சுற்றுலாதளங்களை அழிக்கும் சுற்றுலாபயணங்கள்!
ஐரோப்பாவை அழிக்கும் சுற்றுலா!
இந்தியாவின் தாஜ்மஹால் டெல்லியில் அதிகரிக்கும்
மாசுக்களால் பொலிவிழந்து வருவது நாம் அனைவரும் அறிந்த நியூஸ்தான்.
அதில்
அறியாதது, வரலாற்று பொக்கிஷமான தாஜ்மஹாலின்
சிதைவுக்கு அதிகரிக்கும் உள்நாட்டு, வெளிநாட்டு
சுற்றுலாபயணிகளும் முக்கிய காரணம் என்பதுதான். வருவாய்
மோகத்தில் ஆழ்ந்துள்ள இந்தியா இதுகுறித்து பெரியளவு
ஆர்வம் காட்டவில்லை. ஆனால் மேற்குல நாடுகள் சுற்றுலா பயணிகளை கட்டுப்படுத்த
பல்வேறு விதிகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.
அதிதிகளுக்கு கட்டுப்பாடு!
இந்திய அரசு, இன்கிரடிபிள்
இந்தியா என டூரிஸ திட்டங்களை தீட்டி 'அதிதி
தேவோ பவ' என சுலோகன்களை சொல்லி ஹாப் ஆன்
ஹாப் ஆஃப் பஸ்களில் பாரினர்களை ஏற்றி அரவணைப்பதில் தவறேதுமில்லை.
ஆனால்
இந்தியாவுக்கு அபரிமிதமாக வரும் வெளிநாட்டு பயணிகளால் ஏற்படும் சூழல்கேடுகள் பற்றி
கவலைப்பட வேண்டிய நேரமிது. இத்தாலி,
பிரான்ஸ்,
குரோஷியா,
நெதர்லாந்து ஆகிய நாடுகள் டூரிஸ்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை
உணரத்தொடங்கி உஷாராக சட்டங்களை உருவாக்கத் தொடங்கிவிட்டன. அப்படி
என்ன பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்? அதிக
சுற்றுலா பயணிகளின் வரத்தால் உள்ளூர் மக்களின் வெளியேற்றம்,
இயற்கை
ஆதாரங்களின் போதாமை, குப்பைகளின் பெருக்கம்,
டஜன் கணக்கிலான சேவை நிறுவனங்களின் அதிகரிப்பு ஆகியவை பிரச்னைகளின்
குமிழிகளாக எழுகின்றன.
இந்தியா தனது வரலாற்று பொக்கிஷங்களை காப்பாற்றவே
தடுமாறி வருகிற நிலையில் உடனே இதற்கு கவனம் செலுத்த முடியாது என்றாலும் எதிர்காலத்தில்
இவை பெரும் பிரச்னைகளாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
வருமானமா? வாழ்வா?
கடந்தாண்டில் பிரான்சுக்கு 87 மில்லியன், இத்தாலிக்கு
58.3 மில்லியன், நெதர்லாந்துக்கு 17.9 மில்லியன் என சுற்றுலா பயணிகள் சென்று வந்துள்ளனர்.
ஆசிய நாடுகளுக்கு 9 சதவிகித சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். ஒட்டுமொத்த 1.3 பில்லியன்
சுற்றுலாப்பயணிகளில் ஐரோப்பாவுக்கு ஃபிளைட் ஏறியவர்களின் அளவு 51%. இது முந்தைய ஆண்டைவிட
8% அதிகம். அட்லாண்டிக் கடலை அசகாயமாக தாண்டிய அமெரிக்கர்களின் அளவு 15.7 மில்லியன்.
சுற்றுலா வருவாய் தாண்டி சூழல் பாதிக்கப்பட தொடங்க ஸ்பெயின் மலோர்கா ஏர்போர்ட்டில்
'சுற்றுலா மலோர்கா நகரை கொல்கிறது' என போர்ட்டே வைத்துவிட்டார்கள் அந்நகர்வாசிகள்.
"எங்களுடைய வெனிஸ் நகரம் சுற்றுலாவாசிகள் வேடிக்கை
பார்ப்பதற்கான தீம்பார்க் அல்ல" என உறுதியாக பேசும் இத்தாலியின் வெனிஸ் நகர மேயர்
லுய்கி ப்ரூக்னாரோ சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி ரூல்ஸ்களை விதித்துள்ளார்.
ஸ்பெயினின் பார்சிலோ நகரில் புதிய ஹோட்டல்களை தொடங்கவும், கடைகளை அமைக்கவும் அந்நகர
கார்ப்பரேஷன் தடைவிதித்துள்ளது. அதேசமயம் பொருளாதார பிரச்னையில் சிக்கிய பல்வேறு ஐரோப்பிய
நாடுகளை சுற்றுலாத்துறைதான் மீட்டது மறுக்கமுடியாத உண்மை. 2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய
யூனியனுக்கு சுற்றுலாத்துறை மூலம் 321 பில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்ததோடு 12
மில்லியன் மக்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கியுள்ளது.
மலிவு வசதி, உறுதியான வளர்ச்சி!
சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும்
ரியான்ஏர், ஈஸிஜெட் ஆகிய விமான நிறுவனங்களின் குறைந்த கட்டண சேவையும், ஏர்பிஎன்பி நிறுவனங்களின்
மலிவு விலை தங்குமிட வசதிகளும் மிடில் கிளாஸ் மக்களும் சுற்றுலா செல்வதற்கான தைரியத்தை
கொடுத்தன. இதுபற்றி மக்கள் ஏன் பேசுகிறார்கள்? சுற்றுலா பயணிகளுக்கு அரசு செய்துதரும்
வசதிகள் அனைத்திலும் மக்களின் வரிப்பணம் உள்ளதே! பிரபலமான இடங்களில் மக்கள் கூட்டம்
அம்பாரமாய் குவிய, அப்பகுதியிலுள்ள மக்கள் தினசரி வாழ்க்கை தடம்புரண்டு அவசியத் தேவையான
பொருட்களின் தட்டுப்பாடு தொடங்க மக்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளது உள்ளூர்
நிர்வாகங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன. எனவேதான் நெதர்லாந்து மற்றும் கிரீஸ் போன்ற
நாடுகள் சுற்றுலா வரி என தனி வரிச்சட்டத்தை அமல்படுத்தி டூரிஸ்டுகளை கட்டுப்படுத்தி
உள்ளூர் மக்களையும் காப்பாற்ற முனைந்துள்ளனர்.
சூழலா? வணிகமா?
நார்வே போன்ற நாடுகள் சுற்றுலாவாசிகளுக்கு வரி போடாமல்
அவர்களையே தன்னார்வலர்களாக்கி குப்பைகளை தூய்மையாக்கும் திட்டங்களை உருவாக்கியுள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட சீசன்களில் மட்டும்தான் கோபன்ஹேகன் நகரங்களிலுள்ள வாடகை கட்டிடங்களில்
சுற்றுலா பயணிகளை தங்கவைப்பது, நகர பள்ளிகளின் கழிவறை வசதிகளை சுற்றுலா பயணிகளுக்கு
வழங்குவது என புதுமையாக யோசித்து அதிதிகளை வரவேற்பது நார்வே ஸ்டைல். 1951 ஆம் ஆண்டு
வெனிஸ் நகரில் வாழ்ந்த ஒரு லட்சத்து 75 ஆயிரம் மக்களில் இன்று அங்கு வசிப்பவர்கள்
55 ஆயிரம் மட்டுமே. சுற்றுலாவை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டவர்களுக்கு அரசின் விதிகள்
பிடித்தமானவையாக இருக்காதுதான். ஆனால் நிர்வாகத்திற்கு அவர்களை தேர்ந்தெடுத்த மக்களின்
நிம்மதியான வளமான வாழ்க்கைக்கான பொறுப்பும் கூட அவர்களுடையதுதானே?
- ச.அன்பரசு
நன்றி: டைம் இதழ்