பிளஸ் சைஸ் பிளஸ்தான்!
பட்டையைக் கிளப்பும் பிளஸ் சைஸ்
மாடலிங்! –- ச.அன்பரசு
ஹேர்ஸ்டைலை இப்படி மாத்து, என்னோட
ஃபேஷியல் க்ரீம் பிராண்ட்டை யூஸ் பண்ணு என மேக்அப்களில், உடைகளில் உலகம் நமக்கு தரும்
அட்வைஸ்கள் ஏராளம், தாராளம். அதுவும் கொஞ்சம் பூசினாற்போல இருந்தால் ‘குண்டு கத்தரிக்காய்,
அமுல்பேபி,’ என டஜன் பெயர்களை வைத்து அக்கம்-பக்கம் சொந்தம் என அவர்களை படாதபாடு படுத்திவிடும்.
உடலை கிண்டல் செய்ததால் மனமுடைந்து கண்ணீர் விட்ட பெண்கள், இன்று ஃபேஷன் துறையில் பெருமையாக
கேட்வாக் போகின்றனர். உலகமே இளப்பமாக பார்த்து சிரித்த அவர்களின் கொழு கொழு உடலே அவர்களை
உலகெங்கும் பேசப்படும் ஸ்டார்களாக்கியுள்ளது.
ஒருவரின் உடலின் நிறம், தோற்றம்
என்பது அவரவர் விருப்பம் என உலகெங்கும் ‘பாடி பாசிட்டிவ்’ பிரசாரம் தீவிரமானதில் பிரயோஜனம்
உண்டு. அண்மையில் நடைபெற்ற லக்மே ஃபேஷன்வீக் நிகழ்வில், 29 புதுமுக குண்டுபெண்கள் பிளஸ்
சைஸ் உடைகளை விளம்பரப்படுத்த கம்பீரமாக நடைபோட்டு சாதனை புரிந்துள்ளனர்.
கொழு கொழு வரலாறு!
ஆரோக்கியமற்ற கலாசாரத்தை பிரசாரம்
செய்கின்றனர் என பலர் புகார் வாசித்தாலும் அமெரிக்காவின் நியூயார்க் ஏஜன்சி 1977 ஆம்
ஆண்டே பிளஸ் சைஸ் மாடல்களை உலகிற்கு அறிமுகப்படுத்தி விட்டது. 1978 ஆம் ஆண்டு பிளஸ்
மாடல்ஸ் என்ற நிறுவனத்தை பிளஸ் சைஸ் மாடல் பெண்களுக்காவே பாட் ஸ்விப்ட் என்ற பெண்மணி
தொடங்கினார். 2014 ஆம் ஆண்டு உலகின் டாப் மாடல்களோடு கேண்டிஸ் ஹப்பின் என்ற பிளஸ் சைஸ்
மாடலின் புகைப்படத்தையும் புகழ்பெற்ற பைரெல்லி காலண்டர் அச்சிட்டு வெளியிட்டது.
எது அழகு?
“ஆரோக்கியமற்ற எடை குறைக்க விரும்பாத
சோம்பேறி என எங்களைப் பற்றி மக்கள் நினைக்கலாம். இந்த எதிர்மறை எண்ணம் காலப்போக்கில்
மறையும். அழகு என்பது எதிரேயுள்ள கண்ணாடியில் பார்க்கும் உங்கள் பிம்பம்தான். உங்கள்
மீது நீங்கள் கொள்ளும் நம்பிக்கை உங்களை தேவதையாக்கும்” என அசத்தலாக பேசுகிறார் பிளஸ்
சைஸ் மாடலான தீப்தி பர்வானி. 34- 24- 34 என்பதுதான் பூனைநடைபோடும் சராசரி மாடல்களின்
தோராய உடல்அளவு.
தீப்தி, டிசைனர் வென்டில் ரோட்ரிக்ஸின்
மூலம் நம்பிக்கை பெற்று ஃபேஷன் ஷோக்களில் பங்கெடுத்து தன்னைப்போன்ற பலருக்கும் நம்பிக்கை
ஏற்படுத்திய பெண்மணி. இவர் மட்டுமல்ல மருத்துவப்படிப்பை கைவிட்டு பேஷன்துறையில் நுழைந்து
ஆடைவடிவமைப்பு, மேக்கப் என கலக்கும் திருநங்கையும் பிளஸ் சைஸ் மாடலுமான மோனா வெரோனிகா
கேம்பெல் முக்கிய டிசைனர்களின் ஷோக்களில் ஷோ ஸ்டாப்பர் கௌரவத்தை வென்றுள்ளது பெருமையான
செய்தி. தற்போது உலகமெங்கும் பிளஸ் சைஸ் மாடல்களுக்கான வரவேற்பு பெருகுவதோடு அவர்களை
மீதான புறக்கணிப்பையும் தவிர்த்து அரவணைக்க முன்வருவதை வரவேற்கலாம்.