இந்தியாவில் வாழும் தேசதுரோகிகளின் பட்டியலும், விவரங்களும்!

 

 

தேசதுரோகம் செய்த பயங்கரவாதிகள்!



2014 முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேசதுரோக வழக்குகளின் எண்ணிக்கை 329ஆக உயர்ந்துள்ளது. இதில் தண்டனை வழங்கப்படும் வழக்குகளின் சதவீதம் 33.3 லிருந்து 3.3 சதவீதமாக குறைந்துவிட்டது. பிரிட்டிஷ் அரசு சுதந்திர போராட்டக்காரர்களை சிறையில் பிடித்துப் போட்டு சித்திரவதை செய்ய தேசதுரோக குற்றச்சாட்டு சட்டத்தை உருவாக்கியது. இன்று அதே மனநிலையில் இந்தியர்களை இந்தியர்களே ஆளும் நிலையிலும் சட்டம் வீறுநடைபோட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.


ஹரியானாவில் துணை சபாநாயகரின் கார் தாக்கப்பட்டது. இதில் நூறு விவசாயிகளின் மேல் தேசதுரோக குற்றச்சாட்டு பதியப்பட்டது. 124 ஏ எனும் இந்த காலனிய கால கொடுமை சட்டம் இந்தியாவில் தொடரத்தான் வேண்டுமா என உச்சநீதிமன்றம் ஜூலை 15இல் கேள்வி எழுப்பியுள்ளது.


தேச துரோகிகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.


ஆயிஷா சுல்தானா


திரைப்பட இயக்குநர்


டிவி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு மக்கள் மீது மத்திய அரசு உயிரியல் ஆயுதங்களால் தாக்குதல் நடத்துகிறது என்று மனம் திறந்து பேசினார். ஜூன் 7 ஆம் தேதி இப்படி பேசியவருக்கு உடனே வழக்கு தொடர்ந்து இவரை கூண்டில் ஏற்றியவர் மனம் புண்பட்ட மக்கள் அல்ல. அங்குள்ள பாஜக கட்சித்தலைவர்தான். உடனே அரசு அவரை அலைகழிக்கத் தொடங்கியது. கேரள உயர்நீதிமன்றம் இவருக்கு பிணையை ஜூன் 25 அன்று வழங்கியது.


திஷா ரவி, சூழல் போராட்டக்காரர்


கிரேட்டா துன்பெர்க் இந்தியாவில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்ட ஆவணத்தை திஷா வெளியிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. உடனே டெல்லியிலிருந்து கிளம்பி விலைவாசியைக் கூட பொருட்படுத்தாமல் கைது செய்ய காவல்துறை வந்துவிட்டது. இதிலிருந்துதான் டூல்கிட் என்பது பிரபலமான வார்த்தையாக மாறியது. இந்தியாவில் விவசாயிகளுக்கு ஆதரவாக எப்படி எங்கு என்னென்ன முறையில் போராடுவது என்ற பயங்கரவாத ஆலோசனைகள்தான் திஷாவின் ஆவணத்தில் இருந்தன. இந்த ஆவணம் காலிஸ்தானுக்கு ஆதரவான வலைத்தளங்களில் பகிரப்பட்டது என புதிய கண்டுபிடிப்பை இந்திய உளவு அமைப்புகள் செய்தன. பிப்ரவரி 13 அன்று கைதானவரை இழுத்தடித்து, தலைப்புச்செய்திகளில் அவரது பெயரை போட்டு இருபத்து மூன்றாம் தேதி பிணையில் விடுவித்தனர். வாட்ஸ்அப் குழு தொடங்குவது, டூல்கிட் எனும் ஆவணத்தை உருவாக்குவது தேச துரோகத்தில் வராது என நீதிமன்றம் கூறிவிட்டது.


வினோத் துவா


பத்திரிகையாளர்


டெல்லியில் மத்திய அரசு தனது கர சேவகர்களுடன் நடத்திய கலவரத்தைப் பற்றிய உண்மைகளை யூட்யூபில் சொன்னார். உடனே, காது சிவந்த பாஜக தலைவர் அஜய் ஷியாம் வினோத் துவா, அரசுக்கு எதிராக, பிரதமருக்கு எதிராக கொலை மிரட்டல் தீவிரவாத மிரட்டல் விடுக்கிறார் என கற்பனையாக புகாரை அளிக்க, பவ்யமாக காவல்துறை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்தது.


2021இல் உச்சநீதிமன்றம் துவாவை வழக்கிலிருந்து விடுவித்து, அரசு மீது விமர்சனம் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக அவரை தேசதுரோக வழக்கில் சேர்க்ககூடாது என கூறியுள்ளது.


அகில் கோகய்


அசாம் எம்எல்ஏ


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடினார். அதுபோதாதா தேச துரோக சட்டத்தில் உள்ளே தள்ளுவதற்கு? 2019ஆம் ஆண்டு டிசம்பர் 12 அன்று கைதானார்.

வன்முறையைத் தூண்டினார் என்பது இவர் மீதான புகார்.


சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தாலும் கூட குற்றச்சாட்டுகளை வலுவாக்க தேவையான ஆதாரங்களை உளவு அமைப்பு உருவாக்க முடியவில்லை. எனவே வழக்கு அரசுக்கு சாதகமாக வெல்லவில்லை. ஆனாலும் அகிலை அலைகழிக்க உளவு அமைப்புகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.


கமல் சாவரா


தேசிய கீத த்திற்கு அவமரியாதை செய்தார் என எழுத்தாளர் மீது புகார் செய்யப்பட்டது. இப்படி புகார் கொடுத்தது யார் என நினைக்கிறீர்கள்? நெஞ்சமெங்கும் தேசபக்தி பெருகியோடும் பாஜகவின் இளைஞரணிதான். கமல் எழுதிய நூலிலிருந்து

சிறுபகுதியை எடுத்து ராஜதந்திரமாக வழக்கில் இணைத்தனர்.



மாணவர்கள் நான்கு மணிக்கு தேசிய கீதம் பாடச்சொல்லி பள்ளியில் கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் சிறுநீர் கழிக்கும் அவசரம் இருந்தால் கூட அனுமதிப்பதில்லை. நான் தேசியகீத த்தை பாடாத சிறுநீர் கழிக்கச்செல்லும் மாணவனாகவே இருக்க விரும்புகிறேன் என்று நூலில் எழுதியிருந்தார்.


இவர்மீதான வழக்கை பதிவு செய்த காவல்துறை பின்னர் போராட்டங்கள் ஏராளமாக நடைபெறத்தொடங்கியதால் வாபஸ் பெற்றுக்கொண்டது.


டிவி 5 ஆந்திர ஜோதி


ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.ஆர். ராமகிருஷ்ண ராஜூ எம்பியின் நேர்காணலை ஒளிபரப்பி, மக்களின் வெறுப்பை தூண்டியதுதான் வழக்கு. நீதிமன்றத்திற்கு செல்லும்போது வழக்கு நிற்கவில்லை. ஊடக சுதந்திரத்தை சட்டம் மூலம் கட்டுப்படுத்துகிறார்கள் என நீதிபதிகளே தீர்ப்பில் கூறினர்.


சிகா சர்மா


அசாம் எழுத்தாளர்


சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் 22 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். சமூக வலைத்தளத்தில் அனைவரும் மெழுகுவர்த்தியை போட்டோஷாப் செய்து அஞ்சலி செலுத்த, சர்மா அவர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலை செய்தார்கள். அவர்களை எதற்கு தியாகிகள் என்று சொல்லுகிறீர்கள் என மனதில் உள்ளதைப் பேச தியாகிகளை அவமானப்படுத்திவிட்டார் சர்மா என வழக்கு போட்டனர்.


குவாகாத்தி உயர்நீதிமன்றம், இப்படி பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என தீர்ப்பெழுதி அம்மணிக்கு பிணையை வழங்கியது.


toi







கருத்துகள்