சூரியனை ஆராயும் புதிய சாட்டிலைட்!
சூரியனை ஆராயும் ஐரோப்பா!
அனைத்து கோள்களையும் ஆராய்பவர்கள்
சூரியனை மட்டும் சும்மா விடுவார்களா? 2020 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு சூரியனை
ஆராய அமெரிக்காவின் கேப் கானவெரல் விண்வெளி மையத்திலிருந்து விண்கலத்தை அனுப்பவிருக்கிறது.
சூரியனின் வட்டப்பாதையை இந்த விண்கலம்
அடைய மூன்றரை ஆண்டுகள் தேவை. ஒரு பில்லியன் டாலர்கள் செலவில் திட்டக்காலம் ஏழு ஆண்டுகளாக
திட்டமிட்டு விண்கலத்தை அனுப்ப முடிவு செய்துள்ளனர். சூரியனுக்கு நேராக செல்லாமல் வெள்ளி
கோளுக்கு அனுப்பி பின்னர் சூரியனுக்கு அருகில் செல்வதே இலக்கு. “பால்வெளியை பற்றிய
உண்மையை ஆராய்வதே ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் நோக்கம். இதற்கு முந்தைய திட்டங்கள்
சூரியனின் சுற்றுப்புறம், அதன் தன்மையைப் பற்றி ஆராய்ந்தன” என்கிறார் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்
மிச்செல் ஸ்ப்ராக். 600 டிகிரி செல்சியஸ் வெப்பம் -180 டிகிரி செல்சியஸ் குளிர் ஆகியவற்றை
விண்கலம் தாங்கினால் மட்டுமே சோதனை வெற்றிபெறும். சூரியனில் ஏற்படும் புயல், வெடிப்புகள்
உள்ளிட்டவை செயற்கைக்கோள்களின் ஜிபிஎஸ் வசதிகளில் பாதிப்பு ஏற்படுத்துவதால் இதனை கண்காணிப்பது
எதிர்கால ஆராய்ச்சிக்கு ஊக்கம் தரும்.