மரணதண்டனை எனும் சித்திரவதை- காம்யூ சொல்வது என்ன?
மரணதண்டனை என்றொரு குற்றம்
ஆல்பெர் காம்யூ
தமிழில் வி நடராஜ்
பரிசல்
ரூ.30
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் மரணதண்டனை வழங்கப்பட்டுவருகிறது. இது அரிதாகவே நடக்கிறது என்றாலும் மரணதண்டனை பொதுமக்களின் கோபம் போக்க எனும் முகமூடியில் இந்த கொடூரம் நடைபெற்று வருகிறது.
ஆல்பெர் காம்யூ பிரெஞ்சு நாடு, ரோம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கில்லட்டின் மூலம் நடைபெற்ற நிர்வாக முறை சார்ந்த மரணதண்டனைகளைப் பற்றி பேசி அது கூடாது என்று கூறுகிறார். நிறைய வாக்கியங்கள் நான்கு வரி சென்றாலும் முற்றுப்புள்ளியைக் காணோம். அது பரவாயில்லை. விஷயம் புரிந்துகொண்டால் போதும் என்பதால் வாசகர்கள் அதுகுறித்து கவலைப்பட மாட்டார்கள்.
1930 களில் அமெரிக்காவில் நடந்த ஆய்வுகளில் மரணதண்டனையைக் கைவிட்ட நாடுகளில் குற்றம் என்பது பெரிதாக குறையவில்லை என்ற ஆய்வையும் சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். அதேநேரம், குற்றத்திற்கான தண்டனையை நினைத்து குற்றவாளிகள் எதையும் செய்யாமலும் இருக்கப்போவதில்லை எனபதையும் ஆசிரியர் கூறுகிறார். சமூகத்தின் போலி ஒழுக்கம் மரணதண்டனையை வலியுறுத்துகிறது என்கிற இவரது வாதம் மிக கூர்மையானது.
காரணத்தை அழிக்காமல் அதன் அறிகுறிகளை மட்டும் நீக்கினால் என்னாகும் என்பதுதான் மரணதண்டனை வேண்டாம் என்பதற்கான வாதம். இன்றும் குற்றங்கள் நடைபெறுகின்றன.அதேநேரம் மரணதண்டனையை ரகசியமாக நிறைவேற்றும் அரசின் ரகசிய திட்டம் எதற்கு என்பதையும் ஆசிரியர் போட்டு உடைக்கிறார். அரபு நாடுகளில் கல்லால் அடித்துக் கொல்வதையோ, தூக்கிலிடுவதையோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும்போது பிற நாடுகள் ஏன் தயங்குகின்றன.
இயல்பாகவே ஜனநாயகப் பூர்வ அரசு என்பதற்கு தண்டனை அளிக்கும் சடங்குகள் சற்று சங்கடங்களையே தரும். தண்டனை தருவது என்பது ஒருவகையில் சமூகத்தில் குற்றங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொள்கிறோம். அதேவேளையில் தண்டனை குறிப்பாக மரணத்தை அறிவிக்கும்போது, முழுக்குற்றத்தையும் வேரோடு களைந்த திருப்தியை அது போலியானது என்றாலும் மக்களுக்கு தர முடியும்.
மரணதண்டனையை அறிவித்துவிட்டு அதற்காக மனிதனைக் காத்திருக்கச்செய்வது எனக்கு க்ரீன் மைல் படத்தை நினைவூட்டுகிறது. அதில் எலி வளர்க்கும் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அப்போது அவன் வாழ்வின் நம்பிக்கையாக இருப்பது சிறு எலி மட்டுமே. அதை போலீஸ் அதிகாரி கொல்வார். அப்போது கைதி கதறி அழுவது தாங்க முடியாத காட்சியாக எனக்குள் இன்றும் இருக்கிறது.
தான் இறக்கும் முன்பே தன் நண்பனின் இறப்பைக் கண்டுவிட்ட துக்கமா, வாழ்வு முடிவதன் குறியீடா என நம்பவே முடியாதபடி அக்காட்சி பல்வேறு பதில்களை காட்சி ரீதியாக நமக்குள் கடத்தும். இந்த நூல் நம் மனதில் தூண்டும் விஷயங்களும் அப்படித்தான்.
இன்றும் நாம் விவாதித்து வரும் விஷயம் என்பதால் இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது. வாசிக்கவும் யோசிக்கவும் விவாதிக்கவும் நிறைய விஷயங்கள் இதில் உண்டு.
- ச.அன்பரசு
நன்றி: புகழ் திலீபன், செய்தியாளர்(குங்குமம்)