கடலை நேசிக்கச் சொல்லும் ஆமை காட்டிய அற்புத உலகம்!
ஆமை காட்டிய அற்புத உலகம்
யெஸ்.பாலபாரதி
பாரதி புத்தகாலயம்
கடலில் உள்ள உலகம் பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். நான்கே நான்கு சிறுவர்கள் மூலம் கடல் உயிரிகளை ரசிக்க, பாதுகாக்க, பயப்படாமலிருக்க சொல்லித் தந்திருக்கிறார் ஆசிரியர்.
கடலில் ஜாலியாக விளையாடச் செல்கிறது சிறுவர்கள் கூட்டம். அப்போது என்னைக் காப்பாத்துங்க என்று ஒரு குரல் கெஞ்சுகிறது. ஆம் அதுதான் கதை நாயகன் ஜூஜோ என்கிற ஜூனியர் ஜோனாதன்.
மனிதரல்ல ஆமைதான் கதை சொல்கிறது. கதையை நடத்திச்செல்கிறது என்பதுதான் இதில் புதுமை. கதையின் ஊடே மெல்ல கடல் உயிரிகள் பற்றிய அறிமுகம், மனிதர்கள் சூழலை அழிக்க செய்யும் வேலைகள், கண்பார்வை இழக்கும் நீல்ஸ் திமிங்கலம், ஜெல்லி மீன்கள் என பல்வேறு விஷயங்களை அறிமுகப்படுத்தி அதிசயிக்க வைக்கிறார் ஆசிரியர்.
சுறா, திமிங்கலம், ஆமை, திருக்கை மீன்கள், ஜெல்லி என பல்வேறு உயிரினங்கள் குறித்து நமக்கு ஆங்கிலத்திரைப்படங்கள் வழியாக கூறிய அனைத்தையும் உடைத்து பேசி உண்மையை இளையோர் மனங்களில் பதிய வைக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்களை பதிய வைப்பது அவசியம்.
சொக்கலிங்கத்தின் படங்கள் குறுநாவலுக்கு ஏற்றவைதான் என்றாலும் அவை இனி வண்ணப்படங்களாக மாறினால் காலத்திற்கேற்ப பலரையும் ஈர்த்து வாசிக்க வைக்கும்.
எளிமையான வடிவில் கடல் குறித்தும் , கடல் உயிரிகளையும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த நூலை எவரும் வாசிக்கலாம். கதையோடு அறிவியலையும் கைவிடாமல் நடத்திச்செல்லும் பாலபாரதியின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது.
- கோமாளிமேடை டீம்
நன்றி: பாலகிருஷ்ணன்