இளைஞர்கள் தற்கொலை!- அதிகரிக்க காரணம் என்ன?


தனிமை..தற்கொலை..  தவிக்கும் புதிய தலைமுறை-


எக்கச்சக்க எதிர்பார்ப்புகள், சவாலான போட்டி, வேலைவாய்ப்பு இழுபறி தகுதிகள், சமூகவலைதள கிண்டல்கள், தொழில்நுட்ப தனிமை என புதிய தலைமுறையினர் இதுவரை சந்திக்காத மன அழுத்த சூழல்களை சந்தித்து வருகின்றனர். புறக்கணிப்பு, தோல்விகளை இயல்பாக ஏற்க முடியாமல் மனச்சோர்வுக்கு ஆட்பட்டு தற்கொலை செய்யும் இளைஞர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. அண்மையில் சென்னை, பெங்களூரு, மும்பை ஆகிய பெருநகரங்களில் 1,400 மாணவர்களுக்கிடையே நடந்த ஆய்வில் 47% மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துள்ளதும், 59% பேர் தற்கொலை எண்ணம் மனதில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
என்ன காரணம்? பொருளாதார வேகத்தில் இளைஞர்களின் பிரச்னைகளை அவர்களின் பெற்றோர் உட்பட யாரும் காதுகொடுத்து கேட்காததுதான். “இளைஞர்கள் காதல் தோல்வி, எதிர்பார்த்த வேலை கிடைக்காதது ஆகியவற்றை வாழ்வின் இயல்பாக எடுத்துக்கொள்ள பழகாததுதான் சிக்கல். தகவல்தொழில்நுட்பம் அவர்களை சமூகத்திலிருந்து தனிமைப்படுத்துவதும் முக்கியக்காரணம்” என்கிறார் உளவியலாளரான மம்தா ஹரிஷ். உலகெங்கும் 15-45 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஏற்படும் இறப்புகளில் டாப் 3 காரணங்களில் தற்கொலையும் ஒன்று என உலக சுகாதார நிறுவன(WHO) அறிக்கை கூறுகிறது.

இளைஞர்களின் வளரிளம் பருவத்தின் பிரச்னைகளை தவிர்த்து அவர்களின் கல்வி குறித்து மட்டுமே பெற்றோர் சிந்திக்க, பேச விரும்புகிறார்கள் என்பதும் தற்கொலைகளின் அதிகரிப்பிற்கான முக்கியக்காரணம். “வேலைவாய்ப்பில் மட்டுமல்ல இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரு, தற்கொலைகளின் எண்ணிக்கையில் உலகிலேயே முன்னிலை வகிக்கிறது” என தகவல் தருகிறார் குழந்தை உரிமைகள் அறக்கட்டளை(CRT) நிறுவனர் நாகசிம்ம ராவ்.

பரபர வேலைகளை ஆபீசுடன் நிறுத்திவிட்டு வீட்டுக்குள் வரும்போது குழந்தைகளின் கல்விகுறித்தும், அவர்களின் எதிர்கால லட்சியங்கள் குறித்தும் பேசுவது அவர்களை மலர்ச்சியாக்கும். ஆனால் பெற்றோர்களின் அக்கறை பள்ளி/ கல்லூரிக்கு பணம் கட்டுவதிலும், ட்யூசனுக்கு அனுப்புவதிலும் மட்டும் இருக்கும்போது இணையத்தை தம் வழிகாட்டியாக தேர்ந்தெடுத்து இளைஞர்கள் வாழ்வை தொலைப்பதை எப்படி தவறு என்று கூறுவீர்கள்?

பெற்றோர்கள் என்ன செய்யலாம்? உங்கள் குழந்தைகளின் மனம், உடல் இரண்டின் நலன்களை கவனியுங்கள். மதிப்பெண்களை புறக்கணித்து ஆர்வத்தின் வழியே வேலையைத் தேர்ந்தெடுக்க ஊக்கப்படுத்துங்கள். மனதை அழுத்தும் பிரச்னைகளை வெளிப்படையாக பேச தேவையான நேரத்தை பிள்ளைகளுக்காக ஒதுக்குங்கள். காதல் தோல்வி, வாழ்வின் இறுதியல்ல என்பதை புரிய வைத்து வாழ்க்கை மீது நம்பிக்கை வர உதவுங்கள். இவை அனைத்தையும் கண்டிஷனாக செய்யாமல் நண்பராக செயல்படுத்த முயற்சித்தால் புதிய தலைமுறையின் வாழ்வு  உற்சாகமாக மலரும்.
    
- ச.அன்பரசு
நன்றி: டெக்கன் கிரானிக்கல் 


பிரபலமான இடுகைகள்