அதிதிகளே வெளியேறுங்கள்!- சுற்றுலாவை தவிர்க்கும் நாடுகள்
விருந்தினர்களே வெளியேறுங்கள்!
–
‘அதிதி தேவோ பவா’ என இந்திய அரசு
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை பன்னீர் தெளித்து சந்தனமாலை போட்டு அழைக்கும் நிலையில்
இத்தாலி, நார்வே, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் சுற்றுலா பயணிகளை உஷாராக கட்டுப்படுத்த
தொடங்கியுள்ளன. என்ன காரணம்? சூழல் பிரச்னைகளும், சுற்றுலா பயணிகளால் உள்ளூர் மக்களின்
எண்ணிக்கை குறைந்து கொண்டிருப்பதுதான்.
உலகமயமாக்கலால் வணிகத்தின் வடிவங்கள்
மாறி பெருமளவு மக்களின் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது சுற்றுலா பெருக்கத்திற்கு முக்கியக்காரணம்.
ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்தால் அந்த இடம் என்னாகும்? மாசடையும்தானே!
உலகின் தொன்மையான சுற்றுலாதளங்களும் இப்பிரச்னையில் சிக்கித் தவித்து வருகின்றன. வெனிஸ்,
பாரீஸ் ஆகிய நகரங்கள் சுற்றுலா பயணிகளின் நில, நீர்வழி போக்குவரத்துகளை குறைத்து தினசரி
வருகையை நிர்ணயித்து அனுமதிக்க தொடங்கியுள்ளன.
வெப்பமயமாதல் விளைவுகளால் அத்தியாவசிய
தேவைகளான குடிநீர், உணவு ஆகியவற்றுக்கான பற்றாக்குறை உலகெங்கும் அதிகரித்து வருகிறது.
அந்நிய படையெடுப்பு போல வரும் டூரிஸ்ட்டுகளுக்கு தங்குவதற்கு முன்னுரிமையாக வசதிகளை
அளித்தால் அந்நாட்டு/ அந்நகர மக்கள் தம் தேவைகளுக்கு எங்கே போவார்கள்? சுற்றுலாபயணிகளால்
அத்தியாவசிய தேவைக்கு தடுமாறிய பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் போராட்டங்களே அரசை
தூக்கத்திலிருந்து எழுப்பியுள்ளது. தில்லி ஆக்ராவிலுள்ள தாஜ்மஹால், கோவா கடற்கரை அதீத
சுற்றுலாவாசிகளால் குப்பை, மாசுக்களால் தன் இயல்பை இழந்துவருவதே சுற்றுலா சீரழிவிற்கான
சாட்சி. அதேசமயம் சுற்றுலா வருமானம் பல நாடுகளின் பொருளாதாரத்திற்கு முக்கியபலம் என்பதால்
விசா, விசிட் அனுமதி என சில விஷயங்களில் மட்டும் மெல்ல கட்டுப்பாட்டை உருவாக்கி வருகின்றனர்.
கடந்தாண்டில் உலகெங்கும் சுற்றுலா மூலம் 7.9 ட்ரில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்துள்ளது.
இயற்கையையும் காப்பாற்றுவதோடு சுற்றுலா வருமானமும் தேவை எனும் அரசுகள் நியூயார்க்கின்
நகர நிர்வாகத்தை பின்பற்றலாம். கார் உள்ளிட்ட வாகனங்களை தடை செய்து பறவைகள், தாவரங்களை
அதிகரித்து பசுமையான இடங்களை புதிதாக உருவாக்கி 4.3 கோடி டூரிஸ்ட்டுகளை கவர்ந்துள்ளனர்.
வியட்நாமின் ஹோய் அன் எனும் தொன்மை கிராமமும் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இயற்கை உயிர்ப்புடன்
உள்ள இடம். “சுற்றுலா பயணிகளை அதிகரிப்பதும், இயற்கையை காப்பதும் போர் போலத்தான் உள்ளது.
இதில் அரசுக்கு உள்ள பொறுப்பு, விதிவிலக்கின்றி மக்களுக்கும் உண்டு.” என்கிறார் இஸ்ரேல்
தூதர தலைவர் டனா குர்ஷ். சுற்றுலா நாட்டினையும் தன் நாடாக நினைத்து தூய்மை காத்து கண்ணியமாக நடந்துகொண்டால் தேசத்திற்கும் பெருமைதானே!
-ச.அன்பரசு
தொகுப்பு: ராஸி கிரிங்கோ