அல்லுடு சீனு - ரீவைண்ட் அரைச்ச மாவு
அல்லுடு சீனு!(Telugu, 2014)
இயக்கம்: விவி விநாயக்
ஒளிப்பதிவு சோட்டா கே நாயுடு
இசை டிஎஸ்பி
கிராமத்தில் ஜாலியாக சுற்றிக்கொண்டிருக்கும் சீனுவுக்கு, உதவுகிறார் அவரது மாமா பிரகாஷ்ராஜ். ஊரில் கடன்தொல்லையிலிருந்து தப்பிக்க சென்னை வரும் ஐடியா சொதப்ப, ஹைதராபாத் வருகிறார்கள். அங்கு மாஃபியா டான் ஒருவர், தன் மாமா போலவே இருக்க, அதை வைத்து சம்பாரிக்க முயற்சிக்கிறான். இதனால் ஏற்படும் பிரச்னைகள், காதல், டூயட் இன்னபிற சமாச்சாரங்கள்தான் கதை.
பெல்லகொண்டா சீனிவாஸ் அறிமுகமாகும் படம். அகிலைப் போலவே விவி விநாயக் இதனை சிறப்பாக செய்திருக்கிறார். என்ன ஹீரோ நிறைய இடங்களில் நடிப்பு வராமல் பாவமாய் நிற்கிறார். அத்தனை இடங்களிலும் நமக்கு ஆறுதல் தருவது, டிம்பிள் எனும் பிரம்மானந்தம்தான்.
மனிதர் பாவமான முகத்தை வைத்து செய்யும் சீரியசான விஷயங்கள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது. வெளிப்படையாக சொன்னால் படத்தில் சீனிவாஸை விட பிரகாஷ் ராஜ் நன்றாக நடித்திருக்கிறார். கிடைத்த இடத்தை சரியாக பயன்படுத்தி ஸ்கோர் செய்தது அவர்தான்.
சமந்தா, பணக்கார லூசு பெண்ணாக வந்துபோகிறார். அவர் வைக்கும் டெஸ்டுகளைப் பார்த்தால் பானிபூரி விற்கிறவனே சிரித்துவிடுவான். என்ன ஒரு அறிவு, என்ன ஒரு முதிர்ச்சி....
மற்றபடி அல்லுடு சீனு பாடல் மட்டும் ஒருமுறை கேட்கலாம். வீடியோ இருமுறை டான்சிற்காக கேட்கலாம். கிளைமேக்ஸ் ஃபைட் இருக்கிறதே . டிங்கிள் படிக்கிற குழந்தை கூட சிரித்துவிடும். இருமுறை வயிற்றில் ஆழமாக டிசைனர் கத்தியால் டான் பிரகாஷ் குத்துகிறார். அதையும் தாங்கிக்கொண்டு அதனாலென்ன என்று சீனிவாஸ் போடும் சண்டை இருக்கிறதே சாமி கண்ணைக் கட்டுகிறது.
மற்றபடி எதுவும் சொல்வதற்கில்லை. கரம் மசாலாவை அம்மியைக் கழுவாமலேயே அரைத்திருக்கிறார்கள்.