தடுப்பூசியை விமர்சிப்பவர்கள் தேச துரோகிகள்!- பன் பட்டர் ஜாம்
எனதருமை மெகந்தியா நாட்டு மக்களே,
எனது உரையை பெருந்தொற்றையும் சமாளித்து வாழ்பவர்கள் நிச்சயம் கேட்பார்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு எப்படி நோய்த்தொற்று என்பது அதிர்ச்சியை அளித்ததோ, எனக்கும் அதேபோல்தான் இருக்கிறது. இதனால் நோயுற்றவர்களை என்ன செய்வது என்று தெரியாமல், தொடர்புடைய மாநிலங்களே என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன்.
சில மாநில முதல்வர்கள் என்னுடைய பெருந்தன்மையைப் புரிந்துகொள்ளாமல் தடுப்பூசி எங்கே, மருந்துகள் எங்கே என்று கேட்கின்றனர். அவை எங்களிடம் இருப்பு இருந்தாலும் அதிகபட்ச லாபத்திற்குத்தான் தேவைப்படுபவர்களுக்கு கொடுப்போம். அதுதானே சிறந்த வணிகமாக இருக்கமுடியும். இதை சிலர் விமர்சிக்கின்றனர். இவர்களுக்காகத்தான் வீபா எனும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். அரசை குறைசொல்பவர்களை விசாரணையின்றி, ஆதாரங்களின்றி சிறையில் வைத்திருக்கும் சட்டம் இது. இதனால் அரசு, சிறப்பாக செயல்பட முடியும்.
செயல்பாடு என்பதை பேச்சு என்று புரிந்துகொள்ளுங்கள். நோய்த்தொற்று பாதிப்பால் வெளிநாடு செல்லும் விமானங்களை தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, நேரத்தை எப்படி போக்குவது என தெரியவில்லை. மருத்துவத்துறை சார்ந்தவர்களை வீடியோ வழியாக சந்தித்து பேசினேன். இதுபோல உணர்ச்சி ததும்பும் குரல்களைக் கேட்டபடி அப்படியே தூங்கிவிட்டேன். எனது உதவியாளர் எழுப்பும்போது எழுந்துவிட்டேன். ஆனாலும் நேரலையில் அதனை பேசியவர்கள் பார்த்துவிட்டனர். தேசப் பாதுகாப்பு நிலை பற்றி யோசித்துக்கொண்டிருக்கும்போது கண் அயருவது இயல்பானதுதான். ஆனாலும் கூட இதனை கிண்டலாக பார்த்தவர்களை குறித்து வைத்திருக்கிறேன். விரைவில் இவர்கள் தேச துரோகியாகும் வாய்ப்பு தெரிகிறது.
மக்கள்தொகை குறைப்பு பற்றி திட்டம் தீட்ட ஆலோசித்த நேரத்தில் பெருந்தொற்று ஆபத்பாந்தவனாக வந்து காப்பாற்றியுள்ளது. இதனால் ஏராளமானோர் சிவனின் பாதத்தில் ஓய்வெடுக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைத்து மெகந்தியர்களின் ஆன்மாவிற்கும் இத்தகையை பேறு கிடைக்குமா? இவர்களின் உடல்களைத்தான் உடனே எரிக்க இடம் கிடைக்கவிலை என புகைப்படம் எடுத்து போட்டு அரசை குறை சொல்கிறார்கள். நமது நாட்டில் எதற்கு வரிசை இல்லை? நியாயவிலைக் கடை, சூப்பர் மார்க்கெட், காய்கறிக்கடை, மதுபானக்கடை என அ னைத்து இடங்களிலும் வரிசை உள்ளதே!
சுடுகாட்டில் வரிசையில் நிற்க மக்களுக்கு பொறுமை இல்லையா? உயிரைக் காப்பாற்றவும் அவசரம், அவர்களை எரிக்கவும் எதற்கு அவசரம்? இப்படி இருந்தால் எப்படி உறவினர்களுக்கு மறுவீட்டில் இடம் கிடைக்கும் யோசிக்கவேண்டாமா? பிணங்களை சாலையோரத்தில் போட்டு எரிப்பதை பற்றி புகார் சொல்லுகிறார்கள். மக்கள் இதற்கு முன்னரே சாலையில் நடந்து வந்து கஷ்டங்களை சந்தித்தார்கள். இப்போது அவர்களே முடிவெடுத்து பிணங்களை எரிக்கிறார்கள். இதற்கெல்லாமா அரசு பொறுப்பேற்க முடியும்?
இதுதொடர்பாக மருத்துவர் குகாந்திடம் பேசியபோது, அவர் பெருந்தொற்று பற்றிய கல்வியை எனக்கு அளித்தார். அவர் கொடுத்த தகவல்கள் எனக்கு அதிர்ச்சிகரமான பயத்தை ஏற்படுத்தியது. எனக்கே பாடம் சொன்னது கோபத்தை ஏற்படுத்தியதால், அவருக்கு ஓய்வே வழங்காமல் மருத்துவப்பணியை வழங்க அதிகாரிகளிடம் பரிந்துரைத்திருக்கிறேன். இதன்மூலம் அவரது அறிவு, பற்றாக்குறை இல்லாமல் மக்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன்.
அரசு மருத்துவமனைகளில் அரசு பல்வேறு வசதிகளை ஆண்டுதோறும் குறைத்துவந்தாலும் நம்பிக்கை குறையாமல் மக்கள் அங்கு சிகிச்சைக்கு வருவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. நான் ஏராளமான உதவிகளை செய்தும் கூட தனியார் மருத்துவமனைகள் வருமானம் அதிகரிக்கவில்லை என்பது வேதனையைத் தருகிறது. மக்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அரசிடம் கேட்டு சங்கடங்களை தேடிக்கொள்ளாதீர்கள். எனவே உங்கள் அருகிலுள்ள மருத்தவர்கள் அல்லது வேறு மருத்துவ ஆலோசகர்கள், செவிலியர்கள் இருந்தால் கேட்டு தெளிவு பெறுங்கள்.
பல்வேறு சமூக வலைதளங்களிலும் கூட மருத்துவர்கள் ஆலோசனை அளிப்பதாக தெரிகிறது. நான் எதையும் படிப்பது இல்லை. மனதில் தோன்றுவதை மட்டுமே எழுதுவேன் என்பதால் இதுபற்றி ஏதும் எனக்கு தெரியாது. தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என சிலர் பிரசாரம் செய்து அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துகிறார்கள். அரசு, பெரும்பாலான தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு விற்றுவிட்டதை நாளிதழில் இவர்கள் படிக்கவில்லையா? அரசு, குறைந்தளவில்தான் தடுப்பூசிகளை வைத்துள்ளது என்பதை மறைக்க கூட தெரியாத இவர்களின் மீது வீபா சட்டம் பாயும் என எச்சரிக்கிறேன். அரசு மருத்துவமனைகளுக்கு அனைவரும் வந்துவிடக்கூடாது என்படற்காகத்தான் தனியார் மருத்துவமனைகளுக்கு கூடுதல் விலையில் தடுப்பூசிகளை விற்றுள்ளோம் என்ற ராஜதந்திரத்தை மக்கள் விரைவில் தெரிந்துகொள்வார்கள். எனவே தடுப்பூசி பற்றி நானே ஏதாவது கூறினாலும் கூட அது போலிச்செய்தியாக எடுத்துக்கொண்டு அமைதியாக வீட்டில் ஓய்வெடுங்கள். அதுதான் மெகந்தியாவுக்கு நல்லது.
இந்த நேரத்தை எனது அமைச்சரவை சரியாக பயன்படுத்திக்கொண்டு பல்வேறு சட்டங்களை உருவாக்கியுள்ளனர். இவற்றை எல்லாம் தனியார் துறையினரின் வளர்ச்சிக்காகவும் , குவிஸ் வங்கியில் பணத்தை சேமிக்கவும்தான் செய்தோம். இது மெகந்தியர்களுக்கான பெருமைதானே? நமது வருமானத்தால்தான் குவிஸ் நாட்டே வளர்ச்சி பெற்று வருகிறது. நோய்த்தொற்று காலகட்டத்தில் போராட முடியாத நிலையில் மசோதாக்களை எளிதாக சட்டங்களாக்க முடியும் என்ற உண்மையை அரசு புரிந்துகொண்டுவிட்டது. எனவே, இனி மசோதாக்களை உருவாக்கினாலோ போதும். அதனை எதிர்ப்புகளின்றி சட்டமாக்கிவிடுவோம். இதனை பற்றி பேசினால் அவர்களுக்கு மெந்தி மொழியில் உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை பார்வையிடச்சொல்லினால் போதும். பல்வேறு மொழிகளைச் சேர்ந்த மக்களுக்கு இம்மொழி தெரியாத காரணத்தால் எங்களுக்கு வேலை எளிதாக முடிந்துவிடும். இதையும் தாண்டி பேசினால் அவர்களுக்கு வீபா சட்டம் மூலம் ஆதாயம் செய்யப்படும். இதில் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின்றி சாகும்வரை சிறையில் பராமரிக்கப்படுவார்கள். இவர்களுக்கு வயது அடிப்படையில் தானியங்களின் எண்ணிக்கை ஒதுக்கப்பட்டு சூப்பும், வேக வைத்த கொள்ளும் வழங்கப்படும். இது ஒருவேளைதான் மீதி வேளைகளில் நீர் தாராளமாக கொடுக்கப்படும். அரசு இந்த முறையில் ஜனநாயகத்தை பாதுகாத்து மக்களுக்கு சேவை செய்ய முடியும்.
பன்பட்டர்ஜாம்
கருத்துகள்
கருத்துரையிடுக