நரசிம்மராவின் நூற்றாண்டு விழா மறக்கப்பட்டுவிட்டதா?

 







முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நூற்றாண்டு பற்றி காங்கிரஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.அவர்களுக்கு நரசிம்மராவ் பற்றி நினைக்கும்போது பாபர் மசூதி இடிப்பு நினைவுக்கு வந்திருக்கலாம். காங்கிரஸின் பின்னாளைய தோல்விகளுக்கும், பாஜகவின் எழுச்சிக்கும் பாபர் மசூதி அளவுக்கு வேறெந்த விஷயமும் உதவியிருக்காது என்பதே உண்மை. நரசிம்மராவை கொண்டாடும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி , ஆந்திர, தெலுங்கானா அரசுகள் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றன. 

இந்தியா அந்நிய செலவாணி பிரச்னையில் தவித்த போது 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்தார். இந்தியாவை கடன் பிரச்னையிலிருந்து மீட்க அவர் செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் இன்றுவரை நாட்டிற்கு உதவி வருகின்றன. தங்களிடமிருந்த  தங்கத்தை உலக வங்கியில் அடமானம் வைத்து 200 மில்லியன் டாலர்களை திரட்ட இந்தியா திணறி வந்தது. நரசிம்மராவ் 2004இல் காலமானபோது, நாட்டில் 140 பில்லியன் டாலர்கள் அந்நியசெலவாணி இருப்பில் இருந்தது. இதனை அவர் எளிதாக சாதித்து விடவில்லை. டாக்டர் மன்மோகனை நிதியமைச்சராக நியமிக்க பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக கூறுவார்கள். மன்மோகனை நிதியமைச்சராக நியமித்து  , அவருக்கு பிறரால் பாதிப்பு ஏற்படாதபடி பார்த்துக்கொண்டார். தன்மேல் யாராவது விமர்சனங்கள் வைத்தால் உடனே மன்மோகன் நான் பதவி விலகிவிடுகிறேன் என கோபப்படுவது வழக்கம். அவரை சமாதானப்படுத்தி கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் கட்சிக்காரர்கள், எதிர்க்கட்சிகள் என அனைவரையும் சமாளித்து மன்மோகனைக் காப்பாற்றினார் நரசிம்மராவ். இதனால்தான் அவர் நினைத்த பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய முடிந்தது. 

கூடுதலாக பஞ்சாப்பில் தீவிரவாதிகளின் தாக்குதலையும் ராவ்தான் கேபிஎஸ் கில்லை நியமித்து முடிவுக்கு கொண்டு வந்தார்.  நாட்டின் ஒற்றுமைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஏராளமான  பங்களிப்புகளை செய்துள்ளார் நரசிம்மராவ்.  ராஜிவ்காந்தி இறந்த ஒரு மாத த்திற்கு பிறகு கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமராக பதவியில் அமர்ந்தார் ராவ். அவருக்கு இப்படி பதவிக்கு வரவேண்டுமென ஆசை இல்லை. ராஜீவ்காந்தி காலத்தில் நரசிம்மராவ் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். மே 21, 1991 அன்று தேர்தல் பிரசாரத்தின்போது  ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். அப்போது இனி நாம் டெல்லியில் இருக்க வேண்டியதில்லை. நாம் பிறந்த கர்ம பூமிக்கு சென்று அரசியல் நாவல் ஒன்றை எழுத தொடங்குவோம் என்று நினைத்துக்கொண்டிருந்தார் ராவ். ஆனால் ராஜீவின் இறப்பு ராவின் தலையெழுத்தையே மாற்றியது. சரத் பவார் பிரதமராக ஆசை கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு கட்சியில் போதுமான ஆதரவு கிடைக்கவில்லை. 

நரசிம்மராவின் இறப்பைக் கூட டெல்லியில் நடத்துவதை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா விரும்பவில்லை. கட்சி அலுவலகத்தை கூட பூட்டி வைத்தனர். இதனால் அவரை பிறந்த ஊரான ஆந்திரத்திற்கு கொண்டு சென்று எரியூட்டினர். இதனால் எல்லாம் ராவின் பெருமை குறைந்துவிடாது. நேருவின் பாரம்பரியம் இல்லாமல் தான் செய்த செயல்களின் வழியாக  பெருமையை சம்பாதித்தவர் என்று ராவை நிச்சயமாக கூறலாம். இதுதான் சோனியா காந்தியை வெறுக்க வைத்திருக்கச் செய்திருக்கும். 


சூர்யபிரகாஷ் 

முன்னாள் தலைவர், பிரசார் பாரதி

TNIE

கருத்துகள்