பார்டர் தாண்டி கொன்று போடு - பிட்ஸ்!
பயணிகள் இல்லாத ரயில்ரூட்!
கேரளாவின் கொச்சினிலிருந்து வில்லிங்டன்
தீவு வரையில் இயக்கப்பட்டு வந்த ரயில்சேவை விரைவில் நிறுத்தப்படவிருக்கிறது. பயணிகள்
பற்றாக்குறைதான் பிரச்னை என காரணம் சொல்லியிருக்கிறது ரயில்வே நிர்வாகம்..
மூன்று பெட்டிகளைக் கொண்ட ரயில்
செல்லும் தூரம் 9 கி.மீ மட்டுமே. இதனை 50 நிமிஷங்களில் கடக்கும் ரயிலில் ஏறிய பயணிப்பவர்கள்
மிக சொற்பம். தினசரி இரண்டு சர்வீஸ் வரும் ரயில் கொச்சின் டெர்மினஸ், எர்ணாக்குளம்
ஜங்க்ஷன், கொச்சின் போர்ட் ட்ரஸ்ட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மார்க்கமாக செல்கிறது.
“இவ்வழித்தடத்தில் தினசரி 15 டிக்கெட்டுகளுக்கும் குறைவாகவே விற்கிறது. எப்படி ரயிலை
இயக்கமுடியும்? ” என்கிறார் திருவனந்தபுரம் மண்டல மேலாளர் எஸ்.கே.சின்கா. சேவையை நிறுத்தாமல்
திரிசூர் -– கோட்டயம் வரை ரயில்சேவையை விரிவாக்கினால் அதிக பயணிகள் கிடைக்க வாய்ப்புள்ளது
அவ்வட்டார மக்களின் கருத்து.
2
அகிம்சை தேர்வு
மகாராஷ்டிராவில் காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு
அகிம்சைக்கான தேர்வை 600 கைதிகள் எழுதியுள்ளனர்.
பாம்பே சர்வோதய மண்டல் என்ற அமைப்பு சிறைக்கைதிகளுக்கு காந்தி
பற்றிய தேர்வை நடத்தியது. என்ன காரணம்? “காந்தியடிகளின் அகிம்சை, லட்சியநோக்கம் நூற்றுக்கணக்கான
கைதிகளின் மனதை, சிந்தனைகளை மாற்றியுள்ளது. இத்தேர்வு இதற்காகவே கைதிகளுக்கு ஆண்டுதோறும்
நடத்தி வருகிறோம்” என்கிறார் சர்வோதய இயக்கத்தைச் சேர்ந்த டி.ஆர்.கே சோமையா.
சரியான விடையை தேர்ந்தெடுக்கும்படி நான்கு ஆப்ஷன்களுடன் கேள்வித்தாள்
வழங்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்காக காந்தியின் வாழ்க்கை, அகிம்சை,
லட்சியம் ஆகியவற்றின் சுருக்கம் சிறிய நூலாக கைதிகளுக்கு வாசிக்க வழங்கப்பட்டது. நம்பிக்கை
முயற்சி!
3
அகதி ஏற்படுத்திய அவமானம்!
சிரியாவைச் சேர்ந்த ஹசன் அல்கோண்டர்
என்ற இளைஞர், மலேசியாவிலிருந்து ஈகுவடார் நாட்டிற்கு
செல்ல முயற்சித்தார். ஆனால் விசா பிரச்னைகளால் பயணம் ரத்தாக, ஹசன் கோலாலம்பூர் விமானநிலையத்திலேயே
கடந்த மார்ச் 7 ஆம் தேதி முதலாக தங்கிவிட்டார்.
பிறர் கொடுக்கும் மீல்ஸை ஏற்று
டாய்லெட்டில் துணிபிழிந்து காயப்போட்டவரை என்ன செய்வது என தெரியாத ஏர்போர்ட் அதிகாரிகள்
கையை பிசைந்துகொண்டு விழித்தனர். காரணம், சிரிய அகதியான ஹசனை கம்போடியா உட்பட எந்த
நாடுகளும் ஏற்கவில்லை. டென்ஷனான ஹசன், தன் ஸ்மார்ட்போனை ஆயுதமாக்கி மலேசியா அரசு தனக்கு
உதவாததை அகில உலகமெங்கும் வீடியோக்களாக புட்டுவைக்க நெருக்கடிக்கு உள்ளான காவல்துறை
அதிரடியாக ஹசனை கைது செய்துள்ளது.
“போர்டிங் பாஸ் இன்றி விமானநிலையத்தில்
தங்கியிருந்த ஹசனை கைது செய்துள்ளோம். மேலும் அவரின் வீடியோ பதிவுகள் மலேசியாவை பெரும்
நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.” என பளிச் நிஜம் பேசியுள்ளார் விமானநிலைய இயக்குநரான
முஸ்தாபர் அலி. 3 மாத சுற்றுலா விசாவில் மலேசியாவில் டேரா போட்ட ஹசனை விரைவில் மலேசியா
அரசு சிரியாவுக்கு திருப்பியனுப்பவிருக்கிறது.
4
எல்லை தாண்டி கொன்றுபோடு!
அமைதி பேச்சுவார்த்தை என்ற பேச்சு
கிளம்பும் போதெல்லாம் இந்திய ராணுவ வீரர்களை கொன்று போட்டு அதற்கு முட்டுக்கட்டை போடுவது
பாக். ராணுவ மரபு. இவ்வாண்டில் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 52 பேரை பலிவாங்கியுள்ளது
பாகிஸ்தான் ராணுவம்.
28 மக்கள், 12 ராணுவ வீரர்கள்,12
பிஎஸ்எஃப் படைவீரர்கள் என எல்லை(LOC) புகுந்து வேட்டையாடிய பாக்.கின் கொடூர தாக்குதல்களுக்கு
பலியாகியுள்ளனர். இதன்விளைவாக, இந்திய- பாகிஸ்தான் எல்லையோர கிராம மக்கள் உயிர்பயத்தில்
தவித்து வருகின்றனர். உலகளாவிய எல்லை, இந்திய- பாகிஸ்தான் எல்லையில் பாக். ராணுவம்
நடத்திய அத்துமீறிய நடத்திய 945 தாக்குதல்களில் 140 மக்கள், 45 ராணுவத்தினர், 47 பிஎஸ்எஃப்
படையினர் காயமுற்றுள்ளனர். கடந்த ஆண்டு 860 தாக்குதல் சம்பவங்களை பாகிஸ்தான் ராணுவம்
நிகழ்த்தியது. துப்பாக்கியை தாழ்த்தாமல் அமைதி ஏது?