மதிய உணவு வழங்கும் அக்‌ஷய பாத்ரா!





17 லட்சம் மாணவர்களுக்கு அமுதூட்டும் அக்‌ஷய பாத்ரா! –

Image result for akshaya patra

உணவு சமைப்பது ஒன்றும் ராக்கெட் சயின்ஸ் கிடையாதுதான். ஆனால் பதினேழு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவை நேரம் தவறாமல் தரமாக சமைத்து பரிமாறும் பணி சாதாரணமா? பனிரெண்டு மாநிலங்களிலுள்ள 34 சமையலறைகள் மூலம் 14 ஆயிரத்து 314 பள்ளிகளிலுள்ள 17 லட்சத்து 61 ஆயிரத்து 734 மாணவர்களுக்கு அமுதூட்டுகிறது அக்‌ஷய பாத்ரா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம்.

2000 ஆம் ஆண்டில் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.சி. பக்தவேதாந்த ஸ்வாமி பிரபுபாதா, தெருநாய்களுடன் உணவுக்கு போராடும் சிறுகுழந்தைகளைப் பார்த்த கணம்தான் அக்‌ஷய பாத்ரா நிறுவனம் தொடங்கப்படுவதற்கான பிள்ளையார் சுழி. ஆயிரத்து ஐநூறு உணவுப் பொட்டலங்களுடன் தொடங்கிய உணவு வழங்கும் இந்நிறுவனத்தின் பணி இன்று அதிநவீன டெக்னாலஜி உதவியுடன் மேலும் பிரமாண்டமாகியுள்ளது. “சாம்பாரின் வெப்பம், பள்ளிகளுக்கு அனுப்பும் சமையல் பாத்திரங்கள், மாணவர்களின் விமர்சனம் என அனைத்திற்கும் ஒழுங்குமுறைப்படுத்த தொழில்நுட்பத்தை நாடுகிறோம்” என்கிறார் அக்‌ஷய பாத்ரா நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அஜய் கவிஸ்கர்.

மதிய உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குவதில் டெக்னாலஜிக்கென்ன வேலை? என பலரும் நினைக்கலாம். இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ், பிளாக்செயின், ஜிபிஎஸ், மைக்ரோசாஃப்டின் டைனமிக்ஸ் என அதிநவீன ஐடி கம்பெனிக்கான அத்தனை டெக் விஷயங்களிலும் அப்டேட்டாகி அக்‌ஷ்ய பாத்ரா உணவுவழங்கும் பணியை செய்து வருகிறது. ஒப்பீட்டளவில் இவர்களின் பெரும்பாலான சமையலறைகளில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவே. ஒரு மணிநேரத்தில் ஆயிரம் கிலோ காய்கறிகளை எந்திரம் வெட்டுவது, 120 கிலோ அரிசியை குக்கர்கள் வேகவைப்பது, கன்வேயர் பெல்ட் மூலம் உணவுகள் பரபரவென விநியோகத்திற்கு அனுப்புவது என எக்ஸ்பிரஸ் வேகத்தில் அசத்துகிறது அக்‌ஷய பாத்ரா.

டெக்னாலஜி நுட்பங்கள் டிரையல் அண்ட் எரர் என்ற நோக்கில் செயல்படுத்தப்பட்டாலும் அதன் பயன்கள் அபாரம். சமையலறை அமைக்கப்படும் இடத்தின் உள்ளூர் சுவையுடன் ரெடியாகும் உணவு மாணவர்களுக்கு சூடு குறையாமல் வழங்கப்படவேண்டும் என்பதில் அக்‌ஷய பாத்ரா நிறுவனம் உறுதியுடன் உள்ளது. அடுத்த பதினெட்டு மாதங்களில் பதினைந்து சமையலறைகளை (உத்தர்காண்ட், புதுச்சேரி உட்பட) அமைக்கும் லட்சியத்துடன் அக்‌ஷய பாத்ரா நிறுவனம், தீயாய் வேலை செய்து வருகிறது. பசிப்பிணி நீக்கும் அக்கறை வளரட்டும்!    
  
- ச.அன்பரசு
தொகுப்பு: கிரிங்கோ பாஸி