காந்தி: புனலும் அழிக்கமுடியாத சத்தியம்!

காந்தி 150!







இருபது பேர்களை மையத்தில் அமரவைத்து பேசினால் ஜனநாயகம் மலர்ந்துவிடாது. சமூகத்தின் கீழேயுள்ள கிராமங்களிலிருந்து ஜனநாயக மறுமலர்ச்சி தொடங்கவேண்டும்
- ஹரிஜன் இதழ், 1948





காந்தி இன்றும் சிறந்த தலைவராக உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள தலைவர்களால் மதிக்கப்படுவதற்கான காரணம், போராட்டத்திற்கான ஆயுதமாக உண்மையை கையில் ஏந்தியதையும், தன் வாழ்வையே அதற்காக அர்ப்பணித்த குணமும்தான்.

ஒருவகையில் அரசியல்வாதிகளுக்கு காந்தி ஒரு அச்சமூட்டும் தலைவர்தான். தன் வாழ்வை நேரடியாக மக்கள் முன்வைத்து அவருக்கு எதிராக பேசுவதற்கான விஷயங்களையும் அவரே வழங்கியவர். எந்த மனிதனும் தன்னை கொல்வதற்கான ஆயுதத்தை தானே கூர்தீட்டி எதிரியிடம் வழங்குவதில்லை. ஆனால் காந்தி தான் முரண்படும் இடங்களை சரி செய்துகொண்டு தென்னாப்பிரிக்க தலித்துகள், அம்பேத்கர், பகத்சிங், ஆங்கிலேய அரசு, வைக்கம் போர்  என தான் சந்திக்க நேர்ந்த அனைத்து மனிதர்களிடமிருந்தும் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டு தன்னை மாற்றிக்கொள்ள இறக்கும்வரை  அவர் தயங்கவில்லை.

மனிதர்களை அவர் திடமாக நம்பினார். பின்னாளில் அவர் நம்பிய அகிம்சை, உண்மை ஆகிய கொள்கைகள் சரிந்து விழுவதை கண்ணுற்றவர், மனிதர்களிடையே பெருகும் குரோதத்தை  ஜீரணிக்க முடியாமல் தடுமாறினார். தனது இறுதி முடிவை தனது செயல்பாட்டின் வழியாக அவரே தேர்ந்தெடுத்தது இன்றுவரையிலும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.


கையில் எடுக்கும் நாணல் புல்லோ அல்லது கத்தியோ, கோடாரியோ எதையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வலதுசாரி இந்து இயக்கமான ஆர்எஸ்எஸ்ஸின் முக்கியமான வெடிப்பாக 1948 ஆம் ஆண்டு காந்தி சுடப்படுவது நிகழ்கிறது. இன்றும் பாஜக காந்தியை, நேருவை ஏதோ ஒருவகையில் அவமானப்படுத்தி தீனதயாள் உபாத்தியாயா, கோல்வால்கர், தேவரஸ் போன்ற பிரிவினை சக்திகளை சிலை வைத்து மணிமண்டபம் கட்ட , ரயில்பெட்டிகளுக்கு பெயரிட, ஊர்ப்பெயராக மாற்ற என பல்வேறு முயற்சிகளை செய்கிறது. இவர்கள் தமது இயக்கம் தாண்டி ஊர் தாண்டி பெயர் வெளியே தெரியாதவர்கள். சுயநலனிற்காக எதையும் செய்யத்துணியும் இக்கூட்டம் நாட்டிற்கென ஆபத்து வரும்போது தலைமறைவானதை வரலாறு கூறும். எடுத்துக்காட்டாக சுதந்திரப்போராட்டம், எமர்ஜென்சி காலம் ஆகியவற்றை குறிப்பிடலாம்.


காந்தி நோட்டுகளிலிருந்தும், அவரின் சமாதியிலிருந்தும், நூல்களிலிருந்தும் பின்னாளில் அகற்றப்படலாம். ஆனால் அவர் நம்புவது மக்களின் மனதைத்தான். பொய் பேசும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி கொள்வது காந்தி நம் மனதில் ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தினாலொழிய வேறல்ல.


ஜனநாயக மனிதர்களை அடுத்த தலைமுறை அறியாமல் போகும்போது, சுயநல சக்திகள் வெல்வெட் இருக்கையில் கௌரவமாக உட்கார வைக்கப்படும்போது காந்தி,  ஜனநாயகத்தில் அதற்கு இடமுண்டு என புன்னகை பூக்க வே வாய்ப்பு அதிகம். பெரும்பான்மை வாக்குகளிலேயே நீதியும் தீர்ப்பும் தீர்மானிக்கப்படும்போது சிறுபான்மை உண்மை வாழ இடமெங்கே? காந்தியின் எழுத்துக்களை அப்படியொரு நெருக்கடியான கட்டத்தில் வாசிக்கும்போது உங்களுக்கு யாராலும் உடைக்க முடியாத, எரிக்க இயலாத, புதைக்க இயலாத திடமான நம்பிக்கை தோன்றும். ஏனெனில் காந்தி எழுதிய எதுவும் புனைவல்ல; புனலும் அழிக்கமுடியாத சத்தியம்.

-ச.அன்பரசு
தொகுப்பு:  பாலாஜி மாதவ்