படித்த பெண்ணால் களேபரமாகும் கல்யாணம்! - வேரோட்டம் - கு.ப.ரா
வேரோட்டம்
முற்றுப்பெறாத குறுநாவல்
கு.ப.ராஜகோபாலன்
சென்னையில் கல்லூரியில் படிக்கும் திருவெழுந்தூர் பையனும், தஞ்சாவூர் பெண்ணும் காதல் வலையில் விழுகிறார்கள். இருவருமே பிராமணர்கள்தான். ஆனால் திருமணம் செய்வதில் பிரச்னை எழுகிறது. அதனை இருவரும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதை.
சந்திரசேகரன், கல்லூரியில் புகழ்பெற்ற ஆள். போட்டிகளில் கலந்துகொள்வது, படிப்பது என அனைத்திலும் முன்னணியில் நிற்பவன். அவன் மீது காதல் வயப்படும் பெண்களை அவன் பெரிதாக மதிப்பது கிடையாது. அப்படியிருந்தும் லலிதா என்ற பெண் அவன் போகும் இடமெல்லாம் வந்து என்னைப் பாரேன், என் அழகைப் பாரேன் என்று மௌனமாக மிரட்டுகிறாள். லலிதாவைப் பொறுத்தவரை கல்லூரில் உள்ள பெரும்பாலான ஆட்கள் தனது அழகுக்கு ரசிகர்களாக இருப்பதில் பெருமை. ஆனால் சந்திரசேகரன் இவளை கண்டுகொள்ளவே இல்லை என்றதும் அவளது ஈகோ காயம்படுகிறது. அப்படியென்ன அவனுக்கு ஆணவம் என அவனைப் பின்தொடர்கிறாள். இப்படி நாம் இருவரின் மனவோட்டத்தை புரிந்துகொள்வது கதாபாத்திரங்களில் பெயர்கள், அதற்குப்பிறகு மனவோட்டம் என எழுதப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், திருவெழுந்தூர் கல்யாண பஞ்சாயத்துகள் கடித வடிவில் செல்கின்றன. இப்படி மாறுபட்ட கதை சொல்லும் வடிவம் படிக்க சுவாரசியமாக உள்ளது.
கதை என்றால் பெரும்பாலும் ஆணின் மனவோட்டத்தில் பார்வையில் அமையும். இங்கு ஆணுக்கு இணையாக பெண்ணின் மனவோட்டம் உரையாடல்களில் வெளிப்படுகிறது. உதாரணமாக சந்திரசேகரன் லலிதாவிடம் அவளைப் பிடித்திருக்கிறது என்று சொல்லும் நூலின் தொடக்க இடம், அடுத்து அவள் எப்படி தன் அப்பாவை சம்மதிக்க வைத்தாள் என ஆச்சரியப்பட்டு பேசுவது, இறுதியாக மாடியில் லலிதாவோடு உடலுறவு கொள்ள அச்சாரம் போட்டு பேசுவது.
பிராமணக் குடும்பங்களில் உள்ள சிக்கல்கள், திருமணம், அதையொட்டி நடக்கும் சொந்த பந்தங்களுக்கு இடையிலான வம்பு தும்புகள் என நாவல் நிறைய இடங்களில் இயல்பாகவே நகருகிறது. இதில் முரணான இரு பாத்திரங்கள் உள்ளன. ஒன்று சந்திரசேகரனின் அப்பா, பழமையான ஆள். குளித்து முடித்தபிறகே காபி, உணவு, பலகாரம் என்று சாப்பிடுபவர். ஆனால் அவர் செய்யும் ரயில் பயணம் அவரது மனத்தை மாற்றிவிடுகிறது. அவரது மகனுக்கு வரும் மருமகள் எப்படியிருந்தாலும் சரி என்ற மனப்போக்கிற்கு வருகிறார்.
லலிதாவின் உபசரிப்பில் மகிழ்ந்து ஊருக்கு கிளம்பிச்செல்பவர், படிப்பிற்கும், குணத்திற்குமான வேறுபாட்டை உணர்ந்து திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்கிறார். அவரது மனத்தில் உள்ள சிந்தனைகள், மனைவியை வாயடைக்க செய்கிறது. எளிமையாக திருமணம் என்பது மகனுக்கான வாழ்க்கை. அவன்தான் முடிவு செய்யவேண்டும் என்று சொல்லி விடுகிறார். இறுதியில் சந்திரசேகரனுக்கு கடிதம் எழுதும்போது, ஊரைப் பார்த்தால் நாம் வாழ முடியாது. காலத்திற்கேற்ப நம்மை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றே சொல்லிவிடுகிறார். இது அவரது மகனையே ஆச்சரியப்படுத்துகிறது.
லலிதாவைப் பொறுத்தவரை சந்திரசேகரனின் நம்பிக்கைக்காக லிவ் இன் உறவில் இருக்கிறாள். அவளுக்கு அது பெரிய சிக்கலாகவே தோன்றவில்லை. அதேநேரம் மாமனாரைப் பார்த்து அவருக்கு பணிவிடைகள் செய்த பிறகு லலிதாவிடம் நிறைய விஷயங்கள் மாறுகின்றன. சந்திரசேகரின் அம்மாவின் நம்பிக்கை பெறுவதற்காக பல்வேறு விஷயங்களை அவள் விட்டுக்கொடுக்கவே முன்வருகிறாள். இறுதிப்பகுதியில் சந்திரசேகரனுக்கும் அவளுக்கும் இடையில் தர்க்க விவாதமே நடைபெறுகிறது. இவர்களுக்கு இடையில் இப்படி விவாதம் நடைபெறுகிறது என்றால் சுலோசனா, சுந்தரம் இடையே எந்த பிரச்னையும் எழாமல் இருக்க பணத்தை கூட சுலோசனா தானே முன்வந்து தள்ளி வைக்கிறாள். இந்த இடத்தில் பெண்களின் தைரியம் பற்றி எழுத்தாளர் பேசுகிறார் என்று சொல்லமுடியாது. ஒருவகையில் தங்களது வாழ்க்கைத்துணை மீதான நம்பிக்கையால் எடுக்கும் முடிவு எனலாம். இந்த வகையில் படித்தாலும் கூட பெண்கள் திருமண வாழ்க்கைக்காக தங்களை முட்டாள்கள் ஆக்கிக் கொள்வது போல ஆகிவிடுகிறது.
தங்களுடைய அறிவு , திறமை எல்லாமே தங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு கட்டுப்பட்டதுதான் என பெண்கள் முடிவெடுக்கும் நிலை பிராமணக் குடும்பங்களில் இருந்துள்ளது என்பது ஆச்சரியமானது.
பெரும்பாலும் கதை காட்சிப்பூர்வமானதாக இல்லை. முழுக்க அகவய உணர்வுகளை கொண்டுள்ளதால் உரையாடல்களும், சிந்தனைகளும் வாசகர்களுக்கு நெருக்கமாக உள்ளன.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக