குற்றவாளி காக்கிச்சட்டை - கவச்சம் எப்படி?
கவச்சம் (தெலுங்கு)
இயக்கம்: ஸ்ரீனிவாஸ் மாமில்லா
ஒளிப்பதிவு: சோட்டா கே நாயுடு
எஸ்எஸ். தமன்
போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய், நேர்மையான போலீசாக இருக்கவேண்டும் என்பதுதான் அவரின் அம்மாவின் ஆசை. அவரின் அப்பாவும் போலீஸ்தான். சாதாரணமாக ரிவைவ் இரண்டு லிட்டர் குடித்தது போல படத்தில் உலாவும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸூக்கு இது போதாதா?
யெஸ். படம் பார்க்கும் நமக்கும் வில்லன்களை அடிக்கும்போதே நவ துளைகளின் வழியாக ரத்தம் வழிகிறது. கதைக்கான முக்கியத்துவத்தை கைவிட்டு ஹீரோவுக்கு ஆரத்தி எடுப்பதிலேயே முழுப்படமும் நாசமாக போய்விட்டது.
விஜய், வேலை பார்க்கும் ஸ்டேஷனலில் சின்டகாயலா ஆவேசம் அவரின் உயரதிகாரி. ஆனால் அனைத்துக்கும் கமிஷன் பார்ப்பதில் வேகமாக இருக்கிறார். விஜயின் ஹானஸ்ட் வேகத்தை தடுக்க மாட்டேன் என்று கூறி, அதற்கான கிரடிட்டை தனக்கு கொடுக்க வற்புறுத்துகிறார். விஜய், சரி நல்லது நடந்தால் போதும் என அதையும் ஏற்கிறார்.
இதுவே ஒப்பனிங் பாடலோடு இருபது நிமிடமாச்சே! ஹீரோயின் எங்கப்பா என்றால் காஜல்(சம்யுக்தா சக்சேனா) ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகிறார். மாலில், தொலைந்த பர்சை எடுத்துக்கொடுத்து விஜயின் மனசை பிக்பாக்கெட் அடிக்கிறார். அப்புறம், பிக்பாக்கெட்டை துரத்திச்சென்று தற்செயலாக இரண்டாம் முறை சந்திக்கும்போது, எனக்கு பையன் பிறந்தால் அது காஜல் வயிற்றில்தான் என உறுதியாகிறார்.
ஊர், உறவு என எல்லாருமே வற்புறுத்த ஒருகட்டத்தில் காதல் சொல்ல காஜல் வேலைபார்க்கும் கஃபே வரையில் செல்கிறார். அங்கே பார்த்தால், அவருக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு என்றுசொல்ல, வருத்தத்தோடு அங்கிருந்து செல்கிறார்.
அப்பா, காதல் முடிஞ்சிருச்சேய் என்று கதை தொடங்கும் என நினைத்தால் , கதை தொடங்குகிறது. மெரின் பிர்சாதாவை கற்பழிக்க ஒரு கூட்டம் துரத்துகிறது. மேடமும் ஐந்து நிமிடத்தில் கழற்றும் உடையணிந்திருக்கிறார். விஜய் அவர்களை டிஷ்யூம் செய்து கற்பை காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அப்போது நடக்கும் ஒரு விபத்தால், தன் நேர்மையை விட்டுக்கொடுக்க வேண்டி வருகிறது. என்ன செய்தார் விஜய்? மெரின் பிர்சாதா யார், கஃபேயில் கல்யாணமான காஜல் ஹனிமூனுக்கு எங்கே போனார் என்பது வரையிலான கேள்விகள் உங்கள் மனதில் அலையடித்தால் கவச்சம் படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.
சொத்துக்காக கடத்தல் நாடகம் நடத்தி அப்பாவி இன்ஸ்பெக்டரை அவமானப்படுத்துவதுதான் விக்ரமாதித்யாவின்(நீல் நிதின் முகேஷ்) நோக்கம். அதற்கு அவர் ஆடும் ஆட்டத்தின் படைத்தளபதி அரவிந்த்(ஹர்ஷ்வர்த்தன் ரானே) இருவருக்கும் நடிப்பதற்கான வாய்ப்பு எள்ளளவும் இல்லை.
வருகிறார்கள். கோப ப்படுகிறார்கள். காரில் ஏறி போய்விடுகிறார்கள். ஆனால் விஜய்(சாய் ஸ்ரீனி) அத்தனை காட்சிகள். அதிர்ச்சியோ, காதலோ அனைத்துக்கும் ஒரே ரியாக்ஷன் கொடுத்து கொல்கிறார். அதனால் காஜல் மற்றும் மெரின் பிர்சாதாவை நாம் தன்னியல்பாக வேடிக்கை பார்க்க தொடங்கிவிடுகிறோம்.
எப்படி டைகர் என்ற உருப்படாத படத்திற்கு பிரமாதமான தீம் கிடைத்ததோ அதேபோல இந்தபடத்திற்கும் தீம் இசை அதிரவைக்கிறது. ஆனால் படத்தில் வெற்றிடம்தான் உள்ளது. பில்டப்புகளுக்கு ஏற்ற விஷயம் படத்தில் மிக குறைவு.
காமெடி மீட்டரை சிறிது ஏற்றியிருந்தால், இந்தளவு வறட்சி ஏற்பட்டிருக்காது. ஹீரோவுக்கு படம் முழுக்க போடும் சாம்பிராணி பில்டப்புகளால் தியேட்டரில் இருப்பவர்களுக்கும் ஆஸ்துமா வந்திருக்கும்.
நல்ல கதை. சாய் சீனிவாஸை வைத்தே படத்தை கொன்றிருக்கிறார்கள். ஸ்ரீனிவாஸ் சார் கொஞ்சமேனும் உணர்ச்சிகளுக்கு உடலை தானம் கொடுங்கள். இப்படி பிடிவாதம் பிடித்தால் நாங்கள் எப்படித்தான் படம் பார்ப்பது?
- கோமாளிமேடை டீம்