கூகுள் டெவலப்பர் மீட்டிங் 2019







கூகுள் டெவலப்பர்ஸ் சந்திப்பு


கூகுள் தன்னுடைய மென்பொருட்களை பல்வேறு மாற்றங்களை செய்யும் டெவலப்பர்களை சந்தித்துப் பேசும் நிகழ்ச்சி இது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, பிறந்தநாள் பார்ட்டி போலவே நடைபெறும். இந்த ஆண்டு இதோ இன்று அந்நிகழ்வு தொடங்குகிறது.

கூகுள் தேடுபொறியாக தன் வாழ்வைத் தொடங்கினாலும் ஆண்ட்ராய்டு, கூகுள் அசிஸ்டென்ட், தானியங்கி வாகனம், ஸ்மார்ட் போன், ட்ரோன்கள்  என அதன் ஆர்வம், தொழில் நீண்டுகொண்டே செல்கிறது. இதில் புதிய முன்னேற்றங்கள், சாத்தியங்கள் என்ன என்பதைப் பற்றித்தான் இங்கு பேசப்போகிறார்கள்.


இந்த ஆண்டு கூகுள் சந்தித்த பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. பாலின பாகுபாடு, பயனர்களை உளவுபார்த்த விவகாரம், போட்டி விதிகளை மீறியது(50 மில்லியன் டாலர்கள் அபராதம்), அமெரிக்காவுக்கு ஆயுத தயாரிப்பில் உதவியது. சீனாவுக்கென செம்மைப்படுத்தப்பட்ட தேடுபொறியை உருவாக்கி அளித்த விவகாரத்தில் ஊழியர்களுக்கு கருத்து வேறுபாடு என ஏராளமான சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதைப்பற்றியெல்லாம் சுந்தர் பிச்சை இங்கு பேசக்கூடும். முக்கியமாக பிரைவசி பற்றி.


கடந்த வாரம்தான் எஃப் 8 எனும் ஃபேஸ்புக்கின் டெவலப்பர்ஸ் சந்திப்பு நடந்து முடிந்தது. அதிலும் எதிர்காலம் பிரைவசியை நோக்கியே என்று மார்க் ஸூக்கர்பெர்க் பேசியிருக்கிறார்.


மேப்ஸ், நியூஸ், ஜிமெயில் என அனைத்தும் செயற்கை நுண்ணறிவு புகுத்தப்பட வாய்ப்புள்ளது. கூடுதலாக டியூப்ளக்ஸ் எனும் ஏஐ சாதனத்தை கூகுள் மேம்படுத்தி வருகிறது. அதைக்குறித்த அறிவிப்பும் இன்று வரலாம்.


கூகுள் மேக கணினிய முறையில் விளையாட்டுகளையும் தயாரித்து வருகிறது. ஸ்டேடியா என்ற விளையாட்டைக் குறித்த அறிவிப்பையும் அதன் மேம்பாடு குறித்தும் இந்த சந்திப்பில் பேசக்கூடும். ஆண்ட்ராய்டு க்யூ அடுத்த வெர்ஷனாக வரவிருக்கிறது. வைஃபை ஷேரிங், ஸ்கீரின் ரெக்கார்டிங் ஆகிய வசதிகள் குறித்த யூகங்கள் இப்போதே தூள் கிளப்புகின்றன.


கூகுளின் பட்ஜெட் போன், நெஸ்ட் ஹப் சாதனம் என புதிய பொருட்களின் அறிமுகமும் இன்று நடக்கலாம். பார்ப்போம் கூகுள் என்ன ஆச்சரியத்தை நமக்கு வழங்கப்போகிறது என்று.

நன்றி: வயர்டு