்கு அங்கீகாரம் கிடையாது என்பதே உண்மை. மதுரையில் ஐந்து காப்பகங்களுக்கு பதிவு செயல்பாடு நடக்கிறது. இரண்டு காப்பகங்களை அமைப்புகளே மூடிவிட்டன. ஒன்றை மாவட்ட நிர்வாகம் மூடியது. பதினொரு அமைப்புகள் தங்கள் காப்பக உரிமத்தை புதுப்பித்துள்ளன என சமூக நலத்துறை அலுவலர் ஹெலன் ரோஸ் கூறியுள்ளார்.


இதயம் டிரஸ்ட் எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற பலருக்கும் சந்தேகம் வரவே, அவர்கள் சங்க சட்டங்களின்படி பதிவாகியுள்ளது. சமூக நலத்துறையுடன் இணைக்கப்படாமல் செயல்பட்டுள்ளதால் முறைகேடான செயல்கள் வெளியே தெரியவில்லை. இந்தியாவில் பெரும்பாலான காப்பகங்களை நடத்தும் அமைப்புகள், அறக்கட்டளை அல்லது நிறுவனங்கள் சட்டப்படி அதனை பதிவு செய்வதில்லை. இப்படி அமைப்புகள் நடத்தும் காப்பகங்களை அரசு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வது அவசியம். அப்படி இல்லாதபோது ஏராளமான முறைகேடுகளை அரசு சந்திக்க நேரிடும்.


மதுரையில் ஐம்பத்தைந்து இல்லங்கள் குழந்தைகளுக்காக செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு வயது முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகள் தங்கி வருகிறார்கள். காப்பகங்களை முறையான சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்படாமல் நடத்தப்படுகின்றன. இதன் காரணமாக, இவற்றில் தங்கியுள்ள பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோரைப் பற்றிய விவரங்கள் சமூக நலத்துறைக்கு தெரிவதில்லை. முறையாக சமூக நலத்துறைக்கு தெரிவிக்காமல் வளர்க்கப்படும் குழந்தைகளை எளிதாக தத்தெடுக்க முடியாது. இதிலும் சட்டச்சிக்கல்கள் இருப்பதால், முறைகேடான வழிகளில் குழந்தைகளை விற்பனை செய்கிறார்கள். தவறான உறவில் பிறக்கும் குழந்தைகள் இந்த வகையில் வாழ்வதற்கான இடமின்றி பிச்சை எடுப்பது, விபச்சாரம், சட்டவிரோத தத்தெடுப்பு, உறுப்புகள் திருட்டு ஆகியவற்றுக்கு உள்ளாகின்றனர்.


இப்போது பிரச்னைக்கு உள்ளாகியிருக்கும் இதயம் டிரஸ்டில் கூட ஒரு சிறுவனை பிச்சை எடுப்பதற்கு பயன்படுத்தியுள்ளனர். மேலும் இருபத்தியெட்டு குழந்தைகள் இங்கிருந்து வேறு இடங்களுக்கு விற்கப்பட்டுள்ளனர். விவகாரம் வெளியே வந்ததும் அரசு இயந்திரம் ஒன்பது குழந்தைகளை வேறு காப்பகங்களுக்கு மாற்றியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் முறையாக குழந்தைகள் காப்பகங்களை பராமரிக்காத காரணத்தால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்

shobana

கருத்துகள்