வரி கட்ட மக்கள் வாழ்ந்தாக வேண்டும்!
அன்புக்குரிய மெகந்தியர்களே,
பெருந்தொற்று காலத்தில் உடனடியாக பொதுமுடக்கத்தை கொண்டு வந்தபோது மக்கள் மகிழ்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அப்போதுதான் மகாத்மா போலவே பலரும் நடக்க தொடங்கினார்கள். அதுவும் நல்லதுதான். அப்போதுதான் மக்கள் நாடெங்கும் உள்ள சாலைவசதிகளைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ள முடியும். இந்த நேரத்திலும் வெளிநாடுகளுக்காக ஆக்சிஜன் சப்ளை பற்றி நான் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் பிராணவாயுவும், தடுப்பூசியும் கிடைக்காதபோது மெகந்தியர்களாகிய நாம் எப்படி மானமுடன் உயிர்வாழ முடியும்? நல்ல லாபத்திற்கு ஆக்சிஜனை எனது நேசத்திற்குரிய நண்பர்கள் விற்றனர். இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, மக்கள் நடக்கிறார்களே என சிலர் விமர்சனங்களை கிளப்புகிறார்கள். அதை பொய்யாக்க இதோ ஆக்சிஜன் டேங்கர் ஓட்டும் மனேஷிடம் பேசலாம்.
மனேஷ் எப்படி இருக்கீங்க?
உங்களின் ஆசிர்வாதத்தில் நல்லா இருக்கேன்யா
உங்க குழந்தைகள் படிச்சுட்டு இருக்காங்களா?
என்னோட மூணு பிள்ளைங்களும் படிச்சுட்டு இருக்காங்க ஐயா
மூணு குழந்தைகளை வளர்க்கிற அளவுக்கு உங்களிடம் பணம் இருக்குதா?
ஜினாக்ஸ் கம்பெனி எங்களை அக்கறையாக பார்த்துக்கறாங்க ஐயா
ம்ம்.. சீக்கிரம் வருவாய்த்துறையை விட்டு உங்க வீட்டுல சோதனையிட வேண்டியதுதான்.
எதுக்கு ஐயா?
பொதுமுடக்கத்தில் சேமிப்பை அரசு காலி செய்ய வைத்தாலும் கூட மூன்று குழந்தைகளை எப்படி உங்களால் கவனிச்சுக்க முடியுது? ஆச்சரியம்தான். குழந்தைகள் இணைய வழியில் படிகிறாங்களா?
ஆமா, ஐயா மூன்று பேருமே இணையவழியில்தான் படிக்கிறாங்க.
வண்டி ஓட்டும்போது எப்படி உணர்றீங்க மனேஷ்?
சாப்பிட்டு வண்டி ஓட்டும்போது வயிறு கொஞ்சம் திம்முன்னு இருக்கும். இறங்கி வெளிக்கு போய்ட்டு வந்துட்டா நெகிழ்வாகிடும் ஐயா.
நான் உங்க மனநிலையைக் கேட்டேன் மனேஷ்....
மக்களோட பணத்தை காலி செய்தபிறகு நீங்க எப்படி இருப்பீங்களோ அப்படியேதான் ஐயா நானும் இருப்பேன். ஆக்சிஜனை யாருக்கு வேண்டுமோ அவங்களுக்கு கொண்டு போய் கொடுத்துட்டு வந்துடுவோம்.
உங்கள் வேலைகளைப் பத்தி குழந்தைகள்கிட்ட பேசுவீங்களா?
என்னோட சம்பளத்துல பாதி வரியாக போயிடறதுனால, குடும்பத்தை கிராமத்திலேயே விட்டுட்டேன் ஐயா.
வீட்டுக்கு எப்போது போவீங்க?
எட்டு மாதங்களுக்கு ஒருமுறை போவேன்.
ஆக்சிஜனைக் கொண்டுபோய் மருத்துவமனைக்கு கொடுத்து உயிரைக்காப்பாத்துறது உங்களுக்கு பெருமை இல்லையா?
நாட்டோட அதிகாரியாக நாங்கள் வேலை செய்யறதை நீங்க வேடிக்கை மட்டும் பார்க்கறீங்க. ஆனா ஜினாக்ஸ் கம்பெனி வேலையாளா நான் கைகட்டிக்கிட்டு சும்மா நிற்க முடியாதுங்களே... வேலை செஞ்சுதான் ஆகணும் ஐயா.
மனேஷ் தன் மனதில் உள்ளதை பேசிட்டார். இதற்கான விளைவை அவர் சீக்கிரமே சந்திப்பார். இவரைப் போலவே நாடெங்கும் உள்ளவர்கள் வேலை செய்வதால்தான் அரசை யாரும் குறை சொல்வதில்லை. இருந்தாலும் அவர் பேசிய உண்மைக்காக அவர் மீது வரி ஏய்ப்புக்காக வழக்கு பதிவுசெய்ய தொடர்புடைய துறைக்கு உத்தரவிடுகிறேன். நீங்கள் நலமாக வாழ வாழ்த்துகிறேன் மனேஷ்.
ஆக்சிஜனை துறைமுகங்களுக்கு அருகில் கொண்டு போய் கப்பலில் ஏற்றி வெளிநாட்டுக்கு அனுப்பும் பணியில் ரயில்வே துறை உதவியாக இருந்தது. முதலில் முடியாது என்றவர்களை மிரட்டியவுடன் வழிக்கு வந்தனர். ஆக்சிஜனை விற்பனைக்கு எடுத்து செல்வதற்கு பெண்கள்தான் உடனே முன்வந்தனர். ஆண்களுக்கு இணையாக என்று சொன்னாலே எந்த முட்டாள்தனத்தையும் செய்ய தயாராக இருப்பவர்கள்தானே இவர்கள். பெண்கள் குழுவைத்தான் ரயில்வே நிர்வாகம் வேலைக்கு வைத்தது. சமையலுக்கும், சந்தோஷத்திற்கும் தவிர எதற்கும் லாயக்கில்லை என்று எப்போதுமே நினைப்பவன் நான். ஆனால் அதனை தவறோ என நினைக்க வைக்கும்படி ரயிலை இயக்கியுள்ளனர் இந்த பெண்கள். உண்மையில் இவர்கள் பெண்களா, அல்லது பெண்கள் ஆடைகளை அணிந்துள்ள ஆண்களா என்று கூட சந்தேகம் வந்தது. பின்னாளில் இவர்களை தனியறையில் சோதித்து மெய்யை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
நிலம், நீர், ஆகாயம் என மூன்று வழிகளிலும் நான் வெளிநாட்டினருக்காக உழைத்து வருகிறோம். வெளிநாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் கமிஷன் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இரண்டு நாட்கள் தேவைப்படும் ஆக்சிஜன் தயாரிப்பை, 2 மணிநேரத்தில் முடித்து அனுப்பியுள்ளோம். இயற்கை பேரிடர்களில் கூட மக்களைக் காப்பாற்ற வேண்டுமா என மலைத்த விமானப்படையினர், இம்முறை 1600 விமானங்களை பரங்கியர்களுக்காக இயக்கினர். சுபாய்,லோலிங்கப்பூர், மெல்ஜியம் என பல்வேறு நாடுகளுக்கு ஆக்சிஜனை அனுப்பி வைத்துள்ளனர்.
ராணுவ வீரர்களுக்கு சப்பாத்தியும், பருப்பும் கொடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் வேலை கொடுப்பதில் கிஞ்சித்தும் கருணை காட்ட மாட்டோம். எனவே, அவர்கள் உடலில் சக்தியின்றி மயங்கி விழும் வரை வேலைகளை வழங்க உயரதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் சமூக வலைத்தளங்களில் அரசை எதிர்த்து சோறு இல்லை , தயிருக்கு தொட்டுக்க ஆவக்காய் இல்லை என புகார்களை கூற மாட்டார்கள்.
பெருந்தொற்று காலத்தில் அனைத்து தொழில்துறையும் கீழே விழுந்தாலும் கோமணத்தை கட்டி செய்யும் விவசாயம் மட்டுமே பலரையும் காப்பாற்றி வருகிறது. பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள், சந்தை விலை குறைப்பு என செய்தாலும் கூட விவசாயிகள் எப்படியோ பிழைத்துவிடுகிறார்கள். எனது நேசமிக்க தொழிலதிபர்களின் உணவு நிறுவனங்களுக்கு ஆதரவாக கொள்கைகளை மாற்றினாலும் கூட அதற்கு எதிராக போராடுகிறார்கள். கடைகளில் சாதாரணமாக குறைந்த விலையில் பருப்புகளை வாங்குவதை விட பிராண்டட் பேக்கில் வாங்குவதால் உங்கள் மரியாதை தானே உயரும்? எலைட் வகுப்பிற்குள் மக்களை கொண்டு வருவதற்கான எனது ராஜதந்திரத் திட்டம் இது.
பல்வேறு மாநிலங்களில் விளையும் பழங்களை வருமானத்திற்காக ஏற்றுமதி செய்து வருகிறோம். இதன்மூலம் அரசுக்கு ஏராளமான வரி வருவாய் கிடைக்கிறது. வீடு, தண்ணீர் வழங்குவது பற்றிய எனது திட்டங்களை மக்கள் லஞ்சம் கொடுத்துதான் பெறுகிறார்கள் என்றாலும் கூட அதிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள் என்பது வியக்க வைக்கிறது. இது மெகந்தியாவுக்கு மட்டுமே உரியது என நினைக்க வைக்கிறது. ஏழாண்டுகள் எங்கள் ஆட்சியில் மக்கள்தொகையை திட்டம் போடாமலேயே குறைக்க முடிந்திருக்கிறது.
கட்சிக்கான கலவரப்படையில் ஏராளமான வேலையில்லாத மக்கள் சேர்ந்துள்ளனர். நிர்வாகம் பற்றிய பிரச்னைகளை பேசினால் நான் தொன்மை கோவில், வழிபாடு பற்றி பேசுவேன். கல்வி பற்றி பேசும்போது ஆற்றின் தூய்மை பற்றி பேசுவேன். உணவு பற்றி பேசும்போது, காய்கறி உணவு பற்றி பேசுவேன். எனவே, நீங்கள் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்லுவேன் என நினைக்காதீர்கள். அதற்கு எந்த அவசியமும் இல்லை. நாட்டில் மக்கள் தேவை என்பதன் பொருள், அவர்களது வாழ்க்கைக்காக அல்ல. வரி கட்டினால்தான் நாங்கள் வாழமுடியும் என்பதால். எனவே, ஆங்கில எழுத்துகளை இணைத்துக்கூட்டி பலவாறாக வரிகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அதை ஏற்று வரிகட்டுமளவு சம்பாதிப்பதே மெகந்தியர்களின் தேசிய லட்சியமாக இருக்கவேண்டும். அதைத்தான் அரசு விரும்புகிறது, உங்களது முன்மாதிரி செயல்நாயகனான நானும் விரும்புகிறேன்.
.............................
.........................
பன் பட்டர் ஜாம்
கருத்துகள்
கருத்துரையிடுக