காற்றில் விரல்மொழி - சைகைமொழி வரலாறு
காற்றில் விரல்மொழி!
மொழி ஜோதிகா பள்ளிக் குழந்தைகளிடம்
விரல்களால் பேசுவாரே, அதேமொழிதான். சாதாரணமாக செய்திகளை மக்களுக்கு பேச்சு வழியாக கூறலாம்.
ஆனால் காது கேளாத, பேசமுடியாதவர்கள் இதனை எப்படி புரிந்துகொள்வார்கள்? இதற்கென அரசு
தொலைக்காட்சிகளில் சைகைமொழியில் செய்திகளை விளக்கி கூறுவது வழக்கம். இன்று இச்செய்திமுறை
பெரும்பாலான டிவிகளில் வழக்கொழிந்துவிட்டது.
காதுகேளாத, பேசமுடியாத குழந்தைகளுக்கென
நர்சரி முதல் நான்காவது வரையிலான சைகைமொழியை நொய்டா காதுகேளாதோர் சங்கம்(NDS), பதினைந்து
ஆண்டுகளாக பல்வேறு மாநில குழந்தைகளுக்கு கற்பித்து வருகிறது. தில்லியைச் சேர்ந்த ரூமா
ரோகா, இம்மையத்தை 2005 ஆம் ஆண்டு தொடங்கியபோது இருந்த மாணவர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து
75 ஆக அதிகரித்துள்ளது. இப்பள்ளியில் பணியாற்றுபவர்கள் 70 சதவிகிதம் பேர் மாற்றுத்திறனாளிகள்
என்பது குறிப்பிடத்தக்கது.
காதுகேளாதோரின் பிரச்னைகளுக்கு
இறுதியாக செவிசாய்த்த இந்திய அரசின் சமூநலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை, 2015 ஆம்
ஆண்டு சைகைமொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையத்தை(ISLRTC) தில்லியில் தொடங்கியது. இம்மையம்,
இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் சைகைமொழிக்கான முதல் அகராதியை(ISL) வெளியிட்டுள்ளது.
அகராதியிலுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைகைகளின் அர்த்தத்தை எளிமையாக புரிந்துகொண்டு
அவர்களுடன் உரையாடுவதற்கு அரசின் அகராதி உதவும் என்பதோடு இது மாற்றுத்திறனாளிகளுக்கான
முக்கியமான அங்கீகாரச்சாதனை கூடத்தான்.
அண்மையில் நிப்மேன் பவுண்டேஷனைச்
சேர்ந்த நிபுன் மல்கோத்ரா, உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்து சைகைமொழியை
23 வது அதிகாரப்பூர்வ மொழியாக மாற்ற உதவியுள்ளார். விரைவில் ப்ரெய்லியுடன் சைகைமொழியும்
பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவிருப்பது இதன் உடனடி நன்மை. கடந்த மாதம் இந்தியாவிலுள்ள
20 கல்வி போர்டுகள் ஒருங்கிணைந்து இதற்கான வரைவை உருவாக்கியுள்ளன. சைகைமொழி பேசினாலும்
குழந்தைகளுக்கு புத்திசாலித்தனத்தில் குறையொன்றும் இல்லை. நொய்டா காதுகேளாதோர் சங்கத்தில்
படித்த பலரும் கணினி, நிதி சார்ந்து படிப்புகளை படித்து தாஜ், ஆக்சிஸ் வங்கி என பல்வேறு
நிறுவனங்களில் நல்ல பணியில் இணைந்துள்ளதே இதற்கு சாட்சி. “காதுகேளாத குழந்தைகளை குறைகளை
சொல்லி திட்டாமல் அவர்களின் மொழியைக் கற்று உரையாடுவது அவர்களின் தன்னம்பிக்கையை உயர்த்துவதோடு
அவர்களது வாழ்வையும் மாற்றும்” என்கிறார் என்டிஎஸ் அமைப்பின் நிறுவனரான ரூமா ரோகா.
சிறப்பு குழந்தைகளான இவர்களை இயல்பாக்க
பெற்றோர்கள் சமூக அழுத்தத்தில் செய்யும் பெரும் தவறு, காது கேட்பதற்கான கருவிகளை வாங்கி
திணிப்பதுதான். “சைகைமொழித்திறன் சிறப்புக்குழந்தைகள் கற்க எளிதான ஒன்று. அவர்களை அம்மொழியைக்
கற்ககூடாது என அவர்களின் பெற்றோர்களே தடுப்பது வேதனையான ஒன்று. சைகைமொழியை கற்றுக்கொண்டு
அவர்களிடம் உரையாட முயற்சிக்காதது நமது தவறு; குழந்தைகளிடம் பிழையில்லை” என்கிறார்
காதுகேளாதோருக்காக இயங்கும் அமைப்பான சென்டம் ஜிஆர்ஓ நிறுவனரான ஆலிம் சந்தானி. விரல்களின்
மொழி இனி அனைவருக்கும் புரியும்!