டிம் பெர்னர்ஸ் லீயின் ஆராய்ச்சிக்கு கிடைக்காத அங்கீகாரம்! - சூப்பர் பிஸினஸ்மேன்
சூப்பர் பிஸினஸ்மேன்!
டிம் பெர்னர்ஸ் லீ
இந்த தலைப்பின் கீழ் இவரைப் பற்றி எழுதினாலும் கூட டிம் பெர்னர்ஸ் லீயை தொழிலதிபர் என்று கூற முடியாது. இணையத்தை இவர்தான் உருவாக்கினார். இன்று உலகம் முழுக்க பல்வேறு ஸ்டார்ட்அப்கள் உருவாக்கப்பட்டு செயல்பட இவரது கண்டுபிடிப்பு முக்கியமான காரணம். கிடங்கு ஒன்றில் பொருட்களை வைத்துக்கொண்டு இணையத்தில் கடையை திறந்து அதனை விற்க முடியும் தொ்ழில்நுட்பத்தை யாராவது முன்னர் சொல்லியிருந்தால் நம்புவார்களா? இணையம் அதனை சாத்தியப்படுத்தியது.
வேர்ல்ட் வைட் வெப் என்பதை லீ கண்டுபிடித்தார். இவரது உதவியின்றி கூகுள், அமேசான் ஆகிய நிறுவனங்கள் உருவாகியிருக்கவே முடியாது. உலகம் முழுக்க உள்ள மக்கள் ஒன்றாக இணைய லீ வழியமைத்தார். இன்டர்நெட் என்பதை ஏராளமான கணினிகள் இணைக்கப்பட்டுள்ளதை வைத்து வரையறுக்கலாம். இன்டர்நெட்டை 1969ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராணுவ அமைச்சகம் கண்டுபிடித்தது. 1969ஆம் ஆண்டு அக்டோபர் 29 என்பதுதான் இன்டர்நெட்டின் பிறந்தநாள் என்று கூறலாம்.
லீ, 1955ஆம் ஆண்டு லண்டனில் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் இருவருமே கணித வல்லுநர்கள். பெற்றோர் இருவருமே தொடக்க கால கணினிகளை உருவாக்குவதில் பங்களிப்பு செய்தனர். பெராண்டி மார்க் 1 என்ற கணினியை உருவாக்கி வந்தனர். லீக்கு எலக்ட்ரானிக்ஸ் மீது ஆர்வம் இருந்தது. எனவே சாப்பாட்டு நேரத்தில் கூட செயற்கை நுண்ணறிவு கணினி விளையாட்டுகள் பற்றியே பேசுவது வழக்கம். வாண்ட்ஸ்வொர்த்தில் பள்ளிப்படிப்பை முடித்தவர், குயின் கல்லூரியில் இயற்பியல் எடுத்து படித்தார்.
பட்டம் பெற்றபிறகு, மென்பொருளுக்கு நகர்ந்துவிட்டார். பிளெஸ்ஸி டெலி கம்யூனிகேஷன் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். பிறகு, டிஜி நாஷ் லிமிட்டெட் நிறுவனத்திற்கு சென்றார். புத்திசாலித்தனமும், தீர்க்கமுமான முடிவுகளை எடுப்பவர் லீ. செர்ன் அமைப்பில் ஆறுமாதத்திற்கு ஆலோசகராக கூட இருந்தார்.
தனது கணினியில் இருக்கும் ஆவணங்களை இணைத்து பார்க்கும்படி ஒரு மென்பொருளை உருவாக்கினார். இதை அவர் என்கொயர் என்று அழைத்தார். இதனை த்தான் பின்னாளில் இணையமாக மாற்றினார். அப்போது லீ உருவாக்கியது அவரது கணினியில் மட்டும் செயல்பட்டது.
1981 முதல் 1984 ஆம் ஆண்டு வரையில் ஜான் பூல் இமேஜ் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் லீ பணியாற்றினார். அதற்குப்பிறகு மீண்டும் ஜெனிவாவில் இருந்த செர்ன் அமைப்புக்கு வந்தார். அப்போது அங்கு உள்ள ஏராளமான ஆவணங்களை எப்படி ஒன்றாக இணைப்பது என்பது யாருக்கும் தெரியாமல் ஒரே குழப்பமாக இருந்தது, அந்த வேலையை செய்பவர்களும் அயர்ச்சியில் இருந்தனர். ஹைப்பர் டெக்ஸ்ட்டில் ஆவணங்களை பார்க்கலாம் என்ற ஐடியாவை அவரது முதலாளி மைக் செண்டல் ஏற்கவேயில்லை. ஆனால் பெல்ஜியத்தைச் சேர்ந்த ராபர்ட் கலிலியாவு என்பவர் லீயின் ஐடியாவை ஏற்று உதவினார். இதற்கான ஆராய்ச்சிக்கு நிதியுதவியும் செர்ன் அமைப்பிலிருந்து பெற்றுத்தந்தார். ஆனால் இந்த ஐடியா வேலைக்கு உதவுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருந்தது. எனவே, யாரும் வெளிப்படையாக லீக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால் ராபர்ட்டும் லீயும் தனியாகவே இதனை உருவாக்கினர். இந்த மென்பொருள் ஸ்டீவ் ஜாப்ஸின் நெக்ஸ்ட் என்ற கணினியில்தான் அப்போது இயங்கியது.
1991ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 அன்று, இணையதளத்தை ஆன்லைனில் கொண்டு வந்தார். லீ இதனை உருவாக்கி கல்விக்காக பயன்படுத்த நினைத்தாலும் கூட அதில் பெரியளவு வெற்றி கிடைக்கவில்லை. பலரும் இதனை உருவாக்கியவரை இன்று மறந்துவிட்டனர். ஹைப்பர் டெக்ஸ்ட் முன்னரே கண்டுபிடிக்கப்பட்டாலும் கூட அதனையும் இன்டர்நெட்டையும் இணைத்தவர் லீதான். 1993இல் செர்ன் அமைப்பு, இதனை பலரும் பயன்படுத்தலாம் என வழங்கியது. 1994இல் வேர்ல்ட் வைல்ட் வெப் கன்சார்டியம் என்ற அமைப்பை லீ தொடங்கினார். அதுதான் வெப்பின் தரத்தையும், விதிகளையும் மேம்படுத்தி வருகிறது.
வேர்ல்ட் வைட் வெப்பை பிரபலப்படுத்தியதில் முக்கியமான மென்பொருள் நிறுவனத்தின் பங்கும் உள்ளது. மார்க் ஆண்டர்சன், எரிக் பினா ஆகியோர் இணைந்து உருவாக்கிய மொசைக் என்ற ப்ரௌசர்தான் லீயின் ஐடியாவை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தது. தொண்ணூறுகளில் இன்டர்நெட் என்பதே கிடையாது. அதனை மக்களிடம் கொண்டுபோய் சேர்த்தது மொசைக்தான். பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் வந்து மக்களை ஆட்கொண்டது தனிக்கதை.
இணையதளம் உருவாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இன்று உலகையே ஆட்டி வைக்கும் அமேசான் வலைத்தளம் உருவாக்கப்பட்டது. லீ வேர்ல்ட் வைட் வெப் என்பதற்கான ஐடியாவை தனியாகவே உருவாக்கினார். சூப்பர் பிஸினஸ்மேன் தொடரில் வலம் வருபவர்கள் பலரும் இதன்மூலமே வெற்றிக்கொடி நாட்டியவர்கள்தான். ஆனால் கூட லீ தனது கண்டுபிடிப்பினால் பெரியளவு பணம் சம்பாதிக்கவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆட்கள் பகிர்ந்த ஐடியாக்களின் மூலமாக தனது முயற்சி சாத்தியப்பட்டது என்று கூறும் பெருந்தன்மை லீக்கு உண்டு. பணம் கிடைக்காவிட்டாலும் கூட அரசின் விருதுகள், பல்கலைக்கழகங்களின் விருதுகள் இவருக்கு கிடைத்தன. தற்போது இணைய சமநிலைக்கு பாடுபட்டு வருபவர், 2004இல் கணினி அறிவியல் துறை பேராசிரியராக பணிபுரிந்தபோது, செமான்டிக் வெப் என்பதை உருவாக்கினார். கணினிகள் நாம் அளிக்கு்ம தகவலை தானே புரிந்துகொள்வதுதான் இதன் ஐடியா. 2009இல் வேர்ல்ட் வைட் வெப் பவுண்டேஷனை உருவாக்கினார்.
28 பிஸினஸ் திங்கர்ஸ் ஹூ சேஞ்ச்டு தி வேர்ல்ட் நூலிலிருந்து…
தமிழில் - கா.சி.வின்சென்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக