புகைப்படம் எடுக்க சிறப்பான தருணங்கள் தேவை! - நிக் வுட்


 நேர்காணல்

நிக் உட், புகைப்பட கலைஞர்

Nick Ut in Kerala, US Vietnam war, Napalm girl, Napalm girl photographer, Vietnam war photos, Mammootty, Indian Express






“புகைப்படங்களை எடுக்க சரியான தருணத்திற்காக காத்திருக்க வேண்டும்”

உங்கள் பயணம் தொடங்கியது எப்படி?

என்னுடைய சகோதரர் வியட்நாமில் பிரபல புகைப்படக்காரர்தான். 1965 ஆம் ஆண்டு மேகாங் டெல்டா பகுதி பணியின்போது, கொல்லப்பட்டார். என்னுடைய பதினாறு வயதில் அசோசியேட் பிரஸ் நிறுவனத்தில்  புகைப்படக்காரர் பணிக்கு விண்ணப்பித்தேன்.ஆனால் உடனே புகைப்படம் எடுக்க என்னை அனுமதிக்கவில்லை. என்னுடைய சகோதரர் இறந்ததால் ஏற்பட்ட தயக்கம்தான் அதற்கு காரணம். 

போர்க்களங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிர்ச்சி அலைகளை தோற்றுவிப்பது இன்றுவரையும் மாறவேயில்லை. நீங்கள் மாற்றங்களாக உணர்வது எதை?

ஊடக கலைஞர்கள் முன்னர் போரில் கொல்லப்பட்டதில்லை. ஆனால் இன்று செய்தி சேகரிக்கசெல்லும் ஊடகவியலாளர்கள் கொடூரமாக கொல்லப்படுகின்றனர். அசோசியேட் பிரஸ்ஸை சேர்ந்த என் தோழி அன்ஜா நைடிரிங்காஸ், காரில் பயணித்தபோது தீவிரவாதியால் கொல்லப்பட்டாள். தற்போதைய அரசியல் சூழல்களிலிருந்து ஊடகங்களை காப்பாற்ற பலரும் முயற்சிக்கின்றனர். போர்க்கள செய்திகளை நாங்கள் பெற முயன்ற போராட்டம் இதிலிருந்து மாறுபட்டது.
பணியின்போது நீங்கள் தாக்கப்பட்டுள்ளீர்களா?
கம்போடியாவில் செய்தி சேகரிக்க சென்றபோது இருமுறையும், பிற இடங்களிலும் தாக்கப்பட்டு உயிர்பிழைத்துள்ளேன். ராக்கெட் தாக்குதலில் என் வயிறு சேதமடைந்தும் நான் உயிர்பிழைத்தது அதிசயம்.

வியட்நாம் சிறுமியான கிம் புக்குடன் தொடர்பிலுள்ளீர்களா?
கனடாவில் வசிக்கும் கிம் இப்போது பாட்டியாகிவிட்டார். அவரின் மகனின் திருமணத்தில் பங்கேற்க அழைத்திருந்தார்.
இளம் புகைப்படக்காரர்களுக்கு உங்களின் அறிவுரை…
இடைவிடாமல் புகைப்படங்களை எடுப்பது உங்கள் எடிட்டரை சந்தோஷப்படுத்தாது. புகைப்படங்களை அதற்கான தருணத்திற்காக காத்திருந்து எடுப்பதை இளைஞர்கள் கற்கவேண்டும். சிறந்தவற்றிலிருந்து ஒரு புகைப்படத்தை தேர்ந்தெடுத்து அளிப்பதையே இதழ் ஆசிரியரும் விரும்புவார்.
புகைப்படம் எடுத்த சூழ்நிலையை கூறுங்கள்.
சைகோனிலுள்ள பத்திரிகை அலுவலகத்திலிருந்து கிளம்பி சாலைக்கு வந்தபோது இறந்தவர்களின் உடல்கள் சிதறிக்கிடந்தன. புகைப்படக்காரர்கள், டிவி சேனல் வீடியோகேமிராக்கள் என போர்க்காட்சிகளை எடுத்துக்கொண்டிருந்தனர். 

நானும் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டு சைகோன் திரும்ப நினைத்தேன். அப்போது வானிலிருந்து வீரர் எறிந்த குண்டு கீழே விழுந்து வெடித்தது. பெரிய பாதிப்பில்லை என்று நினைத்தபோது பலரும் அலறிக்கொண்டு உதவிகோரி ஓடிவந்தனர். வயதானவள் வைத்திருந்த குழந்தையை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது உடை எரிந்துபோய் ஓடிவந்த சிறுமியை கறுப்புவெள்ளை கேமிரா மூலம் படமெடுத்தேன். தோல் உரிந்த அவளின் உடலின் மேல் தண்ணீரை ஊற்ற முனைந்தபோது குடிக்கவேண்டும் என சைகையால் கூற அவருக்கு நீர் அளித்து மருத்துவமனை செல்ல உதவினேன். 

அப்போது கம்ப்யூட்டர் கிடையாது என்பதால் உடனே எடுத்த போட்டோக்களை தபாலில் ஆபீசுக்கு அனுப்பினேன். சிறுமியின் நிர்வாண போட்டோக்களை பிரசுரிக்கலாமா வேண்டாமா என விவாதம் நிகழ்ந்ததை பின்னர் அறிந்தேன். எனது புகைப்படம் பல்வேறு தினசரிகளின் முதல் பக்கத்தை அலங்கரித்து போர் அவலத்தை உலகிற்கு சொன்னது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த நிக்சன், சமையல் எண்ணெய்யால் சிறுமிக்கு ஏற்பட்ட விபத்து என்றுகூறி போலிப்புகைப்படம் என அதனை மறுத்தார்.

- Saraswathy Nagarajan, thehindu.com

தமிழில்: ச.அன்பரசு