பெற்றோரைக் கொன்ற கொலைகாரரை பின்தொடரும் தடயவியல் வல்லுநர்! டாக்டர் ஷின் சீனத் தொடர்
டாக்டர் ஷின்
சீன தொடர்
தடயவியல் வல்லுநர்களை கதாநாயகர்களாக்கும் படைப்பு. இதற்காகவே தடயவியல் வல்லுநரை விட புத்தியில் குறைந்த கேப்டனாக பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
தடயவியல் தொடர்பான இரண்டாவது சீனதொடரை இங்கு எழுதுகிறோம். இரண்டிலும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. குடும்பம் சார்ந்த மர்மமான பிரச்னைகள் தடயவியல் வல்லுநருக்கு இருக்கிறது. அதாவது தடயவியல் பிரிவின் தலைவருக்கு… அந்த பிரச்னைகளோடு பிற வழக்குகளையும் இணைத்து அவர் தடயங்களை சேகரிக்கிறார். குற்றவாளிகளை பிடிக்க கேப்டனுக்கு உதவுகிறார். இதோடு தலைவரின் கீழ் உதவியாளராக இருக்கும் பெண்ணை காலம் கடந்தேனும் நம்பிக்கை இழக்காமல் காதலிக்கிறார். இவை மாறாது நடக்கின்றன.
டாக்டர் ஷின் தொடரில் புதுமை என்னவென்றால், வன்முறையைக் குறைத்து காதலையும் இருக்கிறதா இல்லையா என பார்வையாளர்களை தேட வைத்திருக்கிறார்கள். ஷின்னை நாயகனாக்குவது சரிதான். ஆனால் அதற்கான போலீஸ் குழுவை வழிநடத்தும் கேப்டனை காஸனோவா அளவுக்கு காட்டி, புத்தியில்லாதவராக மாற்றிருக்க வேண்டுமா?
கதையில் சுவாரசியமான இடம் எதுவென்றால், கொலை செய்யப்படுபவர்களின் கடைவாய் பற்களை பிடுங்குவதுதான். பல்வேறு வழக்குகளை தீர்க்கும் அவசரத்தில் ஷின் கடைவாய்ப்பற்களை பொறுக்கி தனியாக வைத்திருக்கிறார். கிளைமேக்ஸில் ஷின்னுக்கு தப்பிக்க வாய்ப்பில்லாதபடி செமையாக திருப்பம் ஒன்று இருக்கிறது.
மற்றபடி கதையில் மூன்று பாத்திரங்கள்தான் முக்கியமானவை. ஷின், அவரின் பெண் உதவியாளர் டா பாவோ, கேப்டன். இதில் டா பாவோ பாத்திரம்தான் கொஞ்சம் ஆசுவாசம் அளிக்கிறது. ஜாலியான உரையாடல்களை டா பாவோ மட்டும்தான் பேசுகிறார். கூடவே இதற்கு கேப்டன் தனது பேபி காதலியுடன் இணைகிறார்.
ஷின் பாத்திரம், தொடரில் எங்குமே தனது அமைதியை இழப்பதில்லை. இரண்டு இடங்கள் தவிர. அதுவும் கடைவாய்ப்பற்களை பிடுங்கிய குற்றவாளி ஒருவனிடமும், மதுவில் இதயநோய் மாத்திரை கலந்து கொடுத்து தற்கொலை செய்துகொண்டார் என தடவியல் வல்லுநர் தவறாக அறிக்கை எழுதிவிட்டார் என்பதை அறியும்போதும்தான்.
ஷின் அதிபயங்கர புத்திசாலி. சாப்பிடும்போது கூட தொடர்புடைய பொருட்களைப் பற்றி டேட்டாவை அடுக்குவார். உடலை ஆரோக்கியமாக பராமரிப்பவர். இப்படி கடுகடுவென வழக்கு பற்றியே யோசிப்பவர் இருக்கும்போது கூட இருப்பவர் இன்னும் கூட ஜாலியாக இருந்திருக்கலாம். டா பாவோவுக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஷின் மீதான காதலையும் மரியாதையையும் அவர் முடிந்தளவு நடிப்பில் காட்ட முயன்றிருக்கிறார்.
இரட்டையர்களாக பிறந்து ஒரு மகனுக்கே சொத்துகள் சேர, போதைக்கு அடிமையானவன் எடுக்கும் அதிரடி முடிவு, தினசரி தன்னை கொடுமைப்படுத்தும் கணவன் கொலை செய்யப்போவதை தடுக்க மனைவி செய்யும் முயற்சியால் ஏற்படும் விளைவு, சித்தியின் பாரபட்சமான பாசத்தால் உடல் முழுக்க அடிபட்டு இறந்துபோகும் சிறுவனின் கதை, பெண்களின் உள்ளாடைகளை திருடி பின்னர் பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரனின் வழக்கு, மனைவியுடன் காதல் கொண்டு குழந்தை பெற்ற தம்பியைக் கொல்லும் அண்ணனின் தர்மசங்கடமான கதை, கேலி செய்ததால் இறந்துபோன காதலிக்காக பத்து ஆண்டுகள் காத்திருந்து கொல்லும் காதலனின் வழக்கு என தொடரில் சுவாரசியங்கள் நிறைய உள்ளன.
பணம், ஆசை என்பது மட்டுமன்றி அன்பு, அங்கீகாரம், பாசம், குடும்பம் ஆகியவற்றுக்காகவும் நிறைய குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை தொடரில் கதைகளாக தொகுத்து உள்ளனர். இயக்குநரின் புத்திசாலித்தனம் கதைகளின் தேர்வில் தெரிகிறது.
ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிய கிண்டல் தொடரில் தேவையில்லாமல் வருகிறது. பயங்கர ஒழுக்கமாக நடந்துகொள்ளும் ஷின் பற்றிய நக்கலை ஒருவகையில் ஏற்கலாம்.
நிதானமான தடயவியல் தொடர்.
கோமாளிமேடை டீம்
- Drama: Medical Examiner Dr. Qin
- Country: China
- Episodes: 20
- Aired: Oct 13, 2016 - Dec 15, 2016
- Aired On: Thursday
- Original Network: Sohu TV
- Duration: 30 min.
more details about the show
https://mydramalist.com/20284-medical-examiner-dr.-qin/cast
see the tv show
https://www.youtube.com/watch?v=cF5XBiuQvJI&list=PLKo0VT6EZQVrEJtggEpQQAYFfFthfB3kZ
கருத்துகள்
கருத்துரையிடுக