நீதியின் குரல் - தொய்வான திரைக்கதையால் கேட்காமல் போய்விட்டது
பாவேஸ் ஜோசி(இந்தி)
இயக்கம் - விக்ரமாதித்ய மோட்வானே
இசை - அமித் திரிவேதி
மும்பையில் நடைபெறும் குடிநீர் ஊழலை வெளிப்படுத்தும் மூன்று இளைஞர்களின் வாழ்க்கைதான் கதைக்களம். இதில் நாயகன் சிக்கு என்கிற (சிக்கந்தர் கண்ணா) - ஹர்ஷ்வர்த்தன் கபூர். பாவேஷ் ஜோஸி (பிரியான்சு பெய்னூலி), ரஜத் (ஆசிஷ் வர்மா)
உண்மையில் கதை நாயகன் பாவேஷ் ஜோஷிதான். அவன்தான் ஊழலுக்கு எதிராக போராடி தன் உயிரைக் கொடுத்து சிக்குவின் குற்றவுணர்வைத் தூண்டுகிறான். சிக்கு அவன் வழித்தடத்தைப் பின்பற்றி என்ன செய்தான் என்பதே கதை.
இந்தியாவின் ஊழல் நிரம்பிய அரசியல், முனிசிபாலிட்டியில் நடைபெறும் களங்கங்கள், அதிகாரத்திற்கு பணிந்து போகும் காவல்துறை, தன் தொழில் எதிரிகளை அழிக்க காவல்துறையைப் பயன்படுத்தும் துரோகம், நட்பில் சுயநலம் என பல்வேறு விஷயங்களைப் பேசுகிற படம்தான். ஆனால் மோசமான திரைக்கதையால் கதை அலைபாய்கிறது.
படம் தொடங்குவது கிளைமேக்ஸில் இருந்துதான். நாயகனை கத்தியால் குத்தி சூழ்ந்து நின்று கொத்து பரோட்டா போடும் காட்சியிலிருந்துதான் படம் தொடங்குகிறது. ஐடியில் வேலை செய்யும் நண்பர்கள்தான். அதில் பாவேஷூக்கு இருக்கும் சமூக அக்கறை மற்ற இருவருக்கும் கிடையாது. ஹோட்டலில் அறையில் அவன் பேசும்போதெல்லாம் கிண்டல் செய்யும் சிக்கு, ரஜத் ஆகியோர் இன்சாஃப் டிவி எனும் யூட்யூப் சேனல் தொடங்கும்போதும் கூட அதனை சீரியசாக நினைக்கவில்லை.
ஆனால் அதற்கான விளைவுகள் மெல்ல தெரிய வரும்போதுதான் நிலைமை மாறுகிறது. முதலில் சிறுநீர் கழிப்பவர்களை மிரட்டுவது, ஒன்வே பயணிகளை அச்சுறுத்துவது என காகித கவர்களை முகத்தில் போட்டு வீடியோ எடுக்கிறார்கள். அப்போது சிக்குவிற்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. உடனே அதற்கு அப்ளை செய்கிறான். ஆனால் போலீசில் மாமூல் கேட்கிறார்கள். சிக்கு முதலில் தரமாட்டேன் என்பவன், அலைச்சல் தாளமுடியாமல் ஒப்புக்கொள்கிறான். அதை ஜோஸி கிண்டல் செய்து பேசுகிறான். அப்போது நடக்கும் கைகலப்பில் சிக்கு தாக்கப்படுகிறான். அப்போது ஜோஸி, குடிநீர் ஊழல் தொடர்பாக வேலை செய்து வருகிறான். அதுதொடர்பான வீடியோக்களில் முகம் மறைத்து பல்வேறு தகவல்களை பதிவு செய்கின்றனர். அப்போது நடக்கும் நண்பர்களுக்கிடையேயான சண்டை விஷயத்தை மேலும் சீரியசாக்குகிறது. சிக்குவின் ஈகோ - பொறுக்கமுடியாத கோபத்தில் அவன் செய்யும் வேலையால் ஜோஸி இறந்துவிடுகிறான்.
அமெரிக்கா செல்வதையும் தள்ளிவைத்துவிட்டு சிக்கு தன் நண்பனுக்காக என்ன செய்தார் என்பதுதான் கிளைமேக்ஸ். பாட்டீல் மற்றும் ராணா(இயக்குநர் நிஷிகாந்த் காமத்) ஆகியோர் வில்லன்கள். வேறுபாடு இல்லாத நடிப்பு அவ்வளவுதான். நடிக்கும் பெரிய வாய்ப்பு ஏதும் கிடையாது.
சூப்பர் ஹீரோ என டைட்டிலில் போட்டாலும் அதற்கான எந்த அடையாளமும் படத்தில் கிடையாது. வில்லன்களை விட அதிக அடி உதைகளை சிக்குதான் வாங்குகிறார். சண்டைப் பயிற்சி, சேசிங், தற்காப்பு கலை பயிற்சி ஆகியவை நன்றாக இருக்கிறது. அனைத்து உணர்வுகளையும் மனதுக்குள் கடத்துகிறது. அமித் திரிவேதியின் இசை.
படம் பார்க்கும்போது உங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் ஏற்படாது என்பதால், படத்தை பிளே செய்துவிட்டு பாஸ் பட்டன் அழுத்தாமல் பாத்ரூம் போகலாம். சிப்ஸ் பாக்கெட்டை கத்தரிக்கோல் மூலம் கட் செய்யுங்கள். அம்மா மாவு வாங்கி வரச்சொன்னால் அதற்கு கூட போய்விட்டு வரலாம். காரணம், படத்தை அதற்கப்புறம் பார்த்தால் கூட புரியும் என்பதுதான். இயக்குநரின் இந்த திறமைக்காகவே படத்தை நீங்கள் பார்க்கலாம்.
-கோமாளிமேடை டீம்
நன்றி: