கோப்ளின் அரசரின் மகளை மீட்கும் ஸ்கூபி டூ குழு! - ஸ்கூபி டூ அண்ட் தி கோப்ளின் கிங்
ஸ்கூபி டூ அண்ட் தி கோப்ளின் கிங்
அனிமேஷன் படம்
வார்னர் பிரதர்ஸ் - ஹன்னா பார்பரா
இந்த படம் மாயாஜால மந்திரங்களைக் கொண்டது. கோப்ளின் அரசரின் மகளை பிடித்து வைத்துக்கொண்டு அவரின் சக்தியைப் பெற்று அனைவரையும் அடக்கியாள நினைக்கும் மேஜிக் கலைஞரை எப்படி ஸ்கூபி டூ, சேகி தோற்கடிக்கிறது என்பதுதான் கதை.
இந்த கதையில் வெல்மாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டதால் முழுக்கதையையும் தங்கள் பாணியில் ரகளையாக நகர்த்திச்செல்வது ஸ்கூபி டூ மற்றும் சேகி இணைதான்.
கோப்ளின் அரசரின் இளவரசி, தோற்றுப்போன மாய தந்திரக்கலைஞரை நையாண்டி செய்கிறது. அதனை பிடித்துவிட்ட அவர், அதன் சக்தியை வைத்து பிற மந்திரப் பொருட்களை வயதான கலைஞர் ஒருவரிடமிருந்து பெறுகிறார். குறிப்பிட்ட தினத்தில் கோப்ளின் அரசரையும் அவரது கூட்டத்தையும் உயிர்பெறச்செய்து, அவரின் கையில் உள்ள ஆயுதத்தைப் பெற்றால் உலகத்தை ஆள முடியும் என்பது மாய தந்திரக்கலைஞரின் பேராசை. இதனை படாதபாடுபட்டு அறியும் சேகி, ஸ்கூபிடூ இணை பூசணிக்காய் ஒன்றின் உதவியுடன் சூனியக்காரிகளை சந்திக்கின்றனர். அவர்களின் பறக்கும் துடைப்பத்தைப் பெற்று கோப்ளின் அரசரை சென்று சந்திக்க நினைக்கின்றனர். ஆனால் அதற்கு கோப்ளின் அரசரின் தளபதிகள் இருவர் இவர்களை ப் பற்றி அறிந்துகொண்டு தாக்குகின்றனர்.
கீழே விழுந்தவர்களுக்கு பட்டாம்பூச்சி தோற்றத்திலுள்ள இனத்தினர் உதவுகின்றனர். சேஜி, ஸ்கூபி நள்ளிரவு பனிரெண்டு மணிக்குள் கோப்ளின் அரசரின் ஆயுதத்தை
நைச்சியமாக திருடவில்லையெனில், மிஸ்டரி மெஷின் குழுவே விலங்குகளாக மாறிவிடும். இதனை எப்படி சாதித்தனர் என்பதை ஆட்டம் பாட்டம் நகைச்சுவையுடன் கூறியுள்ளனர்.
புராணக்கதையை அடிப்படையாக கொண்ட கதை என்பதால், மனிதர்களின் புத்திசாலித்தனமாக பித்தலாட்டம் என்பது ஏதுமில்லை. எனவே, கதையின் போக்கில் ஜாலியாக ரசித்துக்கொண்டே இருக்கவேண்டியதுதான். ஹாலோவீன் பார்ட்டி, எலும்புக்கூடுகளின் நடனம், ஓநாய்கள், பறக்கும் துடைப்பம், விலங்குகள் மனிதர்களாக மாறுவது, ஸ்கூபி டூ கோப்ளின் அரசரின் சக்தியைப் பெறுவது என ரகளையான மாற்றங்கள் படத்தில் நிறைய உள்ளன.
நல்லது வெல்லும்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக