அம்மாஞ்சி எப்படி ஆக்ரோஷ அசுரன் ஆகிறார்! - நோபடி

 






நோபடி 


Director: Ilya Naishuller


போலீஸ் ஸ்டேஷனின் விசாரணை அறையில் படம் தொடங்குகிறது. முகம் முழுக்க காயம்பட்டவர் மெல்ல கைவிலங்கு இறுகத்தில் உள்பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை எடுத்து பற்றவைக்கிறார். பிறகு, சட்டையின் உள்ளேயிருந்து பூனை ஒன்றை எடுத்து, அதற்கான உணவை சாப்பிடக் கொடுக்கிறார். அப்போதுதான் அவரையே கவனித்துக்கொண்டிருக்கும் டிடெக்டிவ்களை பார்க்கிறார். உன்னோட பெயர் என்ன என்று கேட்க நோபடி என்று சொல்லுகிறார். கதை தொடங்குகிறது. 

ஜான் விக் கதை என்னவோ அதேதான். அமைதியாக குடும்பத்தோடு வாழ்பவனை திடீரென ஒரு சம்பவம் உசுப்ப சூறாவளியாக சுழன்று வேட்டையாடுகிறான். கதையில் முக்கியமான விஷயம் சண்டைதான். விதவிதமான நுணுக்கங்கள், ஆயுதங்கள், தந்திரங்கள், கொட்டும் ரத்தம், சிதறும் கண்ணாடி, கார் துரத்தல்கள் என படம் பரபர வேகம். 

ஹட்ச் மான்செல் தனது மாமனாரின் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அவருக்கும் மனைவிக்கும் கூட நல்ல உறவு இல்லை. அவர்கள் பெரும்பாலும் பேசுவதே இல்லை. இந்த நிலையில் அவரது வீட்டில் திருட்டு ஒன்று நடக்கிறது. குண்டே இல்லாத துப்பாக்கியை எடுத்துக்கொண்டு ஆண், பெண் இருவர் திருட வருகிறார்கள். அவர்களை ஹட்ச் தடுப்பதில்லை. ஆனால் மகன் திருடனை பிடித்துக்கொள்கிறான். ஆனால் ஹட்ச் மகனிடம் அவனை விட்டுவிடு என்கிறார். இதனால்  திருட்டு தம்பதி, ஹட்சின் வாட்ச், செல்ல நாயின் கழுத்துப்பட்டையைக் கூட எடுத்து சென்றுவிடுகிறார்கள். அதற்குப்பிறகு மனைவி, மகன் என இருவரும் ஹட்சை கையாலாகவனாகவே பார்க்கிறார்கள். அவரின் மகள் என்னோட நாயின் கழுத்துப்பட்டையைக் காணோம் என அழுகிறாள். 

திருட்டுத்தம்பதியை பார்த்துவிட்டு தனது வாட்சை மீட்பவர், அந்த வீட்டில் அழும் குழந்தையைப் பார்த்துவிட்டு அவர்களைக் கொல்லாமல் வெளியே வருகிறார்.  பார்வையாளரான நமக்கும் அவர் யாராக இருப்பார் என யூகங்கள் தோன்றுகிறது. 

வாட்சை மீட்டுக்கொண்டு பஸ்ஸில் வருகிறார். அப்போது பஸ்ஸை நிறுத்தி இளம்பெண்ணிடம் ஐந்து இளைஞர்கள் வம்பு செய்கிறார்கள் .கோபத்தில் அவர்களை வெளுக்கும் வேகத்தில் பாதிப்பேர் ஐசியுவில் சேர்கிறார்கள். அதில் ஒருவன் ரஷ்ய மாபியாக்குழுத் தலைவரின் தம்பி. அப்புறம் என்ன? அடிதடி கொடிகட்டி வெடிதான். 

கமலின் விஸ்வரூபம் படத்தில் நடன சிகாமணி அதிரடியான மனிதராக எப்படி மாறுவார். அதேதான். இளைஞர்களை அடித்து துவைத்துவிட்டு வரும்போதுதான் மனைவியிடம் அவளை காதலிக்கிறேன் என்று கூறுவார். அவர்களது உறவும் மலர்ச்சி பெறும். இந்த நேரத்தில் வன்முறை குழுக்கள் மெல்ல ஹட்சை வேட்டையாடத் திட்டம் போடுகின்றன. ஹட்ச் வென்றாரா, ரஷ்யக் குழுத் தலைவன் வென்றாரா என்பதுதான் இறுதிக் காட்சி. 

கிளைமேக்சிலும் கூட அடுத்தடுத்த பாகங்களுக்கு ரெடி செய்துவிட்டார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஜான் விக் படத்தின் கதையை எழுதியவர்தான் இதனையும் எழுதியுள்ளார். இதில் நாயகனாக நடித்துள்ளவர்தான் படத்தின் தயாரிப்பாளரும் கூட. 

விஸ்வரூபம்  எக்ஸ்டென்டட்

கோமாளிமேடை டீம் 





 








கருத்துகள்