காந்தி, சரளாதேவி உறவு இயல்பான ஒன்று!
ராமச்சந்திர குஹா.....4
1928 ஆம் ஆண்டு காந்தி தன் மகன் தேவதாஸ், ராஜாஜியின் மகள் லட்சுமியை திருமணம் செய்யும் முயற்சிக்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறார்? சாதி மறுப்பு திருமணம் என்பதே காரணமா?
அம்மறுப்புக்கு தார்மிக ரீதியான பல்வேறு காரணங்கள் இருந்தன. முதல் காரணம், தீண்டாமை குறித்த காந்தியின் கருத்துகள் சாதி இந்துக்களை கடுமையான சீண்டியிருந்தது. மேலும் காந்தி இளைஞர்களை பலரை பிரம்மச்சரியம் காக்கும்படி பிரசாரம் செய்திருந்ததும் அவரை உறுத்தியிருக்கலாம்.
அப்போது அவரின் மூத்த மகன் மணிலால் முஸ்லீம் பெண்ணை மணக்க விரும்பினார். அதுவும் காந்தியின் கொள்கைக்கு விரோதமான பிரச்னையாக மாறியிருந்தது. இந்துக்கள் தம் பெண்களை கவரவே தம் மதத்திற்கு மாறுகிறார்கள் என முஸ்லீம்கள் கூறிவிடுவார்கள் என்ற அச்சம் காந்திக்கு ஏற்பட்டதால் முடிவெடுக்க தயங்கினார். இன்று தலைகீழாக நிலைமை மாறி காந்தி பயப்பட்ட வாசகத்தை வலதுசாரி இந்துத்துவவாதிகள் கூறிவருகின்றனர்.
காந்தி தன் காலத்தில் சிந்தித்து எழுதியதை விட டாக்டர் அம்பேத்கர் தொலைநோக்காக நிறைய செயல்பாடுகளை செய்துள்ளார் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
சந்தேகத்திற்கு இடமேயின்றி ஒப்புக்கொள்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு தீண்டாமையை ஒழிக்கும் வழி நூலைப் படித்தபோது அவரது சிந்தனையின் தீட்சண்யத்தை கண்டு வியந்துபோய் வாசிப்பதையே சில கணங்கள் நிறுத்திவிட்டேன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து இந்தியா முழுக்க பாராட்டப்படும் தலைவர் என்றால் அது காந்திக்கு அடுத்தபடியாக டாக்டர் அம்பேத்கர் மட்டுமே.
தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுரானியுடனான காந்தியின் உறவு பற்றி நீங்கள் நூலில் எழுதியுள்ளனர். பலரும் அறியாத செய்தியா இது?
காந்தியின் தொகுப்பு நூல்களில் இதுபற்றிய தகவல்களை நிறைய இடங்களில் நாம் பார்க்கலாம். இதுபற்றிய தகவல்களை எழுதும் பலரும் இதனை பாலியல் சார்ந்த செய்தியாக சுருக்குகின்றனர். சரளாதேவி பற்றிய தனது கனவுகளை காந்தி தன் நாட்குறிப்பில் எழுதியுள்ளார். நான் சரளாதேவி எழுதிய கடிதங்களைப் பற்றியும் நூல்களில் குறிப்பிட்டுள்ளேன். இவை அனைத்தும் சபர்மதி ஆசிரமத்தில் பெற்ற தகவல்களை அடிப்படையாக கொண்டவை. பல கடிதங்கள் காந்தியின் குடும்பத்தாரால் எரிக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இதுபற்றி நிறைய பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
1922 ஆம் ஆண்டு காந்தி ஆங்கிலேய அரசினால் கைது செய்யப்பட்டபோது சரளாதேவி லாகூரிலிருந்து அகமதாபாத்திற்கு பயணம் செய்து சந்தித்த ஆதாரங்கள் உள்ளன. காந்தியும், சரளாதேவியும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டதை காமமின்றி நூலில் விளக்க முயற்சித்துள்ளேன். இது இரு மனிதர்களின உறவு குறித்த கதை .
காந்தி சோசலிச கருத்துகளை முன்வைத்தாலும் நாட்டின் பெரும் பணக்காரர்களின் பணத்தை பயன்படுத்த தயங்கவில்லை. அவரின் பொருளாதார ரீதியான எண்ணம், தத்துவம்தான் என்ன?
இந்து சுயராஜ்யம் எழுதிய காலத்திலிருந்து சிந்தனைகளில் பெரும் மாற்றத்தை காந்தி கொண்டிருந்தார். 1920-1930 களில் காதி, நெசவு உள்ளிட்டவற்றை அவர் பெரும்பாலும் மாற்றாமல் கைக்கொண்டிருந்தார். மூளை உழைப்பு, தொழிலாளர்களின் உடல் உழைப்பு இரண்டுக்குமிடையிலான இடைவெளியை உடைக்க நினைத்தார் காந்தி.
வேலைவாய்ப்புகள் மூலம் இந்தியர்களின் வாழ்க்கை மேம்பட நினைத்த காந்தி தொழில்துறைகளை வெறுக்கவில்லை. அதேசமயம் கிராமங்களிலுள்ள நெசவு, காதி உள்ளிட்டவற்றுக்கு மானிய உதவிகளை அரசு வழங்கவேண்டுமென தன் வாழ்நாள் முழுவதும வற்புறுத்தி வந்தார் காந்தி. அவருடன் இறுதிவரை தொடர்பிலிருந்த ஜி.டி. பிர்லா, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான வழிமுறையாக அதனை செய்தார். இதற்கு மாறாக தொழிலதிபர் ஜம்னாலால் பஜாஜ் சொத்துக்களை இழந்து சிறை சென்று தீண்டாமை ஒழிப்புக்கான எதிர்முகாமில் இணைந்தது தனிக்கதை.
தமிழில்: ச.அன்பரசு
நன்றி: சோமக் கோசல், லிவ் மின்ட்