கல்யாணம்.... ஆஹா கல்யாணம்! - கடிதங்கள்

 

கல்யாணம் ஆஹா கல்யாணம்!

 

 வடக்குப்புதுப்பாளையம்

 

                                     

 

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


நான் நேற்று பூப்புனித நீராட்டு விழா ஒன்றுக்கு சென்றேன். பெரியம்மாவின் பேத்திக்கான விழா. அம்மாவைக் கூட்டிக்கொண்டு பூந்துறை மண்டபத்திற்கு சென்றேன். நல்ல கூட்டம். நான் அங்கு எதுவும் சாப்பிடவில்லை. அம்மா சாப்பிட்டுவிட்டு வந்தார். எனக்கு சில உறவினர்களை அடையாளம் காட்டினார். பலருக்கும் எனது சகோதரர் குமார் அளவுக்கு நான் பழக்கம் ஆகவில்லை. அதில் வருத்தம் ஏதுமில்லை.


விழாவில் எனக்கு பாடம் எடுத்த கல்லூரி ஆசிரியர் ஒருவரைப் பார்த்தேன். எப்போதுமே பதற்றமாகவே பாடம் எடுப்பவர், இப்போது வாட்ஸ்அப் குரூப்பில் இணைந்து கல்யாணம் செய்து வைப்பதையும் வேலையாக செய்து வருகிறார். திருமணம் பற்றி விசாரித்தார். ஆனால் அதற்கு நான் பதில் சொல்லுவதை அவர் விரும்பவில்லை. அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்க நினைப்பதற்குள் அடைமழை பெய்வது போல அவரது திருமணம் செய்து வைக்கும் வேலைகளைப் பற்றி பேசிவிட்டு சென்றுவிட்டார். கல்லூரியில் அவரது பாடம் நடத்தும் பாணியும் இதுவேதான். வேகமாக பேசி பாடம் நடத்துவார். யாராவது சந்தேகம் கேட்டால் அமெரிக்கா தலிபான்களை விசாரிக்குமே அந்த ரீதியில் டீல் செய்வார்.


பூந்துறை சென்றால் ராட்டை சுற்றி பாளையத்தில் உள்ள நண்பன் தனபாலைப் பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர் கவுந்தப்பாடிக்கு திருமண விழா ஒன்றுக்கு சென்றுவிட்டார் என போனில் கூறினார். பிறகு வீட்டுக்கு வரும் வழியில் கூட போன் செய்தார். என்ன செய்வது? பார்க்க முடியவில்லை வருத்தமாக இருந்தது.


எனக்கும் திருமணம் செய்வதற்கு முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் செவ்வாய், ராகு, கேது என ஏராளமான நான் நேரடியாக சந்திக்காத பாத்திரங்கள் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் எதுவும் திகையவில்லை. வண்ணதாசனின் சிறுகதையைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இறுதிப்பகுதியை எட்டியிருக்கிறேன். மென்மையான உணர்வுகளைப் பேசுகின்ற கதைகள்தான் இவை.


நன்றி!


.அன்பரசு





=======================


உணவகத்தில் அழகின் சிரிப்பு!


மயிலாப்பூர்

8.2.2021


அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?


நான் இப்போது பத்திரிகை வேலைக்காக சென்னைக்கு வந்துவிட்டேன். நாளை முதல் ஆபீஸ் போக வேண்டும். எனக்கு வழங்கப்பட்ட வேலைகள் மாறுகின்றன. இவற்றை சமாளித்து செய்யவேண்டும். நேற்று நான் மம்தா பானர்ஜி பற்றிய நூலை வாங்கினேன். அட்டையில் போட்ட விலைதான் வாங்குகிறார்கள். கிராஸ்வேர்டு என்ற புத்தக கடையில் 299 ரூபாய் கொடுத்து வாங்கினேன். பிடிஎப்பில் நிறைய நூல்கள் இருந்தாலும் கூட அதனை படிக்க முடியவில்லை.


அடர்த்தியான கருத்துகளைக் கொண்ட நூல்களை பிடிஎப்பில் படிக்க முடிவதில்லை. கண் பயங்கரமாக வலிக்கிறது. இனிமேல் சில நூல்களை நூல் வடிவில் வாங்கிக்கொள்ள நினைக்கிறேன். வடபழனியில் மோகன்ராஜ் அண்ணாவைப் பார்த்தேன். பிறகு இருவரும் அங்கிருந்து சென்று சங்கீதா தேசி மனே என்ற ஹோட்டலுக்கு சென்றோம். இது அசோக் பில்லர் அருகில் உள்ளது. காம்போ உணவு ரூ. 50 என ஆளுக்கொன்று வாங்கிக்கொண்டு சாப்பிட்டோம். குறைந்த காசு தரமான உணவு என்பதால் நல்ல கூட்டம்.


வெயிட்டர்களைப் பொறுத்தவரை காம்போ ஆர்டர்களை எடுக்க பெரிதாக மெனக்கெடவில்லை. மிகச்சிலரே வேகமாக கொண்டு வந்து கொடுக்கிறார்கள். இதில் யாரும் வெய்ட்டர்களுக்கு டிப்ஸ் கொடுப்பதில்லை என்பதுதான் காரணம். லிப்ஸ்டிக்கில் தோசை படாமல் சாப்பிடும் அழகிகள் இருவர் எங்கள் டேபிளின் அருகே உட்கார்ந்து சத்தம் போட்டு சிரித்து பேசியபடி சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பலரும் அவர்களை கவனிக்கவேண்டும் என்பதில் இரு பெண்களும் கவனமாக இருந்தனர். அந்த ஹோட்டலில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தது போல எனக்குப் பட்டது. டிஸ்கவரி ஆப் இந்தியா நூலை தடாலடியாக ஆர்டர் செய்து வாங்கிவிட்டாலும் கூட அதனை படிப்பதில் முனைப்பு ஏற்படவில்லை. மெல்ல இப்போது முக்கி முனகி படித்து வருகிறேன். நேருவின் இலக்கணப்பூர்வமான எழுத்து, அவரின் அனுபவங்களை உடனடியாக படித்துப்புரிந்துகொள்ள தடையாக உள்ளது. அவரின் தவறல்ல. படிக்கும் எனக்குள்ள தடை என்றுதான் கூறவேண்டும்.


எங்கள் வீட்டில் பெற்றோருக்கு அடுத்தடுத்து உடல்நல கோளாறுகள் ஏற்பட்டு வருகிறது. நான் இனி எப்போது வீட்டுக்கு செல்வேன் என்று தெரியவில்லை. காசுக்கு அலைந்து அனைத்து விஷயங்களையும் விரைவில் மறந்துவிடுவேனோ என்று கூட படுகிறது. தினகரனில் வேலை செய்த திலீப் பிரசாந்த் உங்களுக்கு நினைவிருக்கிறாரா? அவர் இப்போது கலைஞர் டிவியில் வேலை பார்க்கிறார். அவரை திடீரென சந்தித்துப் பேசினேன். எங்கே வேலை செய்தால் என்ன? மகிழ்ச்சியாக இருக்கிறாரா என்பதுதானே முக்கியம். பூரிப்பாக இருக்கிறார்.


நன்றி!


.அன்பரசு


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்