திறந்தவெளி சிறைகள் ஏன் தேவை?
மனிதர்களை சுதந்திர பறவையாக்கும்
திறந்தவெளிசிறைகள்!
ஆங்கிலேயர் காலகட்ட வெளிச்சம் வராத, துண்டுதுக்கடா
இடத்தில் மூட்டைப்பூச்சிகளுடன் வாழ்ந்த பரிதாபம் இனி கைதிகளுக்கு கிடையாது. கடந்த ஆண்டு
டிசம்பரில் உச்சநீதிமன்றம், பெருமளவு திறந்தவெளி சிறைகளை அமைப்பது குறித்து பரிசீலிக்க
மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்திய அரசியலைப்பு சட்டப்படி, தண்டனைக் குற்றவாளியை
சிறைவைப்பது, தவறை உணர்ந்து திருந்தி சமூகத்திற்கு திரும்பி வரச்செய்வதே தவிர, தவறுசெய்தவரை
ஒழித்துக்கட்டுவதல்ல. காலனியாதிக்க சட்டங்களில் மரணதண்டனை இன்னும் இந்தியாவில் இருந்தாலும்
அவை ஒருவருக்கு விதிக்கப்படுவது அரிதானவையே.
திறந்தவெளி சிறைச்சாலை என்ற கான்செப்ட் நமக்கு புத்தம்
புதிதான ஒன்றல்ல. 1957 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான Do Aankhen Barah Haath. எனும் திரைப்படத்திலேயே
திறந்தவெளி சிறை கருத்து பெரும் புகழ்பெற்றது. கௌரவ் அகர்வால் என்ற வழக்குரைஞரின் பொதுநலவழக்கில்தான்
திறந்தவெளி சிறை குறித்த அறிவுறுத்தலை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது 63 திறந்தவெளி சிறைகள் செயல்பட்டு வருகின்றன. எதற்கு திறந்தவெளி
சிறைகள்? தண்டனை பெற்றுள்ள கைதிகளை திரும்ப சமூகத்தில் இணக்கமான வாழவைக்கும் ஏற்பாடுதான்
இது. சாதாரண சிறையிலுள்ளவர்களின் நன்னடத்தையைப்
பொறுத்து திறந்தவெளி சிறைக்கு மாற்றப்பட வாய்ப்புண்டு. ஆனால் அங்கும் விதிகளுக்கு புறம்பாக
செல்போன்கள், மது, போதை வஸ்துகள் பயன்படுத்துவதோ, தப்பி ஓடவோ முயற்சி செய்தால் திரும்ப
சாதாரண சிறையில் என்றென்றைக்குமாக அடைக்கப்படுவார்கள். இந்தியாவில் ராஜஸ்தானில் உச்சபட்சமாக
ராஜஸ்தானில் 29 திறந்தவெளி சிறைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தமிழகத்தின் பங்கு
3. "பீகாரிலுள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறைகளை பார்வையிட்டதில் அவை மனித தன்மையற்ற,
அவசியமற்ற ஏற்பாடு என்றே முடிவுக்கு வந்தேன். புது தில்லியின் திறந்தவெளி சிறைகளில்
கைதிகள் உற்சாகமாக காணப்பட்டனர்" என்கிறார் சிறை ஆராய்ச்சியாளரான ஸ்மிதா சக்ரவர்த்தி. திகாரில் 2016 ஆம் ஆண்டில் திறந்தவெளி சிறை செயல்பாட்டில்
உள்ளது. "மூடிய சிறைகளில் பனிரெண்டு ஆண்டுகள் கழிந்தபிறகு, திறந்தவெளி சிறையில்
வானம் பார்த்து காற்றை சுவாசிப்பது சந்தோஷமாக இருக்கிறது" என்கிறார் பெயர் கூறவிரும்பாத
கைதி ஒருவர்.
கொலை, கொள்ளை, வல்லுறவு செய்தவர்கள் சிறையில் இருப்பதுதான
சமூக அமைதிக்கு நல்லது என்பவர்கள் பேச்சை கவனித்தால், குற்றவாளிகளை ஒடுக்குவதை மட்டுமே
பேசுவார்களே ஒழிய குற்றங்களின் காரணத்தைப் பற்றி பேசாமல் மௌனம் சாதிப்பார்கள்.
"செய்த தவறுக்காகத்தான் கைதிகள் சிறைதண்டனை அனுபவிக்கின்றனர். அக்காலம் நிறைவடைந்ததும்
கைதிகளின் தவறுகளை சீரமைத்து சமூகத்திற்கான குடிமகனாக மாற்றுவது எங்களது நோக்கம்"
என்கிறார் திகார் சிறைத்தலைவரான அஜய் காஷ்யப்.
கைதிகள் அனைவரையும் திறந்தவெளி சிறைக்கு சிறை நிர்வாகம்
அனுப்புவதில்லை. ஆயுள்தண்டனை பெற்று பத்தாண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிப்பவர்கள்
நன்னடத்தையின் பேரில் திறந்தவெளி சிறைக்கு அனுப்பபடுகிறார்கள். இங்கும் ரோல்கால் உண்டு.
கைதிகள் வசிப்பது கம்பிகளுக்கு பின்னால் அல்ல; சிறுவீட்டில் என்பதுதான் வித்தியாசம்.
மற்றபடி சாதாரண சிறையை விட குறைந்த காவலர்களே பாதுகாப்பில் இருப்பார்கள். திகார் ஜெயிலின்
அலுவலகம் கடந்து இரண்டாம் கேட்டை கடந்தால் வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் திறந்தவெளி
சிறை அமைந்துள்ளது. அங்குள்ள ஆயுர்வேத மூலிகைகளைக் கொண்ட தோட்டத்தை கைதிகளே தன்னார்வமாக
பராமரிக்கிறார்கள். கைதிகளின மனநலனை மேம்படுத்துவதோடு அரசின் நிதிச்சுமையையும் திறந்தவெளி
சிறைகள் பெருமளவு குறைக்கின்றன.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் சிறைக்கு ஆண்டுதோறும் பதினெட்டு
கோடி செலவு என்றால், சங்காநரிலுள்ள திறந்தவெளி சிறைக்கான செலவு 24 லட்சம்தான். குற்றப்பதிவு ஆணையத்தின் 2015 அறிக்கைப்படி
பெரும்பாலான சிறைகள் 14 சதவிகிதம் அதிக கைதிகளால் தள்ளாடிவருகிறது. மேலும் திறந்தவெளி
சிறைச்சாலை வசதியை பெண்களுக்கும் விரிவுபடுத்த கடந்தாண்டு செப்டம்பரில் கீதா மிட்டல்,
ஹரிசங்கர் அடங்கிய நீதிபதிகள் பென்ச் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எரவாடா(மகாராஷ்டிரா),
திருவனந்தபுரம்(கேரளா), துர்க்கபுரா, சங்கநர்(ராஜஸ்தான்) ஆகிய இடங்களில் பெண்களுக்கான
திறந்தவெளி சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் 2.2 கோடி ரூபாயில் ஸ்வந்திரபூர்
காலனியில் திறந்தவெளி சிறை 28 கைதிகள் குடும்பத்துடன் தங்கும் விதமாக உருவாக்கப்படவிருக்கிறது.
திறந்தவெளி சிறைகளில் தொன்மையானது சங்காநர் சிறை.
1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சிறைக்கான சட்டங்கள் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன.
சங்காநர் சிறை, சோதனை முறையில் செயல்பட்டு வெற்றி ஈட்டியதுதான் இம்முறையில் பல சிறைகள்
உருவாக காரணம். 300 கைதிகள் தங்கள் குடும்பத்துடன் இங்கு வசித்துவருகிறார்கள். காலை
6 டூ 6 என பனிரெண்டு மணிநேரம் நீங்கள் சுதந்திரமாக இருக்கலாம். வேலை செய்யலாம். சம்பாதிக்கலாம்.
ஆனால் அனைத்தையும் விதிகளுக்குட்பட்டு செய்யலாம்; அதேசமயம் திறந்தவெளி சிறைகளின் தொன்மைக்கட்டுமானத்தை
சீர்செய்வதும் தற்போதைய தேவையாக உள்ளது. குற்றம் இழைத்தவர்களுக்கு இரண்டாவது லைஃப்
லைனாக திறந்தவெளி சிறைகள் மட்டுமே உள்ளன. சிறைகளே இல்லாத நிலை வருவது எதிர்கால லட்சியமாக
வைத்துக்கொண்டால், கைதிகள் குற்றத்திற்கு வருந்தி திருந்தும் மனநிலையை உருவாக்குவது
நம் கையிலுள்ள பெரும்பணி.
சிறைக்கு செலவு
ஜெய்ப்பூர் சங்காநர்
கைதிகள் 2,200 400
பணியாளர்கள்:கைதி விகிதம் 6:1 80:1
பணியாளர்கள் 339 5
பணியாளர் சம்பளம் 1,22,50,00 2,00,000
ஆண்டு செலவு 18,72,60,000
24,00,000
திறந்தவெளி சிறைகள்!
தமிழ்நாடு - 3
கேரளா - 3
மேற்குவங்கம், குஜராத்-2
மகாராஷ்டிரா- 13
ராஜஸ்தான் - 29
இவைதவிர கர்நாடகா, பீகார், இமாச்சல பிரதேசம், ஆந்திரா,
உத்தரகாண்ட், அசாம், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய இடங்களிலும் திறந்தவெளி
சிறைகள் அமைந்துள்ளன.
நன்றி: ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்