"கைதிகளை பழிவாங்குவது நீதியின் நோக்கமல்ல"


Image result for crime illustration



"குற்றவாளிகளை கருணையோடு அணுகாவிட்டால் அவர்கள் மாபெரும்
குற்றவாளிகளாக மாறுவார்கள்"


மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் குற்றங்களை அணுகும் விதம் நிச்சயம் வேறுபடும்.  பெரும்பாலான குற்றங்களுக்கு  இந்திய நீதிமன்றங்கள் சிறைதண்டனைகளையே விதிக்கின்றன. காரணம், குற்றவாளிகளை திருத்துவதே நீதித்துறையின் நோக்கம். குற்றவாளிகளை முழுமையாக அழிப்பதல்ல. ஆனால் மேற்கத்திய நாடுகளில் மின்சாரமா, விஷ ஊசியா, தோட்டக்களா என்ற தேர்வு மட்டுமே குற்றவாளிகளின் சாய்ஸ். 

Related image






அமெரிக்காவில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் திறந்தவெளி சிறைகளை உருவாக்கினர். இந்தியாவில் 1953- 1955 காலகட்டத்தில் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தானில் திறந்தவெளி சிறைகள் உருவாயின. இன்றுவரையும் இந்தியாவில் இயங்கும் 63 திறந்தவெளி சிறைகளில் பெஸ்ட் , ராஜஸ்தானுடையதுதான். அங்கு 29 சிறைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு மட்டுமல்ல; கேரளா, மகாராஷ்டிரா தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் திறந்தவெளி சிறைகள் உண்டு. 

ராஜஸ்தான் சிறைகளின் வெற்றிகளை பார்த்தே உச்சநீதிமன்றம் கடந்தாண்டு திறந்தவெளி சிறைகளை மாநில அரசுகள் உருவாக்கி விரிவாக்கம் செய்யவேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் இதில் என்ன முன்னற்றம் நடந்ததோ தெரியாது. சாதாரண சிறைகளை விட திறந்தவெளி சிறைகளில் அரசுக்கு செலவும் குறைவு. கைதிகளின் வாழ்வும் மேம்படும். 

திறந்தவெளி சிறைகளில் காலை 6- மாலை 6 என வருகைப்பதிவு உண்டு. குடும்பத்தினருடன் வாழலாம் என்ற வசதிகளும் உண்டு. ஆனால் இங்கிருந்து தப்பும் முயற்சி செய்தால் மீண்டும் கிரில் வசதிகள் கொண்ட கொடுஞ்சிறைவாசத்தை தவிர்க்க முடியாது.  இந்தியளவில் 481:1 (2015 தகவல்படி )என்ற விகிதத்தில் கைதிகள் இச்சிறையிலிருந்து தப்பிக்கின்றனர். "பிணை என்பது கைதிகளின் அடிப்படை உரிமை(1982-33 நீதிபதி முல்லா கமிட்டி பரிந்துரைகள்). ஆனால் அதனை மறுப்பதால் தப்பித்து செல்லும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கைதிகள் அப்படி தப்பிப்பது கூட ஜாமீனுக்கு கட்ட பணமில்லாத வறுமையால்தான்" என்கிறார் ராஜஸ்தான் மாநில முன்னாள் சிறைதுறை தலைவரான ஆர்.கே. சக்சேனா. 

சிலர் இச்சிறைகளை எதிர்த்தாலும் அதில் உண்மை கிடையாது. கைதிகளின் மறுவாழ்விற்கான முயற்சியே திறந்தவெளி சிறைகள். நீண்டநாள் சிறைதண்டனை பெற்ற கைதிகளின் நன்னடத்தை முதலியவற்றை அலசி ஆராய்ந்த பின்னரே திறந்தவெளி சிறைக்கு கைதிகளை பரிந்துரைக்கிறார்கள். கைதிகளுக்கு விதிக்கப்பட்ட மூன்று பகுதி தண்டனையில் ஒரு பகுதி தண்டனையை கைதி நேர்மையான முறையில் அனுபவித்துவிட்டால் அவர்களை திறந்தவெளி சிறைக்கு பரிந்துரைக்கலாம். 


இந்தியாவிலுள்ள 63 திறந்தவெளி சிறைகளில் 5,730 கைதிகள் வாழ்கின்றனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 லட்சித்திற்கும் மேற்பட்ட கைதிகளில் திறந்தவெளி சிறைகளில் வாழும் கைதிகளின் எண்ணிக்கை 1.28% . ''ஆயுள் தண்டனை கைதிகளுக்கு மட்டுமல்ல விசாரணை கைதிகளுக்கு திறந்தவெளி சிறை வாய்ப்புகளை வழங்கலாம். நீதி என்பது மனிதர்களின் மீதான வஞ்சமல்ல. ஒட்டுமொத்த சமூகமும் குற்றவாளிகளின் மீது அமிலம் பட்டதுபோல கோபத்தை காட்டும்போது வல்லுறவு குற்றவாளியாக உள்ளே செல்பவர் திரும்ப சமூகத்திற்கு திரும்பும்போது தாதாவாக மாறியிருப்பார்கள்'' என எச்சரிக்கிறார் சிறைத்துறை ஆராய்ச்சியாளர் சக்கரபர்த்தி. 


இந்தியாவிலுள்ள பதிமூன்று மாநிலங்களில் சிறைகள் நிரம்பி வழிந்துவருகின்றன. இதைத்தவிர்க்க சிறைத்துறை சீர்த்திருத்தங்களை கறாராக அமுல்படுத்துவது அவசியம். இதற்கு திறந்தவெளி சிறைகள் கைகொடுக்கலாம். 

ஆக்கம்: அன்பரசு
நன்றி: இந்தியா ஸ்பென்ட்.