மனநோயாளிகளை சந்தித்து ஆய்வுகளைச் செய்தார் ஹரே!
ராபர்ட் ஹரேவின் உளவியல் பயணம்!
1980 களில் ஹரே தனக்குப் பிடித்தாற்போல ஆய்வகத்தை உருவாக்கினார். பதினெட்டு பட்டதாரி மாணவர்கள் அப்போது அவரிடம் இருந்தனர். அப்போது அரசு பல்வேறு சோதனைகளை செய்துபார்க்க நிதியுதவிகளையும் அள்ளிக் கொடுத்தது. ஆராய்ச்சி என்பது அப்போது அவ்வளவு சந்தோஷத்தை அள்ளிக்கொடுத்தது என்றுகூறும்போது, அவரது முகத்தில் நினைவுகளின் தழும்புகள் நிழலாடின.
எலக்ட்ரோஎன்செப்லோகிராம் சோதனைகளையும் ஒலி உள்ளே வராத அறைகளை அமைத்து செய்யத் தொடங்கினார். மனநிலை பிறழ்ந்தவர்கள் இழக்கும் உணர்ச்சியின்மை பற்றி ஆய்வுகளில் பரபரத்தார் ஹரே. இது கிளெக்லி குறிப்பிட்ட செமான்டிக் அப்ஹாசியா என்ற தியரியைத் தழுவியது.
பொதுவாக உணர்ச்சியற்ற மனிதர்களுக்கு மொழியும் உணர்ச்சியும் வேறு வேறு என்ற எண்ணம் உண்டு. இஇஜி மூலம் மூளையின் செயல்பாடுகளை பின்தொடர்ந்தார் ஹரே. உணர்ச்சிகளைக் கொண்ட வார்த்தைகள், உணர்ச்சியற்ற நியூட்ரல் வார்த்தைகள் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்தார் ஹரே. உணர்ச்சி, வார்த்தைகள் இந்த இரண்டையும் மக்கள் எளிதாகப் புரிந்துகொண்டுவிடுகின்றனர். இதில் துல்லியம் தவறுவதில்லை. மனநிலை பிறழ்ந்தவர்கள் உணர்ச்சிகர வார்த்தைகளுக்கும், நியூட்ரல் வார்த்தைகளுக்கும் எந்தவித உணர்ச்சிகளையும் வெளிக்காட்டுவதில்லை என்ற முடிவுக்கு வந்தார். 1991 இல் இதுகுறித்து ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். ஆனால் பத்திரிகை ஆசிரியர்கள் இதை நம்பவில்லை. அவர்கள் அதனை பொதுமக்களுக்கு பொருந்தாது என்று கூறினர்.
இதில் மற்றுமொரு சாதனை, மூளை குறித்த எம்ஆர்ஐ படமும் பிரசுரிக்கப்பட்டது. இது பல்வேறு மாணவர்களை உளவியல் குறித்து படிக்கத் தூண்டியது. பல்கலையில் ஹரேவின் ஆய்வகம் மூடப்படும் வரையில் மாணவர்கள் அவரிடம் உளவியல் குணங்கள், பழக்கங்கள் குறித்து கற்றனர். ஹரே மாறுபடுவது, அவர் சந்தித்த 80 சதவீத சைக்கோ கொலைகாரர்களால்தான். நிறைய ஆய்வாளர்கள் தாம் எழுதும் கட்டுரையை கற்பனையாக கேள்விப்பட்ட செய்திகளை வைத்து எழுதுவார்கள். ஆனால் ஹரே எழுதிய ஆய்வுகள் அத்தனையும் களத்தில் நேரடியாக குற்றவாளிகளுடன் பேசிய பதிவுகள்தான். இதனால் அவருடன் பணியாற்றியபோது மூளைகளின் இயக்கம் பற்றிய ஆய்வு அவ்வளவு இயல்பாக இயற்கையாக இருந்தது என்கிறார் ஹரேவின் ஆய்வு மாணவர் கென்ட் கீல்.