எளிய அசுரனின் எழுச்சியும் வீழ்ச்சியும் - அசுரன்





Image result for அசுரன் அரவிந்த் நீலகண்டன்





புத்தக விமர்சனம்


அசுரன்

அரவிந்த் நீலகண்டன்

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

மஞ்சுள்


622 பக்கங்கள் என்று எண்ணிப்பார்த்தால்தான் சற்றே அயருவீர்கள். அசுரன், ராவணனின் கதை.  அனைத்து சமூகத்தினருக்குமான ஆட்சியாக , மக்களுக்கு சமவாய்ப்பு கொடுப்பதாக அமைந்த இலங்கேஸ்வரனின் ரத்தமும் சதையுமான கதை.


ராவணன், கீழ்நிலை அசுரர்களில் ஒருவரான பத்ரன் ஆகியோரின் பார்வையில் நாவல் நகர்கிறது. ஒன்று அரசரின் பார்வை. இன்னொன்று மக்களின் பார்வை.


நாகலட்சுமி சண்முகத்தின் நெருடாத பிரமாதமான மொழிபெயர்ப்பு 622 பக்கங்களை மிக எளிதாக வாசிக்க உதவுகிறது. ராவணன் எப்படி அரசனாக உயர்கிறான் என்ற கதை எந்த ஜிம்மிக்ஸ் வேலைகளும் இன்றி இயல்பாக இருப்பது பருவம் பைரப்பாவை நினைவுபடுத்துகிறது.

அரவிந்த் நீலகண்டனின் எழுத்துக்குச் சான்று, மகாபலியிடம் நான் எப்படிப்பட்ட அரசனாக இருப்பேன் என்று கூறி மகாபலி கடைபிடிக்க சொன்ன அத்தனையையும் மறுத்துப் பேசுவது.


மண்டோதரி, இறுதியாக கணவனின் தவறுகளை வெடித்து பேசி சீதையை ராமனிடம் சேர்க்க கெஞ்சும் காட்சி.


ஆகியவை படிக்கும் வாசகர்களுக்கு மறக்க முடியாத பகுதிகளாக இருக்கும்.


ராவணன், அசுரன். இயல்பாக மனிதர்களுக்கு இருக்கும் ஆசை, பேராசை, பொறாமை என அனைத்தும் கொண்டவன். மகாபலியிடம் கூறிய அனைத்தையும் அவன் அப்படியே செய்கிறான். அதனாலேயே வீழ்கிறான்.


கும்பகர்ணன், பிரகஸ்தன் தன் அரியணைக்கு ஆசைப்படுவார்களோ என நினைக்கிறான். பிரகஸ்தனை கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அவமானப்படுத்துகிறான். ஆனால் இறுதியில் தான் அணிந்த பதவிக்கான நகைகளை கூட ராவணனிடம் திருப்பிக்கொடுக்கும்போது ராவணனின் அகங்காரம் கரைந்து ஒழுகுகிறது.

கும்பகர்ணனும் கூட நேர்மையானவன்தான். ஆனால் ராவணன் அவனை குடியிலிருந்து மீட்கும் வாய்ப்பிருந்தும் தன் கீரிடம் அவனுக்கு சென்றுவிடும் என்று எண்ணி அமைதியாக அவன் சரிவை வேடிக்கை பார்க்கிறான்.


ஆனால் வீபீசணன்தான் வேதம் படித்து ராவணன் உருவாக்கிய அத்தனை விஷயங்களையும் உடைக்கிறான். தன் கையகப்படுத்துகிறான். ராவணன் நம்பிய ஜாம்பலி, அவன் மகன் மேகநாதனைக் கொல்ல லட்சுமணனை கதவு திறந்து அனுமதிக்கிறான்.பிரகஸ்தன் கொல்ல வற்புறுத்திய வருணன் ராமனிடம் சேர்ந்து ராவணனின் நகரங்களை நெருப்பு அம்பு எய்து அழிக்கிறான்.

முக்கியமாக, மக்கள் வணங்கும் மழை தெய்வமான இந்திரன், அவனது தளபதி விஷ்ணு,  வர்க்க பிரிவினைகள், ராமனின் பின்னிருந்து அம்பு எய்யும் துரோகம், விதிகளற்று போர் செய்யும் தேவர்களின் தந்திரம் என நம் சமூகம் எப்படி பிரிவினைகளால் நாசமானது என்பதை காத்திரமாக நம் கண்முன் நிறுத்துகிறார் ஆசிரியர் அ.நீலகண்டன்.



நிறைய விஷயங்களைப் படிக்கும் போது நம் இந்தியாவில் தற்போது நடந்துவரும் அநீதிகளை நினைவுபடுத்துவது போலவே உள்ளது. 


முக்கியமான ராவணன் போரில் பின்தங்கும்போது தான் ஏழைகளை மிதித்து நடுத்தர மக்களுக்கு கல்வி, உதவித்தொகை, களியாட்ட விடுதிகள், தொழிற்சாலைகள் உருவாக்க உதவியது குறித்து மருகுகிறான். காரணம், அவர்கள் தான் செய்த உதவிகளுக்கு கைமாறாக நன்றியோடு இருப்பார்கள் என அப்பாவியாக ராவணன் நம்புகிறான். ஆனால் அவனுக்கு துணையாக எலும்புத்துண்டை நக்கிய ஏழை மக்கள் தம் மகன்களை போருக்கு அனுப்புகிறார்கள். இதை எண்ணி குற்ற உணர்வில் தூங்காமல் தவிக்கிறான்.


முக்கிய கதாபாத்திரங்கள் பிரகஸ்தன், மாரீசன், மயன், ஜாம்பலி, பத்ரன், மண்டோதரி, வேதவதி, வருணன், விபீசணன், மேகநாதன், இரண்டாவது மகன் அதிகாயன். 


இதில் மண்டோதரியை கடத்திச்சென்று நிர்வாணப்படுத்தி கட்டிப்போடும் தேவபடையின் அநீதியான நடத்தை பின்னர் சீதையை தீக்குளிக்கச்செய்ய நிர்பந்தப்படுத்தும்போது நம் மனதுக்குள் தோன்றுகிறது. அதே நிலை மீண்டும் லவ குசா என இருபிள்ளைகளைப் பெற்றபின்னும் சீதைக்கு ஏற்படுகிறது.

இம்முறை சீதை தற்கொலை செய்துகொள்கிறாள் என்ற செய்தி திடுக்கிடச்செய்கிறது. புரோகிதர்களின் ஆட்சியாக அயோத்தி மாறுவதை சம்புவன் இறப்பு உறுதிசெய்கிறது. அவன் தலையைக் கொய்யும்போது கைநடுங்குகிறது ராமனுக்கு. வேதமொழி கற்று மக்களிடம் சமஸ்கிருதத்தில் பேசும் மன்னன், மனைவி தற்கொலைக்குப் பின் உடைந்து போகிறான். இறுதியில் புரோகிதர்களின் நடத்தையைக் கேள்வி கேட்ட லட்சுமணனையும் கொல்கிறான். 


நாவல் முடிவு, இந்தியா முழுக்க வர்க்கப் பிரிவினை பரவியிருக்க பத்ரன் அதனை அறிந்துகொள்வது போல இருக்கிறது. 


பிரமாதமான கதை. நறுக்கென்ற வசனங்கள் என படிப்பதற்கு சோர்வு தராத நாவல் இது. நீங்களும் வாசியுங்கள். 


நன்றி: பாபு பெ. அகரம், கணியம் சீனிவாசன்


குறிப்பு: நாகலட்சுமி சண்முகம், டிகேஎஸ் சகோதர ர்களின் ஒருவரான முத்துச்சாமி என்பவரின் பேத்தி. 









பிரபலமான இடுகைகள்