ஆணழகும், ஸ்டெராய்டு ஆபத்தும்!
ஆணழகின் ஆபத்து! –
அர்னால்டு போல முஷ்டி மடித்து
காட்டுவதும், வாரணம் ஆயிரம் சூர்யாவின் கிளாமர் சிக்ஸ்பேக்கை காப்பியடித்து மப்பாக
கெத்து காட்டுவதும் ஆணழகின் பெருமைதான். ஆனால் அவர்களின் ஆண்டுக்கணக்கான உழைப்பை இரண்டே
மாதங்களில் சாதிக்க அடம்பிடிக்கும்போதுதான் ஸ்டெராய்ட் நம்மைப் பார்த்து குரூரமாக புன்னகைக்கிறது.
இந்தியாவில விற்கப்படும் 70% புரத
சப்ளிமெண்டுகள் ஆபத்தானவை. இந்த டயட் பொருட்களில் மினரல்களும், வைட்டமின்களும்(40%)
இயற்கை சப்ளிமெண்டுகளும்(30%), புரதம், அமினோ அமிலங்கள்(15%) உள்ளன என தொழில்துறை அமைப்பான
அசோசெம் ஆய்வு தெரிவிக்கிறது. புரத சப்ளிமெண்டுகளில் உள்ள ஸ்டெராய்டு பிரச்னை ஒருபுறம்
என்றால் இனி ஸ்லிம்ஃபிட் உடைதான் என் ஸ்டைல் என கட்டழகு கனவுடன் ஜிம்முக்குள் நுழையும்
தொந்தி யூத்துகளின் கூட்டமும் அதிகரித்துவருகிறது.
ஸ்டெராய்டு ஆபத்தை பலரும் கண்டுகொள்ளாததன்
காரணம் இதில் புழங்கும் காசு. இந்திய ஃபிட்னெஸ் சந்தையின் மதிப்பு 4 ஆயிரத்து 500 கோடிக்கும்
அதிகம். 2020 ஆம் ஆண்டு இதன் மதிப்பு 2 பில்லியனாக அதிகரிக்கும். இத்துறையில் போதியளவு
கட்டுப்பாடுகள் இல்லாததால் நாட்டின் பல்வேறு பெருநகரங்களிலும் ஸ்டெராய்டு இறப்புகள்
அதிகரித்து வருகின்றன. “எங்களுடைய மருத்துவமனைக்கு வருபவர்களில் மாதத்திற்கு 50 பேர்
ஸ்டெராய்டு சப்ளிமெண்டுகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான். அதில் 7% பேர்களுக்கு எலும்புமஜ்ஜை
திசுக்கள் சேதமுற்றும்(AVN), கிட்னி பாதிப்பும் உள்ளது” என்கிறார் டெல்லியைச் சேர்ந்த
எலும்பு மருத்துவர் கே.கே.மிஷ்ரா.
மருத்துவர்களிடமும், டயட்டீஷனிடம்
பரிந்துரை கேட்காமல் ஜிம் பயிற்சியாளர்களிடம் சப்ளிமெண்டுகளையும் டயட்டையும் கேட்டு
பின்பற்றுவது கிட்னியை செயலிழக்க வைத்து பலரையும் வீழ்த்தி வருகிறது. முகப்பரு, முடிகொட்டுவது,
தோலில் எண்ணெய்பசை அதிகரிப்பது, அலர்ஜி, தசைவலி, மலட்டுத்தன்மை, ஆண்குறி வீக்கம் ஆகியவை
ஸ்டெராய்டின் ஷாக் பக்க விளைவுகள்.
நாம் சாப்பிடும் உணவை ஒவ்வொருவரின்
உடல் எரிக்கும் வேகமும் மாறுபடும். இந்த வளர்சிதைமாற்றத்தை புரிந்துகொள்ளாமல் தாறுமாறு
டயட்டை வடிவமைத்து கிலோகணக்கில் அங்கீகாரமற்ற புரத சப்ளிமெண்டுகளை அள்ளி விழுங்குவது
உயிருக்கே எமனாகிறது. விட்டமின் ஏ,இ,டி ஆகியவற்றினால் உலகளவில் 4% பேர் பலியாகியுள்ளனர்
என்கிறது கோபன்ஹேகன் பல்கலைக்கழக அறிக்கை. “விட்டமின் டி மாத்திரைகளை அதிகம் சாப்பிடுவது
எடைகுறைவு, ஹார்மோன் பிரச்னைகளோடு புற்றுநோயையும் உருவாக்கலாம்” என எச்சரிக்கிறார்
ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவர் துர்கா பிரசாத். சப்ளிமெண்ட் என்பவை உணவுக்கு மாற்றல்ல
என்பதோடு உணவு பாதுகாப்பு மற்றும் தர சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பொருட்களை பயன்படுத்துவது
அவசியம்.