அணுகுண்டு தயாரிப்பு, கொரில்லா பாதுகாப்பு, ஹெச்ஐவி வைரஸ் கண்டுபிடிப்பு, டிஎன்ஏவின் உருவ அமைப்பு கண்டறிந்த சாதனைப் பெண்கள்!
சியன் சுங் வு
இயற்பியல் ஆராய்ச்சியாளர்
சீனாவைத் தாயகமாக கொண்ட அமெரிக்க இயற்பியலாளர் இவர். அணு இயற்பியலாளராக உலகின் முதல் அணுகுண்டைத் தயாரிக்க பங்களிப்பை அளித்தவர்.
1949ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிச ஆட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக அமெரிக்கா, சீனா உறவு பாதிக்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு வரையில் சியன் தனது தாய் நாட்டிற்கு திரும்பிச் செல்லமுடியாது தவித்தார்.
சீனாவில் உள்ள நான்ஜியாங் என்ற பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியலை கற்றுத்தேர்ந்தார். பிறகு அமெரிக்காவில் கதிர்வீச்சு பற்றி படிக்க சென்றார். இவரது பேராசிரியர் எர்னஸ்ட் லாரன்ஸ், அணு துகள்களை தூண்டும் கருவி ஒன்றை உருவாக்கினார். சியன் அதனைப் பயன்படுத்தி அணுக்களை பிரித்து கதிரியக்க ஐசோடோப்புகளை உருவாக்கினார். இவற்றில் புரோட்டான்கள் ஒரே எண்ணிக்கையிலும் நியூட்ரான்கள் வேறுபட்ட எண்ணிக்கையிலும் இருக்கும்.
1940இல் சியன் தனது படிப்பை நிறைவு செய்தார். கதிரியக்கம் பற்றி மேலும் அறிய அமெரிக்காவில் தங்கியிருந்தார். அப்போதுதான் அவருக்கு மான்ஹாட்டன் எனும் திட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. தனது துறையில் சாதனையாளராக இருந்ததால், இரண்டாம் உலகப்போரை முடித்து வைத்த அணுகுண்டைத் தயாரிக்கும் பணியில் இணைந்தார்.
போருக்குப்பிறகு அணுத்துகள்கள் பிற துகள்களைப் போல காலப்போக்கில் அழியாது என்பதை அழுத்தமாக சியன் நிரூபித்தார். இவர் தனது சோதனையை கோபால்ட் 60 என்ற தனிமத்தை வைத்து சோதனை செய்து சாதித்தார். அறிவியல் துறையில் சியன் செய்த சாதனைகளுக்குப் பிறகு பெண்கள் ஆர்வமாக இதில் பணியாற்ற முன்வந்தனர். இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது இவரின் உழைப்பு மட்டுமே.
டையன் ஃபோசி
உயிரியலாளர்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிறந்தவர். மலையில் வாழும் கொரில்லாக்களைப் பற்றிய முன்னோட்டமான ஆராய்ச்சியை செய்தவர். ஆராய்ச்சியின் இடையே படுகொலை செய்யப்பட்டு அந்த வழக்கு கூட இன்னும் தீர்க்கப்படவில்லை. உடல் மனம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு தெரபி அளிப்பவராக பணியாற்றினார். பிறகு ஆப்பிரிக்காவுக்கு 1963ஆம் ஆண்டு பயணித்தார். அங்கு சென்று குரங்குகளைப் பற்றிய ஆராய்ச்சியை செய்து வந்தார். ருவாண்டாவில் காரிசோகே ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கினார்.
கொரில்லாஸ் இன் தி மிஸ்ட் என்ற நூலை எழுதியுள்ளார். இதனை பின்னாளில் ஆங்கிலத் திரைப்படமாகவும் எடுத்தனர்.
மலைக் கொரில்லாக்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதை ஆவணப்படுத்தினார். அங்கு வேட்டையாடும் பழக்கம் அதிகமாக இருந்தது. கூடவே அதன் வாழிடங்களையும் அழித்து வந்தனர்.
டையன் கொரில்லாக்களுக்கு ஏற்படும் பிரச்னையை புரிந்துகொண்டார். அவற்றைப் போலவே தனது பழக்கங்களை மாற்றிக்கொண்டு பழகுவது இவரது அம்சம்.
1985ஆம் ஆண்டு டையன் படுகொலை செய்யப்பட்டார். பதினெட்டு ஆண்டுகள் கொரில்லாக்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இறந்தபிறகும் கூட இவரது ஆராய்ச்சியை டையன் ஃபாசி கொரில்லா ஃபண்ட் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம், ஆராய்ச்சியைத் தொடர்ந்தது.
டையனின் கொரில்லா ஆராய்ச்சிகள் வெளிவந்துதான் அதன் வாழ்க்கை, வாழிடங்கள் பற்றிய தெளிவு உலகிற்கு கிடைத்தது. பின்னர்தான், அவற்றைக் காப்பதற்கான வேலைகள் வேகம் பிடித்தன.
டிஜிட் என்ற கொரில்லாவை வளர்த்து வந்தார். குரங்கு இறந்தபிறகு புதைக்கப்பட்ட இடத்திலேயே டையனின் உடலும் புதைக்கப்பட்டுள்ளது.
பிரான்கோய்ஸ் பாரே சினோசி
ஹெச்ஐவி வைரஸ் கண்டுபிடிப்பாளர்
1980ஆம் ஆண்டு எய்ட்ஸ் பல லட்சம் மக்களை கொன்றது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்கோய்ஸ், பாதிக்கப்பட்ட நோயாளியை ஆய்வு செய்து வைரஸை கண்டுபிடித்தார். அதுதான் ஹெச்ஐவி.
சினோசியின் ஆராய்ச்சி ஹெச்ஐவி பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பாதிப்பைக் குறைக்க உதவியது.
ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய கண்டங்களுக்கு பயணப்பட்ட சினோசி, எய்ட்ஸ் பற்றி ஏராளமான ஆதாரங்களை சேகரித்து ஆராய்ச்சிகளை செய்தார். மேலும் இதுதொடர்பான அமைப்புகளிலும் இணைந்து பணிபுரிந்தார். 2008ஆம் ஆண்டு இவரது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றார்.இவருடன் வைரஸ் ஆராய்ச்சியாளர் லுக் மாண்டேக்னியர், ஜெர்மனியின் ஹரால்ட் ஜூர் ஹாசன் ஆகியோரும் பரிசு பெற்றனர்.
இப்போதும் கூட எய்ட்சிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் கூட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சினோசியின் ஆராய்ச்சி உதவியது.
ரோசாலிண்ட் பிராங்கிளின்
வேதியியலாளர்
வாழும் உயிரினங்களின் உடலிலுள்ள டிஎன்ஏவின் அமைப்பைக் கண்டுபிடித்து உலகிற்கு கூறியவர்களில் ரோசா முக்கியமானவர்.
ரோசாவின் அப்பா, அறிவியலுக்கு பெண்கள் பொருத்தமில்லை என்று கூறி அவநம்பிக்கையாக பேசி வந்தவர். ஆனாலும் ரோசா தனது திறமையால் அவரது பேச்சை பொய்யாக்கினார்.
1920ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லண்டன் நகரில் ரோசா பிறந்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை அறிவியல் பாடத்தை கற்றார். அப்போது டிஎன்ஏ பற்றிய அறிவை ஆராய்ச்சியாளர்கள் பெறத்தொடங்கிய காலகட்டம் அதன் அமைப்பு இப்படித்தான் இருக்கும் என யாருக்கும் தெரியவில்லை. அதன் ஹெலிக்ஸ் அமைப்பை முதலில் உலகிற்கு வெளிக்காட்டியவர் ரோசாதான்.
ரோசா, எக்ஸ்ரே டிப்ராக்சன் எனும் நுட்பத்தை பயன்படுத்தி டிஎன்ஏ அமைப்பை கண்டுபிடித்தார். இதனை போட்டோகிராப் 51 என்று குறிப்பிடுகின்றனர். பிரான்சிஸ் கிரிக், ஜேம்ஸ் வாட்சன் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் ரோசாவின் ஆராய்ச்சியை இன்னொருவர் மூலமாக திருடி ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக்கொண்டனர். ரோசாவுக்கு எந்த அங்கீகாரமும் இவர்கள் தரவில்லை. இவர்கள், டிஎன்ஏ அமைப்பை விரிவாக விளக்கி ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டனர். 1962ஆம் ஆண்டு வில்கின்ஸ், கிரிக், வாட்சன் ஆகியோருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இதிலும் கூட ரோசா புறக்கணிக்கப்பட்டார்.
வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகள், உரைகள், கண்டுபிடிப்புகளை ரோசா தான் புற்றுநோயால் இறக்கும் கடைசி காலம் வரை தொடர்ந்தார். 1958ஆம் ஆண்டு ரோசா காலமானார்.
100 வுமன் ஹூ மேட் எ ஹிஸ்டரி
கருத்துகள்
கருத்துரையிடுக